Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தினமும் 1 லட்சம் பேருக்கு இலவச உணவு - அமிர்தசரஸில் உலகின் மிகப் பெரிய கிச்சன்!

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இயங்கும் உலகின் மிகப் பெரிய சமையலறை மூலம் தினமும் 1 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்குவதன் பின்புலம்.

தினமும் 1 லட்சம் பேருக்கு இலவச உணவு - அமிர்தசரஸில் உலகின் மிகப் பெரிய கிச்சன்!

Saturday January 06, 2024 , 3 min Read

‘தி கோல்டன் டெம்பிள்’ (The Golden Temple) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ‘பொற்கோயில்’ அமிர்தசரஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற சீக்கிய வழிபாட்டுத் தலமாகும்.

இதன் அருமை பெருமைகள் பலவென்றாலும் பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் அதிகம் அறியப்படாத விஷயம், என்னவெனில் இந்தக் கோயிலில் ‘லங்கர்’ என்ற சமையலறை உள்ளது. இதில்தான் தினமும் சுமார் 1 லட்சம் பேர் வயிற்றுப் பசியாற இலவச உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டு வருகிறது என்பதே. இது முதன்முதலில் சீக்கிய மதகுரு குருநானக் என்பவரால் தொடங்கப்பட்டது.

இந்தச் சமையலறை சமத்துவம், மத நல்லிணக்கத்தின் குறியீடாகத் திகழ்கிறது. மதம், சாதி, இன, மொழி வேறுபாடின்றி தினமும் இங்கு சுமார் 1 லட்சம் பேருக்கான உணவு சமைக்கப்பட்டு பசியாற பரிமாறப்பட்டு வருகின்றது. விடுமுறை நாட்களில் 1 லட்சம் பேர் என்பது 2 லட்சம் பேர்களாக இரட்டிப்பாகும்.

லங்கர் என்ற பெர்சிய சொல்லுக்கு யாத்திரிகர்களுக்கு உணவளிக்குமிடம் என்று பொருள். இது 15-ஆம் நூற்றாண்டில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

இது, சாதி - மதத்தால் பிளவுபட்ட சமூகத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு சீக்கிய கோயிலும் (குருத்வாரா) மூன்றாவது சீக்கிய குருவான குரு அமர் தாஸால் மேலும் நிறுவனமயமாக்கப்பட்டது.

இந்த சமபந்தி போஜனத்தின் மூலம் அனைத்து பாலினங்கள், சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றாக அமர்ந்து உணவைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது. இதன்மூலம் சமூகம் மற்றும் சமத்துவ உணர்வை வளர்க்கப்படுகிறது.

golden temple

5,000 கி. கோதுமை, 1,800 கி. பருப்பு, 1,400 கி. அரிசி!

லங்கர் என்ற இந்த சமையலறை இந்த மகத்தான சமையலறை 4,645 சதுர மீட்டர் பரப்பளவில் 2 தளங்களில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் இயங்குகிறது.

இது சமூக முயற்சி மற்றும் லாஜிஸ்டிக்சின் அற்புதமாகும். சேவாதார் என்று அழைக்கப்படும் 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இங்கு 24 மணி நேரமும் உணவு தயாரித்து வருகின்றனர்.

சைவ உணவுகளில் பொதுவாக பருப்பு சூப், காய்கறிகள், பாஸ்மதி அரிசி மற்றும் அரிசி புட்டு ஆகியவை அடங்கும். இந்த உணவுகளைத் தயாரிக்க, தினசரி 5,000 கிலோ கோதுமை, 1,800 கிலோ பருப்பு, மற்றும் 1,400 கிலோ அரிசி உட்பட, பெரிய அளவிலான பொருட்கள் தேவைப்படுகின்றன.

பல்வேறு பிரிவுகளில் தன்னார்வலர்கள் பணிபுரியும் உலகின் மிகப் பெரிய இந்தச் சமையலறை என்பது 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்குவதாகும். சிலர் பெரிய பெரிய பாத்திரங்களில் உணவை சமைப்பதில் ஈடுபட்டுள்ளனர்; மற்றவர்கள் பெரிய அளவில் தேநீர் தயாரிப்பிலும் பலர் காய்கறிகள் நறுக்குவதிலும் மேலும் பலர் பாத்திரங்களை சுத்தம் செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரிய பெரிய செவ்வக வடிவ அடுப்புகளில் சப்பாத்திகள் சுடப்பட்ட வண்ணம் இருந்து கொண்டேயிருக்கும். இந்த வேலையில் பல பெண்களும் ஆண்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

golden temple

சாப்பிடும் இடத்தில் ஒரே நேரத்தில் 5,000 பேர் அமர்ந்து சாப்பிடலாம். இந்த இடம் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் சுத்தம் செய்யப்படுகின்றது. ஏனெனில், நாளொன்றுகு சுமார் 20 சமபந்தி போஜனங்கள் நடைபெறுவதால் சமைப்பதும் பரிமாறுவதும் தயாரிப்பதும் சுத்தம் செய்வதும் மீண்டும் மீண்டும் இடையறா தொடர் நிகழ்வாக பெரிய அளவில் நடைபெற்று வருகின்றது.

யாத்ரிகர்கள் அல்லது பக்தர்களின் பசியை போக்க தானியங்கி சப்பாத்தி தயாரிப்பு எந்திரமும் மூன்று உள்ளது. இந்த எந்திரம் ஒவ்வொன்றும் ஒரு மணிக்கு 4,000 சப்பாத்திகளை தயாரித்து விடும்.

தன்னலமற்ற சேவை

இந்த லங்கர் கிச்சன் சீக்கிய தர்மமான தன்னலமற்ற சேவையைக் குறிக்கிறது. இதோடு மதநல்லிணக்கம், மத ஒற்றுமையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இங்கு சாதி, மதப்பிரிவினைகள் ஏழை, பணக்காரன் என்ற வர்க்கப் பிரிவினைகள் கிடையாது.

இந்த மதநல்லிணக்க, சமத்துவ உணவுப்பரிமாறலுக்கு 300 மில்லியன் ரூபாய் ஆண்டுக்கு செல்வாகிறது. இதற்காக பலரும் மனமுவந்து நன்கொடைகளை வாரி வழங்குகின்றனர். சீக்கிய சமூகத்தின் பங்களிப்புகள் மூலம் இந்த நிதி திரட்டப்படுகிறது. அவர்கள் தங்கள் வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை சமூக நலனுக்காக நன்கொடையாக வழங்க முன் வருகிறார்கள்.
golden temple

முடிவில், பொற்கோவிலில் உள்ள ‘லங்கர்’ உலகின் மிகப் பெரிய இலவச சமையலறை மட்டுமல்ல, சமத்துவம், சமூக சேவை மற்றும் மத நல்லிணக்கத்தின் சக்திவாய்ந்த சின்னமாகவும் உள்ளது. இது சீக்கிய மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்துவதோடு உலகளாவிய மனித நேயத்தின் சின்னமாகவும் தன்னை முன்னிறுத்தி வருகிறது.

உலகில் வேறு எந்த கோயிலிலும் இவ்வளவு பெரிய சமபந்தி போஜனம் நடைபெறுவதில்லை என்பதால் கோல்டன் டெம்பிள் உண்மையில் கோல்டுதான்!

மூலம்: Nucleus_AI


Edited by Induja Raghunathan