ஸ்மார்ட் போனுக்கு-1கி இலவசம், திருமண பரிசு, திருட்டு பயம்: நாளுக்கு நாள் மவுசு கூடிக் கொண்டே போகும் வெங்காயம்!
வெங்காயம்.. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக டிரெண்டிங்கில் உள்ள பெயர் இது தான். வட மாநிலங்களில் வெங்காய உற்பத்தி பாதிப்பால், இந்தியா முழுவதுமே தாறுமாறாக எகிறிக் கிடக்கிறது வெங்காய விலை.
தங்கம், பெட்ரோல் விலை நிலவரத்தைப் போல், தினமும் வெங்காய விலை நிலவரமும் மாறி வருகிறது. இருபது, முப்பது ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம் தற்போது கிலோ இருநூறு ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்களைப் போலவே உணவகம் நடத்தும் வியாபாரிகளும் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறார்கள்.
காரணம் நம் உணவு முறையில் முக்கியப் பங்கு வகிப்பது வெங்காயம். சைவ உணவாகட்டும், அசைவ உணவாகட்டும் வெங்காயம் இல்லாமல் அந்த உணவு ருசிப்பதில்லை. அதிலும் குறிப்பாக பிரியாணி தயாரிக்க மட்டுமின்றி, அதற்கு தொட்டுக் கொள்ளவும் தயிர் வெங்காயம் சாப்பிட்டு பழகி விட்டோம் நாம்.
அதனால் தான் இம்முறை வெங்காய விலை உயர்வு உணவகங்களை பெரிதும் பாதித்துள்ளது.
பிரியாணிக் கடைகள் மூடல்
திருப்பத்துார், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்கள் பிரியாணிக்கு பேர் போனவை. இங்கு மட்டும் சுமார் 1,200க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் உள்ளன. அதில், சுமார் 5,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வெங்காய விலை உயர்வால் இந்த உணவகங்களில் பெரும்பாலும் வெங்காய தயிர் பச்சடியை நிறுத்தி விட்டனர். அதோடு பிரியாணி விலையும் உயர்த்தப்பட்டு விட்டது. இந்த விலை உயர்வால் விற்பனை குறைந்து விட்டது.
தினமும், 1 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்த நிலையில், தற்போது, 40 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய்க்குதான் விற்பனை நடக்கிறது. இதன் எதிரொலியாக 450 பிரியாணி கடைகள் மூடப்பட்டுள்ளன. பிரியாணி கடைகளில் வேலை செய்யும், 2,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெங்காய வடை, போண்டாக்கள் போன்றவை தயாரிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
வினோதத் திருட்டு
எந்தவொரு பொருளுக்கும் கிராக்கி கூடும் போது, அது திருடப்படுவதும் வாடிக்கை தானே. அந்தவகையில் தற்போது தங்கம், வெள்ளியைப் போல் வெங்காயத்தையும் திருடர்கள் குறி வைக்கத் தொடங்கியுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தகைய திருட்டில் ஈடுபடுபவர்கள் வழக்கமான திருடர்கள் அல்ல, பெரும்பாலும் சாதாரண மக்கள் தான்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி மார்க்கெட்டில் ஒருவர் இரண்டு வெங்காய மூட்டைகளைத் திருடிய போது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். அவரை தூண் ஒன்றில் கட்டிப் போட்டு வியாரிபாரிகள் அடித்துள்ளனர். பின்னர் போலீசார் வசம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
இங்கே இப்படியென்றால் மதுரையில் வேறு மாதிரி. பல்பொருள் அங்காடி ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், இரண்டு கிலோ வெங்காயம் திருடியதோடு, கடையின் பெண் ஊழியரிடம் பேச்சுக்கொடுத்து 1500 ரூபாய் பணத்தை ஏமாற்றி வாங்கிச் சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வெங்காயத் திருடனைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரியாணி செய்வதற்காக அந்நபர் இரண்டு கிலோ வெங்காயத்தைத் திருடிச் சென்றதாகக் கூறியுள்ளார்.
இதெல்லாம் சின்ன லெவல் வெங்காயத் திருட்டு என்றால், இனி பார்க்கப் போவதெல்லாம் பெரிய வெங்காயம் சைஸ் திருட்டுகள்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலையத்தில் வயலில் விதைக்க வைத்திருந்த 350 கிலோ சின்ன விதை வெங்காய மூட்டைகளை யாரோ திருடிச் சென்றுவிட்டனர் என்றுகூறி போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்கிறார் விவசாயி முத்துக்கிருஷ்ணன்.
மத்திய பிரதேசத்திலோ இதற்கெல்லாம் ஒரு படி மேலே போல், சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெங்காயங்களை வயலில் இருந்து நேரடியாக அறுவடை செய்து திருடிச் சென்றுள்ளனர் சில மர்ம நபர்கள். இரவோடு இரவாக இந்த அறுவடை நடத்தி முடித்துள்ளனர் திருடர்கள்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், காய்கறி கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பணத்தை விட்டுவிட்டு, 50 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே மாநிலத்தில் வெங்காயம் ஏற்றி கொண்டு வந்த லாரியை மடக்கி கடத்தி சென்று, அதில் இருந்த 20 லட்சம் மதிப்புள்ள வெங்காயங்களை மர்மநபர்கள் திருடிய சம்பவமும் நடந்துள்ளது. கொள்ளையர்கள் லாரியை அப்படியே விட்டு விட்டு, வெங்காயத்தை மட்டும் திருடிச் சென்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு
நாளுக்கு நாள் வெங்காயத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் பீதிக்கு ஆளாகியுள்ளனர். தங்கள் கைவசம் உள்ள வெங்காயங்களைப் பாதுகாக்க அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல இடங்களில் வெங்காய வயல்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வெங்காய விவசாயிகள் ஆயுதங்கள் ஏந்தி வெங்காய பயிர் நிலத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
முன்பெல்லாம் எலி, பறவைகள் தொல்லைக்கு பயந்த விவசாயிகள், இப்போது திருடர்களுக்குப் பயந்து 24 மணி நேரமும் பயிர் நிலத்தில் கம்பு மற்றும் அரிவாள் ஆகியவற்றுடன் பல இடங்களில் நின்று பாதுகாத்து வருகின்றனர். கொட்டும் மழையிலும், கையில் தடி போன்றவற்றுடன் விவசாயிகள் வெங்காய வயல்களை பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெங்காய விளை நிலங்களுக்கு மட்டுமின்றி, வெங்காய குடோன்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென தற்போது தனியாகவும் பாதுகாவலர்களை பணியில் அமர்த்தி வருகின்றனர் விவசாயிகளும், வியாபாரிகளும். சென்னையிலும் கூட தொப்பி வாப்பா என்ற பிரியாணிக் கடையில் வெங்காயங்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் தேவை என்ற விளம்பரம் சமூகவலைதளங்களில் வைரலானது.
வெங்காயத்திற்குத் தான் பாதுகாப்பில்லை என்றால், அதனை விற்பவர்களுக்கும் பாதுகாப்பு இருப்பதில்லை. பீகார் மாநில கூட்டுறவு சங்கத்தின் சார்பாக மலிவு விலையில் மக்களுக்கு வெங்காயத்தை விற்பனை செய்த அலுவலர்கள், முன்னெச்சரிக்கையாக தலைக்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.
காரணம் இந்த மலிவு விலை வெங்காயத்திற்கு மக்களிடையே நல்ல ஆதரவு கிடைத்துள்ள போதும், சிலர் வெங்காயம் கிடைக்காத ஆத்திரத்தில் கல் எறி சம்பவங்களில் ஈடுபடுகின்றனராம். அதனாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிறார்கள் அந்த ஊழியர்கள்.
ஆஃபரோ ஆஃபர்
இப்படி வெங்காயத்தை நினைத்து நாடே அழுது கொண்டிருக்க, வழக்கம் போல் சில புத்திசாலி வியாபாரிகள் வெங்காயத்தை வைத்து தங்கள் தொழிலில் லாபம் கண்டு வருகின்றனர். நேசமணியையே விட்டு வைக்காதவர்கள் வெங்காயத்தை மட்டும் சும்மா விட்டு விடுவார்களா?
விலை உயர்ந்த வெங்காயத்தை வாங்க வைக்க இந்த கேரள வியாபாரி வித்தியாசமான யுக்தியைக் கையாண்டுள்ளார். அதாவது, பெரிய வெங்காயம் வாங்கினால் ஒரு டி-சர்ட் வழங்கப்படும் என அறிவித்தார் கேரளாவைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி பிரகாசன்.
400 ரூபாய் கொடுத்து 5 கிலோ பெரிய வெங்காயம் வாங்கினால் ஒரு டி-சர்ட் வழங்கப்படும் என அவர் அறிவித்தார். அவர் எதிர்பார்த்த மாதிரியே 2 நாட்களில் 1500 கிலோ பெரிய வெங்காயம் விற்பனையானது.
“இது போல் விலை உயரும்போது வாடிக்கையாளர்கள் மனதை சாந்தப்படுத்த சில இலவசப் பொருட்களை வழங்கினால் விற்பனையும் அதிகரிக்கும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைவார்கள்,” என்கிறார் பிரகாசன்.
காலத்திற்கு தகுந்தாற்போல் செயல்படுவதில் வல்லவரான பிரகாசன், இதற்கு முன்னர் லாட்டரி சீட்டு, கூடுதல் காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி தனது விற்பனையை உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் செல்போன் கடை ஒன்றில், ஸ்மார்ட் ஃபோன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என அறிவித்து, அதை செயல்படுத்தியும் வருகின்றனர்.
பரிசாகும் வெங்காயம்
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு வெங்காயத்தை பரிசாக அளிக்கத் தொடங்கியுள்ளனர் மக்கள்.
கடலூரில் சாகுல்-சப்ரினா என்ற மணமக்கள் திருமணத்தில் அவர்களுக்கு நண்பர்கள் வெங்காயத்தை பரிசாக அளித்துள்ளனர். மலர்களால் செய்யப்பட்டது போல் வெங்காயத்தை பொக்கேவாக செய்து தந்து அசத்தியுள்ளனர் அவர்கள்.
இது வேற லெவல்
ஆந்திர மாநிலம் திருப்பதியில், உழவர் சந்தையொன்றில் மானிய விலையில் அதாவது ரூ. 25க்கு வெங்காயம் வாங்க, மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த விசயம் தெரிய வந்துள்ளது.
இப்போது எதற்கெடுத்தாலும் ஆதார் கட்டாயம் என்பதால், எங்கே ஆதார் இல்லையென்றால் வெங்காயம் கிடைக்காதோ என்ற பயத்தில், மக்கள் ஆதார் அட்டையுடன் வரிசையில் காத்திருந்துள்ளனர். பின்னர், வெங்காயம் வாங்க ஆதார் அட்டை தேவை இல்லை என்று உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரணாசியில் உள்ள சில அடகு கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளை வாங்கிக் கொண்டு வெங்காயத்தை தரும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. வெங்காய விலை உயர்வுக்கான எதிர்ப்பை பதிவு செய்யவே இப்படி நூதன போராட்டத்தை நடத்துகின்றனர் சமாஜ்வாதி கட்சியினர். சில இடங்களில் வெங்காயத்தை இலவசமாகத் தந்தும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக உரிக்க உரிக்க ஒண்ணுமில்லாத வெங்காயம் இன்று நாடு முழுவதும் பல்வேறு வகையில் டிரெண்டிங்காகியுள்ளது.