அகதி, வறுமை, போர் சூழலைக் கடந்து ஸ்டார் அன குரோஷிய கால்பந்து வீரர் லூகா மோட்ரிக்!
உள்நாட்டுப் போர் காரணமாக 6 வயதில் அகதியான லூகா மோட்ரிக் 37 வயதில் குரேஷிய கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். சவால்களை சமாளித்து சாதனை படைத்துள்ள இந்தச் சாமானியர் பலருக்கும் உந்துசக்தியாகத் திகழ்கிறார்.
Fifa 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்தத் திருவிழாவில் கோப்பையை வென்று மகுடம் சூடப் போகும் நாடு எது என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன உலக நாடுகள்.
அசாத்திய விளையாட்டுத் திறனால் குரோஷியாவை (Croatia) அரையிறுதி வரை அழைத்துச் சென்றிருக்கின்றனர் அந்நாட்டு விளையாட்டு வீரர்கள். குரோஷியா கால்பந்து அணியின் ‘லக்கி லூக்’ என்று செல்லமாக அழைக்கப்படும் 'லூகா மோட்ரிக்'கின் (Luka Modric) வாழ்க்கைப் பயணம் விளையாட்டில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடமாகும்.
இன்று சர்வதேச கால்பந்து ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திம் என்கிற அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கும் லூகா மோட்ரிக் சிறு கடந்து வந்த பாதை கரடு முரடானது.
யார் இந்த லூகா மோட்ரிக்?
மத்திய ஐரோப்பாவும் மத்தியதரைக்கடல் பகுதியும் பால்க்கனும் கூடும் இடத்தில் அமைந்துள்ள சிறு நாடு குரோஷியா. வெள்ளிப்பனியை போர்த்தியை போர்த்தியது போல காட்சி தரும் வெல்பிட் மலைப்பகுதியை ஒட்டி இருந்த மாட்ரிச் என்கிற சிறு கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் லூகா மோட்ரிச்.
1985ல் பிறந்த மோட்ரிச்சின் குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தது. இவருடைய பெற்றோர் இரவு பகல் பாராமல் தொழிற்சாலையில் பணியாற்றியதால் முழுக்க முழுக்க அவருடைய தாத்தாவான லூகாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்தார் மோட்ரிச்.
ஒருநாள் மலைமேல் கால்நடை மேய்க்கச் சென்றவரை செர்பிய படைகள் கொன்றுவிட்டுச் செல்ல சிறுவனாக இருந்த மோட்ரிச்சிற்கு அந்தச் சம்பவம் அழியா நினைவாகிவிட்டது. தொடர்ந்து உள்நாட்டுப் போர் தீவிரமானதால் அவர்களின் வீடும் தீக்கு இரையானது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மோட்ரிச், அவருடைய பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகள் மாட்ரிச்சில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்த சதார் நகரில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.
அப்போது மோட்ரிச்சிற்கு வயது 6, தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவருக்கு அவருடைய அகால மரணம் சோகத்தைத் தர அவரின் நினைவாக மோட்ரிச் தன்னுடைய பெயருடன் லூகா என்பதை சேர்த்துக் கொண்டார்.
குழந்தைப்பருவம் முதல் கால்பந்து ஆர்வம்
சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த மோட்ரிச், எப்போதுமே பந்தை உதைத்துக் கொண்டே இருப்பாராம். மின்சாரம், தண்ணீர் இல்லை, எப்போதும் கிரைன்ட்களின் இரைச்சல், துப்பாக்கி தோட்டாக்கள், கன்னிவெடிகளின் சத்தம் என இந்த அசாதாரண சூழல் மோட்ரிக்கின் குழந்தைப் பருவ அன்றாடங்களில் ஒன்றாக கலந்து போயிருந்தது.
சத்ராவின் விடுதி ஒன்றில் அகதியாகத் தஞ்சமடைந்த போதும் அங்கிருந்த கார் நிறுத்தும் இடத்தில் கால்பந்தை உதைத்து விளையாடிக் கொண்டே இருந்தவரைப் பார்த்து சதார் நகரக் கால்பந்து அணியின் பயிற்சியாளர் மோட்ரிக்கிற்கு பயிற்சி தரத் தொடங்கினார்.
சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் ஆர்வம் இருந்தாலும், எலும்பும் தோலுமான தோற்றத்தால் பலரின் கேளிகளுக்கும் கிண்டலுக்கும் ஆளானார். இளைஞர் கால்பந்து வீரர்கள் தேர்வில் நிராகரிக்கப்பட்டாலும் தன்னுடைய திறமையால் அனைவரின் பார்வையும் தன்மீது விழச் செய்தார் மோட்ரிக். 2002ம் ஆண்டு ‘டைனமோ ஸக்ரப்’ அணியில் சேர்ந்து விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அப்போது அவருக்கு வயது 16. சதார் இளைஞர்கள் அணியில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியதன் விளைவாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
குட்டி நாடான குரோஷியா, கால்பந்து விளையாட்டை தங்களின் கவுரமாக நினைக்கிறது. 1991ம் ஆண்டு யுகோஸ்லோவியாவிடமிருந்து விடுதலை பெற்ற இந்த நாட்டின் தலைநகரம் ஸக்ரப். ‘டைனமோ’ ஸக்ரப் என்கிற பெயரில் கால்பந்து அணியை வைத்திருந்த குரோஷியா 1998ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று ஜாம்பவானான அர்ஜென்டினா அணிக்கு நெருக்கடி கொடுத்து திறமையாக விளையாடியதன் விளைவாக ரசிகர்களின் பார்வை இந்த குட்டி நாட்டு வீரர்களின் பக்கம் திரும்பியது.
இப்படி கால்பந்தாட்டத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை சிறுவயது முதலே பார்த்து வளர்ந்த மோட்ரிச்சிற்கு வறுமை, போர்ச்சூழல் என எப்படி இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து வாழ்வில் சிறந்த கால்பந்தாட்ட வீரராக முன்னேற வேண்டும் என்கிற இலக்கில் இருந்து மட்டும் பின்வாங்கவே இல்லை.
தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி 2003 மற்றும் 2004ல் தான் அங்கம் வகித்த கால்பந்து அணிகள் சார்பில் விளையாடிய 40 போட்டிகளில் 12 கோல்களை அடித்து வெற்றிக்கான ருசியை அனுபவிக்கத் தொடங்கினார் மோட்ரிக், 2005ம் ஆண்டில் டைனமோ அணியின் வீரராக அறிமுகம் செய்யப்பட்டார்.
மூத்த வீரர் என்கிற அடிப்படையில் மோட்ரிக் மொத்தம் விளையாடிய 31 போட்டிகளில் 7 கோல்களை அடித்து அணி லீக் பட்டத்தை வெல்வதற்கு உதவியாக இருந்தார். தொடர்ந்து அடுத்த இரண்டு தொடர்களிலும் கூட இரண்டு லீக் சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்வதற்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய அணிக்கு சிறந்த பங்களிப்பை செய்தார்.
டைனமோவில் இரண்டாவது சீசனின் போது ‘Prva HNL ஆண்டின் சிறந்த வீரர்’ என்கிற விருதைக் கொடுத்து கவுரவிக்கப்பட்டார். நான்கு தொடர்களிலும் டைனமோ அணிக்காக விளையாடியதில் 31 கோல்களை அடித்து சாதனை படைத்தார்.
2007 குரோஷியா கோப்பையை வெல்வதற்காக தன்னுடைய அணியை சிறப்பாக வழிநடத்தினார் மோட்ரிக். 2008ம் ஆண்டில் தோட்டன்ஹம் ஹாட்ஸ்பருடன் 16.5 மில்லியன் யுகே பவுண்ட்களுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தோட்டடின்ஹமிற்காக விளையாடிய நான்கு தொடர்களில் 13 கோல்களை அடித்து அசத்தினார்.
அணி மாறிய லூகா மாட்ரிக்
2012ம் ஆண்டில் லூகா ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார், அவருடைய வாழ்வில் வெற்றிக்கான திருப்புமுனையை ஏற்படுத்திய முடிவு அதுவாகும். 2013-2014 UCL தொடரில் அசாத்திய விளையாட்டிய வெளிப்படுத்திய மோட்ரிக், ‘Squad of the season’ஆக தேர்வு செய்யப்பட்டார்.
2016 முதல் 2019 வரை தொடர்ச்சியான 3 முறை தன்னுடைய அணி UCL பட்டத்தை வெல்வதற்காக அணியை சிறப்பாக வழிநடத்தினார். இந்த மூன்றுத் தொடர்களிலும் கூட மோட்ரிக் ‘Squad of the season’ஆக தேர்வு செய்யப்பட்டார்.
2016ல் லா லிகாஸின் சிறந்த midfielder மற்றும் 2017ல் 18ல் UEFA கிளப்கின் சிறந்த மிட்பீல்டர் விருதையும் பெற்றுள்ளார். UEFAவின் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் என்கிற கவுரவத்தைப் பெற்ற முதல் குரோஷிய வீரர் என்ற பெருமையை 2018ல் பெற்றார்.
வெற்றியை நோக்கிய வெறித்தனமான விளையாட்டினை வெளிப்படுத்தியமைக்காக 2019ல் கால்பந்தின் உயரிய அங்கீகாரமான Ballon d’or பட்டம் கொடுத்து கவுரவிக்கப்பட்டார் மோட்ரிக்.
37 வயதாகும் லூகா மோட்ரிக், 2006ம் ஆண்டு முதல் குரேஷிய கால்பந்து அணியின் அங்கமாக இருக்கிறார். 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தன்னுடைய தேசிய அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் மோட்ரிக், இதற்காக சிறந்த ஆட்ட நாயகன் விருதான ‘கோல்டன் பால்’ விருதையும் அவர் பெற்றார்.
இப்படி சாதனைகள் விருதுகளின் உச்சத்தில் இருக்கும் மோட்ரிக் வசதியான பின்புலத்தையோ வளமான வாழ்க்கையையோ கொண்டவரல்ல. சொந்த ஊரில் இருந்து துரத்தியடிக்கப்பட்டவர் வாழ்வில் எப்படியாவது ஜெயித்து தான் பிறந்த ஊருக்கு பெருமை தேடித் தர வேண்டும் என்கிற நம்பிக்கையை கையில் பிடித்துக் கொண்டு அகதிச் சிறுவன் என்று பலரும் செய்த கேலிகளுக்குச் செவி கொடுக்காமல் இலக்கில் உறுதியாக இருந்ததால் இன்று உலக கால்பந்து ரசிகர்களின் நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
“போர் என்னை உறுதிபடுத்தியது, நான் அந்த நினைவுகளை என்னுடன் சுமக்க விரும்பவில்லை. ஆனால், அதை அப்படியே மறந்து போய்விடவும் இல்லை, போரின் வடுக்கள் என்னுடைய கடினமான மனப் போராட்டங்களை தவிடுபொடியாக்க உதவியது,” என்று கூறி இருக்கிறார் லூகா மோட்ரிக்.
தோட்டக்காரரின் மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் பிரபல கால்பந்து சூப்பர் ஸ்டார் ஆன கதை!