Amazon-ல் உங்கள் தயாரிப்பை விற்பனை செய்ய விற்பனையாளர் ஆவது எப்படி?
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை சந்தையான Amazon, விற்பனை ஆர்வம் உள்ள எவரும் தங்கள் வசம் உள்ள பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய, எளிய பதிவு முறை மூலம் வழி செய்கிறது.
சொந்தமாக வர்த்தகம் துவங்கி சம்பாதிக்கும் விருப்பம் இருக்கிறது, ஆனால் இதை எப்படிச் செய்வது எனத்தெரியாமல் தடுமாறுகிறீர்களா? இ-காமரஸ் நிறுவனமான அமேசான் வாயிலாக நீங்கள் விற்பனையாளராகி சம்பாதிப்பது எளிது என்பது உங்களுக்குத்தெரியுமா?
இதற்கு முதலில், இ-காமர்ஸ் சந்தையான அமேசானில் விற்பனையாளராக பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக அமேசான் தளத்தில் உங்கள் வர்த்தகத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு முன், முதலில் வர்த்தத்தைத் துவங்குவதன் அடிப்படை அம்சங்களை பார்க்கலாம்.
உங்கள் தயாரிப்பை வாங்கக் கூடிய வாடிக்கையாளர்கள் யார்? உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் யார்? அவர்களை அடைவது எப்படி? உங்கள் போட்டியாளர்கள் யார்? அவர்கள் எங்கு எல்லாம் விற்பனை செய்கின்றனர்? இது போன்ற கேள்விகள் அடிப்படையிலான ஆய்வு உங்களுக்கு வழிகாட்டும்.
வர்த்தகத் திட்டம்
அடுத்ததாக, உங்களிடம் உள்ள வர்த்தக ஐடியா அடிப்படையில், ஒரு முறையான வர்த்தகத் திட்டத்தை உருவாக்குங்கள். நீங்கள் விற்பனை செய்ய உள்ள தயாரிப்பு, உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள், உங்கள் விற்பனைச் சானல், நிதித் திட்டம், விலை, மார்க்கெட்டிங், விளம்பரம் என அனைத்து அமசங்களையும் வர்த்தகத் திட்டம் உள்ளடக்கியிருக்க வேண்டும்.
- நிதி தேவைகள் என்ன? – வர்த்தகத் திட்டத்தை செயல்படுத்த உங்களுக்கு தேவைப்படக்கூடிய ஆரம்ப முதலீடு என்ன என கணக்கிடுங்கள். அதற்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
- சட்டப்பூர்வ அமைப்பு – உங்கள் வர்த்தக முறை வரி விதிப்பின் மீது தாக்கம் செலுத்தும் என்பதால், நீங்கள் எந்த வகையான வர்த்தகத்தை பதிவு செய்ய விரும்புகிறீர்க்ள் என்பதில் கவனமாக இருக்கவும். தனி உரிமையாளர், பொது நிறுவனம், தனி நிறுவனம், குறைந்தபட்ச பொறுப்பு பாட்னர்ஷிப் என பலவிதமாக பதிவு செய்து கொள்ளலாம்.
- தேவையான உரிமங்கள் – பொதுவாக; நிறுவன பதிவு, ஜி.எஸ்.டி பதிவு, உத்யோக் ஆதார் பதிவு, ஏற்றுமதி இறக்குமதி பதிவு, கடை நிறுவன சட்ட உரிமம் உள்ளிட்ட உரிமங்களை பெற வேண்டியிருக்கலாம். இவற்றில் உங்களுக்கு பொருத்தமான உரிமங்களை அறியவும்.
- பிராண்ட் மதிப்பு – பிராண்டை உருவாக்கிக் கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட வைக்கலாம். பொருத்தமான பிராண்டை உருவாக்கிக் கொண்டு, அதை இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமாக்கவும். அமேசானில் இணைந்தவுடன் அதன் விளம்பர வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- விற்பனை – பொருட்களை விற்பனை செய்ய நீங்கள் ஒரு விற்பனை நிலையம் அல்லது, வேர்ஹவுஸ் வசதியை அமைக்க வேண்டும். நீங்கள் அமேசான் இந்தியா தளம் மூலம் விற்பனை செய்ய தீர்மானித்தால், அதில் பதிவு செய்து கொண்டு, உங்கள் விற்பனை நிலையத்தைத் துவக்கி ஆர்டர்களுக்காக காத்திருக்கலாம். பொருட்களை பேக் செய்வது முதல், டெலிவரி செய்வது வரை எல்லாவற்றையும் அமேசான் பார்த்துக்கொள்கிறது.
அமேசான் வாயிலாக பொருட்களை விற்பது, பலவித சாதகமான அம்சங்களைக் கொண்டது. அமேசான் அனைவரும் அறிந்த தளமாக இருப்பதோடு, அது விற்பனையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை அளிப்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அமேசானில் விற்பதன் பலன்
மிகப்பெரிய ஆன்லைன் சந்தை என்பதன் அடிப்படையில் அமேசான், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய வழி செய்கிறது. அமேசானில் விற்பனை செய்வதன் வாயிலாக கீழ் கண்ட பலன்களை பெறலாம்.
அமேசானுக்கு மாதந்தோறும் 300 மில்லியனுக்கு மேல் தனி வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர். எனவே தயாரான வாடிக்கையாளர் பரப்பு இருக்கிறது. மேலும் அமேசான் போன்ற தளங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கும் தயாராக உள்ளனர். அமேசானில் பொருட்களை பட்டியலிவதன் மூலம், இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களை உங்களால் சென்றடைய முடியும்.
சர்வதேச விரிவாக்கம்
ஒரு விற்பனையாளராக, மற்ற நாடுகளில் உங்கள் தயாரிப்பை சோதித்து பார்க்க விரும்பினால், மற்ற நாடுகளில் விற்பனை செய்வதை அமேசான் எளிதாக்குக்கிறது. இதற்காக தனியே எதையும் செய்ய வேண்டாம், அமேசானில் பட்டியலிட்டாலே போதுமானது.
கையிருப்பு வேண்டாம்
உங்கள் பொருட்களை அமேசான் இருப்பு வைத்து, வாங்குபவர்களுக்கு அனுப்பி வைக்கும். உங்களுக்கான வேலை மிச்சம். அமேசானின் ஷிப்பிங் சேவை, உங்கள் பொருள் வாடிக்கையாளர்களை சரியாக சென்றடைவதை உறுதி செய்யும்.
உங்கள் பொருளின் விற்பனை பூர்த்தி ஆகும் வறை அமேசான் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. தனது விற்பனை கட்டணத்தை கழித்துக்கொண்டு, தொகையை நேரடியாக உங்கள் கணக்கில் சேர்த்து விடுகிறது.
அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனையும், பாதுகாப்பான பேமெண்ட் கேட்வே வாயிலாக நிகழ்கிறது. வேர்ஹவுசிங் முதல், விளம்பரம், வாடிக்கையாளர் சேவை என எல்லாவற்றிலும், அமேசான் தொழில்முறை சேவை பங்குதாரர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
விற்பனைக்கான பொருள்
2018 ஜனவரியில், அமேசானில் மொத்தம் 562,383,292 பொருட்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. விற்பனையாளர்கள் பலவகையான பொருட்களை விற்பனை செய்யலாம். எனினும், ஒரு சில பொருட்களை விறக் அனுமதி இல்லை. சிலவற்றுக்கு சிறப்பு அனுமதி தேவை.
- அமேசான் இந்தியாவில், ஆடைகள், அழகு சாதன பொருட்கள், புத்தகங்கள், டிஜிட்டல் பொருட்கள், அலுவலக எழுது பொருட்கள், பொம்மைகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யலாம்.
- மது, விலங்குகள், விலங்கு பொருட்கள், நாணயங்கள், மருந்துகள், ஆபத்தான பொருட்கள், லாட்டரி, சூதாட்ட பொருட்கள், உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய அனுமதி இல்லை. முழு பட்டியல் இங்கே:
- துணிகள், பேஷன், லக்கேஜ், பயண துணைப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்ய அமேசானிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
பொருட்களின் வகையை தேர்வு செய்த பிறகு, நிறைவேற்றம் மற்றும் ஷிப்பிங் பிரிவை கவனிக்க வேண்டும்.
உங்களுக்கான வர்த்தக திட்டம்
அமேசானில் பதிவு செய்யும் போது, இரண்டு வகையான விற்பனைத் திட்டங்கள் இருக்கின்றன.
- அமேசான் மூலம் நிறைவேற்றம் – அமேசான் உங்கள் பொருட்களை தனது வேர்ஹவுசில் வைத்திருந்து, வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்கிறது. பேக்கிங்கையும் அது கவனித்துக்கொள்கிறது.
- வர்த்தகர் மூலம் நிறைவேற்றம் – நீங்கள் பொருட்களை டெலிவரி செய்யும் வாய்ப்பை தேர்வு செய்யலாம். எனில், உங்கள் தேர்வு, வர்த்தகர் மூலம் நிறைவேற்றம் என இருக்க வேண்டும். விற்பனையாளராக நீங்களே, கையிருப்பு, பேக்கிங், டெலிவரி ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.
- அமேசான் ஈஸி ஷாப்பிங் திட்டம் – அமேசான் பிரதிநிதிகள், உங்களிடம் இருந்து தயாரிப்பை பெற்றுக்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு அளிப்பார்கள். கமிஷன் தவிர இதற்குக் கட்டணம் உண்டு.
உங்கள் வர்த்தக பிரிவுக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
பதிவு
அமேசான் வர்த்தக வாய்ப்புகளை பெற முதலில், அமேசான் வெண்டர் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அமேசான் தளத்தில் உள்ள ரிஜிஸ்டர் நவ் பகுதியை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம்: https://sellercentral.amazon.in/
பட்டியலிடுதல்
அமேசானில் பொருட்களை விற்பனை செய்ய, முதலில் தயாரிப்பை பட்டியலிட வேண்டும். இதற்கான வழிகள்:
· ஸ்கேன் செய்வது – அமேசான் செல்லர் செயலி மூலம் உங்கள் பொருட்கள் பார்கோடை ஸ்கேன் செய்து பட்டியலிடலாம். செயலியின் மேல் பகுதியில் இதற்கான ஸ்கேன் வசதி இருக்கும்.
· பொருத்தம் – ஒரே பொருள் பல வர்த்தகர்களால் பட்டியலிட அமேசான் அனுமதிக்கிறது. நீங்கள் ஸ்கேன் செய்யும் போது, அந்த பொருள் ஏற்கனவே இருந்தால், அதனுடன் பொருத்திக்கொள்ளலாம். விலை, எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை மட்டும் சமர்பித்தால் போதுமானது.
· பட்டியல் தயாரிப்பு – உங்களிடம் பல பொருட்கள் இருந்தால், இந்த வசதி உதவியாக இருக்கும். பொருளைச் சேர்க்கவும் பகுதியை கிளிக் செய்து விவரங்களை சமர்பிக்கலாம்.
· ‘கஸ்டம் இன்வெண்ட்ரி டெம்ப்ளேட் – உங்களிடம் அதிகப் பொருட்கள் இருந்தால் இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் பட்டியலிடலாம். இவைத்தவிர பொருட்களுக்கான புகைப்படங்களையும், பொருத்தமான முறையில் சமர்பிக்க வேண்டும்.
Shipping options
அமேசான் சிறப்பான ஷிப்பிங் மற்றும் டெலிவரி சேவைகளை அளிக்கிறது. அமேசான் வேர்ஹவுசுக்கு விற்பனையாளர் பொருட்களை அனுப்பி வைத்தால் அமேசான் மற்ற விஷயங்கள் பார்த்துக்கொள்வது ஒரு வழி. இதே போல, விற்பனையாளர்களிடம் அதிக பொருட்கள் இருந்தால், அமேசான் அதிகாரிகள், விற்பனையாளர் வேர்ஹவுசுக்கு வந்து, செயல்படும் வழியை தேர்வு செய்யலாம். அமேசான் ஈஸி ஷிப் மற்றும் சுய ஷிப்பிங் வழிகளும் உள்ளன. ஈஸி ஷிப்பில், சிறிய கட்டணத்திற்கு அமேசான் உங்கள் சார்பில் ஷிப்பிங் செய்யும். சுயமாகவும் பொருட்களை டெலிவரி செய்யலாம்.
விற்பனைக்கான விளம்பரம்
அமேசானில் பொருட்கள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டவுடன், வாடிக்கையாளர்கள், அதில் கிளிக் செய்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம். எனினும் அமேசானில் ஆயிரக்கணக்கானப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால், உங்கள் தயாரிப்புக்கு என தனியே விளம்பரம் செய்வது நல்லது.
அமேசான் பட்டியலில் தயாரிப்பு தொடர்பான விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்வதோடு, கூகுள் ஆட்வேர்ட்ஸ், ஃபேஸ்புக் விளம்பரம் ஆகிய வழிகளையும் நாடலாம். அமேசான் ஸ்பான்சர்டு தயாரிப்பு வழியையும் நாடலாம். தள்ளுபடி திட்டங்களிலும் இணைந்து கொள்ளலாம்.
ஜிஎஸ்டி
புதிய விதிமுறைகள் படி, 2017 ஜூலை 1ம் தேதிக்கு பிறகு, இந்தியாவில் உள்ள அனைத்து விற்பனையாளர்களும், ஜி.எஸ்.டி.க்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். தயாரிப்புகள் விலக்கு பட்டியலில் இல்லாத நிலையில் இது கட்டாயமாகும்.
ஆக, சொந்த வர்த்தகம் செய்ய விரும்பினால், அமேசானில் விற்பனையாளராகி கலக்குங்கள்!
ஆங்கில கட்டுரையாளர்: சஞ்சய் ஷெனாய் | தமிழில் :சைபர்சிம்மன்