‘நிலைப்பேசி முதல் செல்பேசி வரை’ - இந்திய தொலைத்தொடர்பு துறை வளர்ச்சி அடைந்தது எப்படி?
இந்திய தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி சர்ச்சைகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் ஊக்கம் அளிக்கும் வெற்றிக்கதையாகவே இருக்கிறது.
5- ஜி சேவையை அறிமுகம் செய்ய செல்போன் சேவை நிறுவனங்கள் தயாராகி வரும் நிலையில், இந்திய தொலைத்தொடர்பு துறை வெகு தொலைவு பயணித்து வந்திருப்பதை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
செல்போன் துறையில் 2-ஜியில் இருந்து 5-ஜிக்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு துறையும் கற்காலத்தில் இருந்து டிஜிட்டல் யுகத்திற்கு மாறி வந்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு வளர்ச்சி
தொலைத்தொடர்புத் துறையை பொருத்தவரை இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு வலைப்பின்னலை கொண்டிருப்பதாக, விக்கிபீடியா கட்டுரை குறிப்பிடுகிறது. இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டணம் உலகிலேயே மிகவும் குறைந்த அளவிலானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைய பயனாளிகள் எண்ணிக்கையிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி இந்தியாவில் இணைய வளர்ச்சிக்கும் வலு சேர்த்துள்ளது.
’டிஜிட்டல் இந்தியா’ என அழைக்கப்படும் நவீன இந்தியாவில் உணவு ஆர்டர் செய்வது முதல், பணம் செலுத்துவது வரை எண்ணற்ற சேவைகளை செல்போனில் இருந்தே அணுக முடிகிறது. இணைய கல்வி முதல் தொலை மருத்துவம் வரை இன்னும் பல வசதிகள் செல்போனில் சாத்தியமாகின்றன. செல்போன் சார்ந்த புதுமையான சேவைகளும் தொடர்ந்து அறிமுகம் ஆகிக்கொண்டிருக்கின்றன.
இவை எல்லாமே இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொலைத்தொடர்பு புரட்சியின் பயன். ஆரம்ப காலத்தில் இந்தியாவில் தொலைபேசி கட்டமைப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை எனும் நிலையில், நாட்டின் தற்போதைய தொலைத்தொடர்பு வளர்ச்சி பலரும் நினைத்து பார்க்காததாகவே இருக்கிறது.
ஆரம்ப நிலை
இந்தியா தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் தொலைத்தொடர்பு புரட்சி 1980-களில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. இதன் முன்னோடிகளாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும், அவரது ஆலோசகராக இருந்த சாம் பிட்ரோடாவும் கருதப்படுகின்றனர். இதற்கு அடுத்த ஆலை வாஜ்பாயி பிரதமராக இருந்த போது நிகழ்ந்ததாகவும் கருதப்படுகிறது.
இதனிடையே, வி.ஸ்.என்.எல் (VSNL)2 மூலம் பி.கே.சிங்கால் இந்திய மக்களுக்கு இணைய சேவையை அறிமுகம் செய்து வைத்து இணைய புரட்சிக்கும் வித்திட்டார்.
இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் இவை எல்லாம் எத்தனை பெரிய பாய்ச்சலாக அமைந்தன என்பதை புரிந்து கொள்ள நாட்டின் தொலைத்தொடர்பு வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும்.
தொலைத்தொடர்புத் துறையின் வரலாறு 1850ல் அறிமுகமான தந்தி சேவையில் இருந்து துவங்குகிறது. கொல்கத்தா மற்றும் டைமண்ட் ஹார்பர் இடையே சோதனை நோக்கிலான தந்தி இணைப்பு அமைக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு இந்த சேவை பயன்பாட்டிற்கு வந்தது. கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவை நிர்வகிக்க இந்த சேவையை பயன்படுத்திக் கொண்டது.
பின்னர் 1880ல் தொலைபேசி சேவை நிறுவனங்கள் உண்டாயின. கொல்கத்தா, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தொலைபேசி இணைப்பகங்கள் அமைக்கப்பட்டன. நாடு முழுவதும் தொலைத்தொடர்பு வசதி அமைக்கப்பட்டாலும், அவை பெரும்பாலும் அரசு அலுவலகங்களாலும், வர்த்தக நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படும் நிலையே இருந்தது.
சுதந்திரத்திற்கு பிறகும் இதே நிலையே நீடித்தது. சொந்தமாக தொலைபேசி இணைப்பை பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்ததோடு, பணமும், செல்வாக்கும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்ற நிலையில் இருந்தது. 1980கள் வரை இந்த நிலையே நீடித்தது.
முதல் பாய்ச்சல்
இந்திய தொலைத்தொடர்பு துறையும் தொலைபேசி வசதியும் அரசின் சிவப்பு நாடாவுக்குள் சிக்கித்தவித்த நிலை மாறி, 1980-களின் பிற்பகுதியில் நாடு முழுவதும் பிசிஓ எனப்படும் பொது தொலைபேசி மையங்கள் தோன்றின. திடீரென பார்த்தால், தனிநபர்களோ, சிறு வணிகர்களோ தொலைபேசி மையங்களுக்குச் சென்று வேறு நகரங்களில் இருந்தவர்களை எளிதாக தொடர்பு கொண்டு பேச முடிந்தது. உள்ளூர் அழைப்புகள் மட்டும் அல்லாமல் எஸ்டிடி எனப்படும் தொலைதூர அழைப்புகளையும், அயல்நாட்டு அழைப்புகளையும் கூட மேற்கொள்ள முடிந்தது.
தொலைபேசி மையங்கள் தொலைபேசி வசதியை பரவலாக்கியதோடு, வேலைவாய்ப்பையும் பெருக்கியது. இந்த மாற்றம் ஏற்பட முக்கியக் காரணமாக அமைந்ததாக சாம் பிட்ரோடா கருதப்படுகிறார்.
பிட்ரோடா அப்போது அமெரிக்காவில் இருந்தார். இடையே விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தவர் சிக்காகோவில் இருந்த மனைவியை தொடர்பு கொண்டு பேச விரும்பினார். ஆனால், அமெரிக்காவுக்கான தொலைபேசி இணைப்பை பெற முடியவில்லை.
இந்தியாவில் இருந்து இன்னொரு நாட்டுக்கு தொலைபேசி செய்ய முடியாத நிலை சாம் பிட்ரோடாவை அதிருப்தியில் ஆழ்த்தியது.
ஆனால், வெளிநாட்டு வசதிக்கு பழகிய மற்றவர்கள் போல் இந்த நிலைக்காக தாயகத்தை இகழாமல், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண தீர்மானித்தார். அடுத்த பத்தாண்டுகள் இந்தியாவில் இருந்து இந்திய தொலைத்தொடர்பு துறையின் நிலையை மேம்படுத்துவேன் என அவர் மனைவியிடம் தெரிவித்தார்.
சவால்களும், வாய்ப்புகளும்
இந்தியாவில் அரசு அமைப்பில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவது எத்தனை கடினமானது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. உண்மையில் இந்த அறியாமையே அவரை இந்திய தொலைத்தொடர்பு துறையில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என நினைக்க வைத்தது. இதற்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து பேச விரும்பினார். ஆனால், பிரதமரை சந்திப்பதற்கான வழிமுறை தெரிந்திருக்கவில்லை. பின்னர், எப்படியோ நண்பர் ஒருவர் மூலம் இந்திராவை சந்தித்து பேசினார்.
ஒரு மணி நேரம் நடைபெற்ற அந்த சந்திப்பில், இந்திய தொலைத்தொடர்பு துறை நவீனமயமாக வேண்டும் என்றும், இதற்கு இந்திய பொறியியல் வல்லுனர்கள் திறனையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எடுத்துக்கூறினார். சந்திப்பின் போது எதுவும் பேசாத பிரதமர் முடிவில் நல்லது என்று மட்டுமே கூறினார். இந்த சந்திப்பின் பலன் என்ன என்பதை அவரால் தீர்மானிக்க முடியவில்லை.
ராஜீவ் காலம்
இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக அடுத்த சில மாதங்களில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். பிட்ரோடாவின் முயற்சியும் இத்துடன் முடிந்திருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே பிரதமரை சந்திக்க காத்திருந்த தருணத்தில் அவரது மகன் ராஜிவுக்கு பிட்ரோடா அறிமுகம் ஆகியிருந்தார். இந்திராவின் எதிர்பாராத மரணத்தை அடுத்து ராஜீவ் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு பிட்ராடோ அவருக்கு நெருக்கமானார்.
புதிய யோசனைகளுக்கும், திட்டங்களுக்கும் செவி கொடுத்த ராஜீவ், தொலைத்தொடர்பு துறையை நவீனமயமாக்கும் பிட்ரோடாவின் யோசனையையும் ஏற்றுக்கொண்டார். இதன் பயனாகவே நாட்டில் தொலைத்தொடர்பு துறையின் நிலை மாறத்துங்கியது.
தொலைபேசி உள்கட்டமைப்பு டிஜிட்டல்மயமாக்கப்பட்டு பொது தொலைபேசி மையங்கள் உருவாயின. தொலைபேசி இணைப்பு கிடைப்பதும் ஓரளவு எளிதானது. 1989ல் ராஜீவ் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில் பிட்ரோடா அமெரிக்க திரும்பினார்.
மொபைல் அறிமுகம்
இதனிடையே, 1991ல் பொருளாதார சீர்த்திருத்தங்கள் மூலம் இந்தியா மேலும் மாற்றத்திற்கு தயாரானது. 1995ல் பேஜர் வசதியும், அதன் தொடர்ச்சியாக செல்போன் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஆண்டு சுதந்திர தினத்தில் இந்தியாவில் இணைய சேவையும் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
துவக்கத்தில் இணைய இணைப்பிற்கான கட்டணமும், பயன்பாட்டு கட்டணமும் மிக அதிகமாக இருந்தாலும், இணைய வசதி உலகம் முழுவதும் பரவலாகத்துவங்கிய சூழலில் இந்தியாவிலும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அப்போது விஎஸ்.என்.எல் நிறுவன தலைவராக இருந்த பி.கே.சிங்கால் இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இணைய வசதியை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தார். அறிமுகத்தின் போது நிகழ்ந்த தொழில்நுட்ப குளறுபடிகளுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு அதை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனிடையே, செல்போன் துறையில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட வாஜ்பாயி பிரதமராக இருந்த போது தொலைத்தொடர்பு துறை மேலும் வளர்ந்தது. பின்னர், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை வெடித்தாலும், செல்போன் பரவலாக்கம் தடையில்லாமல் நிகழ்ந்தது. தொடர்ந்து 3-ஜி , 4-ஜி அறிமுகம் என தொழில்நுட்ப பாய்ச்சல் நிகழ்ந்து தற்போது 5-ஜி சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது.