உலக அளவில் பிரபலமான GameStop நிறுவனம் - சாத்தியமானது எப்படி?
ஹெட்ஜ் நிதி குழுமத்திற்கு 13 பில்லியன் டாலர் நஷ்டம்!
வீடியோ கேம்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களை தயாரித்து வருகிறது அமெரிக்காவைச் சேர்ந்த கேம்ஸ்டாப் (GameStop) நிறுவனம், இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதன் பங்குகள் அமெரிக்க பங்குச்சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் 16 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி இருந்தது.
தொடர் நஷ்டம் காரணமாக கேம்ஸ்டாபை விட்டு அதன் முதலீட்டாளர்கள் வெளியேறியத் தொடங்கினர். இதற்கிடையில் தான் ரெட்டிட் இணையதளத்தின் உதவியால் நிறுவனத்தின் பங்குகள் ஏறத்தொடங்கின. Reddit என்பது மிகவும் பிரபலமான ஆன்லைன் தளம். சிறு பங்குச்சந்தை முதலீட்டாளர்களை இணைப்பதற்கு உதவியாக இருக்கும் இந்த தளத்தில், Wall Streets Bets என்ற பெயரில் சிறு முதலீட்டாளர்கள் கூட்டணியாக இணைந்து கேம்ஸ்டாப் நிறுவனத்தின் பங்குகளை வாங்கத் தொடங்கினர்.

அனைத்துப் பங்குகளையும் சிறு முதலீட்டாளர் கூட்டணி வாங்கியதையடுத்து, பங்கின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதன் காரணமாக,
ஜனவரி 21 அன்று 43 டாலருக்கு வர்த்தகமான ஒரு பங்கின் விலை 4 நாள்களில் 347 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது. 7.1 கோடி கேம்ஸ்டாப் பங்குகளை 6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 43,800 கோடி) என்ற அளவுக்கு பெரிய வர்த்தகர்கள் செயற்கையாக பங்குகளை விற்றனர். அத்தனை பங்குகளையும் சிறு முதலீட்டாளர்கள் கூட்டணி வாங்கிவிட்டது.
இதனால் கேம்ஸ்டாப் பங்குகளை முதலில் விற்கத் தொடங்கிய ஹெட்ஜ் நிதி குழுமத்தின் (Hedge Fund Group) வர்த்தகர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இதன் காரணமாக ஹெட்ஜ் நிதி குழுமத்திற்கு 13 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அமெரிக்காவில் மட்டும் பிரபலமாக இருந்த இந்நிறுவனம், கேம்ஸ்டாப் நிறுவனத்தின் தடாலடி வளர்ச்சி மூலம் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இதன் காரணமாக பல முன்னணி முதலீட்டாளர்களும், நிறுவனத் தலைவர்களும் கேம்ஸ்டாப் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெஸ்லா குழுமத்தின் தலைவரான எலான் மஸ்க், கேம்ஸ்டாப் பங்குகளை வாங்கிய சிறு முதலீட்டாளர் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: மலையரசு