உலகின் 3வது பணக்காரரான கெளதம் அதானி; சொத்து மதிப்பு எவ்வளவு?
அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, உலகிலேயே 3வது பெரும் பணக்காரராக இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
உலகின் 3வது பணக்காரரான அதானி
அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி,
உலகிலேயே 3வது பெரும் பணக்காரராக இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர், துறைமுகங்கள் என அனைத்து துறைகளிலும் கால் பதித்துள்ள அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி, கடந்த சில வருடங்களாகவே அசுர வளர்ச்சி அடைந்து வருகிறார். அதானி குழுமம் இப்போது 5ஜி அலைக்கற்றைக்கு ஏலம் எடுத்த பிறகு தொலைத்தொடர்பு துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில், 123.7 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 5வது இடம் பிடித்தார். பழம்பெரும் முதலீட்டாளரான வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி அதானி 5வது இடம் பிடித்தது ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக மாறியது.
இதன் மூலம் உலகப் பணக்காரர்களான எலான் மஸ்க், பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ், வாரன் பஃபெட் போன்றவர்களோட அதானியின் பெயரும் உலகப் பிரபலமானது.
தற்போது ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் உலகின் முன்னணி ஃபேஷன் பிராண்டான லூயி விட்டன் நிறுவனத்தின் சிஇஓ ஆன பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக இடம் பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் சமீபத்திய பட்டியலின் படி, 251 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர மதிப்புடன் டெஸ்லா மற்றும் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் 153 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளார்.
எலான் மஸ்க் மற்றும் பெசோஸைத் தொடர்ந்து 137 பில்லியன் நிகர மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி 3வது இடத்திலும் உள்ளனர். ஒரே ஒரு பில்லியன் வித்தியாசத்தில் உலகிலேயே டாப் பிராண்ட்டான லூயி விட்டன் நிறுவனத்தின் சிஇஓவுமான பெர்னார்ட் அர்னால்ட்டை அதானி பின்னுக்குத் தள்ளியுள்ளார். இவரது நிகர மதிப்பு 136 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் பட்டியலில் முதன் முறையாக ஆசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி மொத்தம் 91.9 பில்லியன் டாலர் மதிப்புடன் 11வது இடத்தில் உள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் என்பது நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் புதுப்பிக்கப்படும் உலகின் பில்லியனர்களின் தினசரி தரவரிசைக் குறியீடாகும்.
தொகுப்பு - கனிமொழி