மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை - 11 தமிழ்நாட்டுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு!
மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், ஆத்தூர் வெற்றிலை, தைக்கால் பிரம்பு உள்ளிட்ட 11 தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால் என்ன பயன்?
இந்தியாவின் குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்தனி பண்புகள் அடையாளங்கள் கொண்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்தச் சான்றானது அந்தப் பொருளின் தரம் மற்றும் நன்மதிப்பிற்கு சான்றாகத் திகழ்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த நிலம் சார்ந்த பிரபலமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு தரப்படுகிறது.
எதற்கெல்லாம் புவிசார் குறியீடு?
காஞ்சிபுரம் பட்டுச்சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், பத்தமடை புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இதே போன்று பழனி பஞ்சாமிர்தம், உடன்குடி பனங்கற்கண்டு, கொடைக்கானல் மலைப்பூண்டு, கோவில்பட்டி கடலைமிட்டாய் உள்பட 45 உணவு வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நெகமம் காட்டன் சேலை, மயிலாடி கல்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானானமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது.
இந்த விண்ணப்பங்களை பரிசீலித்த புவிசார் குறியீடு பதிவக தீர்ப்பாயம் அனைத்து விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டு அதனை மத்திய அரசின் அரசிதழில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வெளியிட்டது. இதற்கு ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில் 4 மாதத்தில் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
அந்த வகையில், 11 பொருட்களுக்கான புவிசார் குறியீட்டிற்கு மார்ச் 30ம் தேதியுடன் 4 மாதம் கெடு முடிவுற்ற நிலையில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இந்தப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
சிறப்புகள் என்ன?
தமிழகத்தின் பல பகுதிகளில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வந்தாலும் காரத்தன்மை மிகுந்து தனிச்சுவையுடன் காணப்படும், தூத்துக்குடி மாவட்டம் ’ஆத்தூர் வெற்றிலை’க்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அதற்குக் காரணம், தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரின் வளம்தான். நாட்டுக்கொடி, கற்பூரம், திருகாமணி எனப் பல வகைகள் இருந்தும், நாட்டுக்கொடியே இங்கு அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது, மணப்பாறை. இந்த மண்ணிற்கு பெருமை சேர்ப்பது அதன் தனிச்சுவை மற்றும் மணம். குடிசைத் தொழிலாக செய்யப்படும் முறுக்கு தயாரிப்பு மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம்.
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் அருகே 6 கி.மீ தூரத்தில் உள்ளது தைக்கால். பிரம்பால் செய்யப்படும் கலைப்பொருள்களின் உற்பத்தித் தொழில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தைக்கால் பகுதி மக்களால் செய்யப்பட்டு வருகிறது. வெறும் கைகளாலேயே பிரம்பை உருக்கி வளைத்து, பின்னி கலைப் பொருள்களை உருவாக்குகின்றனர்.
தைக்கால் பகுதி மக்களின் பிரம்பால் செய்யப்படும் கலை கைப்பக்குவம் உலகில் வேறு எந்தப் பகுதி மக்களிடமும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நேர்த்தியுடன் பிரம்பால் ஆன கலைப்பொருள்களைச் செய்கிறார்கள்.
கம்பம் பன்னீர் திராட்சை 19ம் நூற்றாண்டில் இருந்து தேனி மாவட்டம் கம்பம், போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம் வட்டங்களில் விளைவிக்கப்படுகிறது. இந்த ஊரில் கிடைக்கிற மண் வளம், காற்று, ஈரப்பதம் ஆகியவையே இந்த திராட்சைக்கு மகத்துவம் கொடுக்கிறது.
1871ம் ஆண்டிலிருந்து பொள்ளாச்சி, சாலூர், கிணத்துக்கடவு, ஆணைமலை, உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களில் தயாரிக்கப்படுகின்றன நகமம் காட்டன் சேலை.
மயிலாடி கற்சிற்பம் 100 ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகிறது. மார்த்தாண்டம் தேன் 1924ம் ஆண்டுக்கு முன்பாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கிடைக்கும் கரிசல் மண், செம்மண்ணில் தயாரிக்கப்படும் மானாமதுரை மண்பாண்டம் நீண்ட காலம் உழைக்ககூடியது என்கிற பெருமைக்கு உரியது.
என்ன பயன்?
தமிழ்நாட்டில் இதோடு சேர்த்து 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதிகமான புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது. இது தவிர, மேலும் 15க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ளது. இந்தப் பொருட்களுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வணிக அமைப்பின் (WTO) உறுப்புநாடான இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் 1999ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 2003ல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு!