திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு கிடைத்தது புவிசார் குறியீடு!
நலிந்து வரும் பாரம்பரியத் தொழில்களுக்கு காப்பானாக வருவது இந்த புவிசார் குறியீடு. போலிகளின் மத்தியில் உண்மையான உழைப்பு இதனால் எவ்வாறு பாதுக்காக்கப்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!
பழனி பஞ்சாமிர்தத்தை தொடர்ந்து திண்டுக்கல் பூட்டிற்கும், காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இரண்டு தயாரிப்புகளும் சந்தையில் அவற்றின் மவுசை இழந்து வரும் சூழ்நிலையில், புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருப்பதன் மூலம், அதன் செகண்ட் இன்னிங்க்சை எதிர்பார்த்து காத்துள்ளனர் வியாபாரிகள்.
இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் அதன் நிலப்பகுதிக்கு ஏற்ப தனித்தன்மைகள் மற்றும் அடையாளங்கள் கொண்ட பொருள்கள் கண்டறியப்பட்டு, அப்பொருள்களுக்கு அங்கீகாரம் அளிப்பதே புவிசார் குறீடாகும் (Geographical Indication). குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரியமாக விளைவிக்கப்படுவதற்கும் அல்லது தயாரிக்கப்பட்டதற்கும், அதன் தரத்தை காப்பதற்குமான சான்றாக இது விளங்குகிறது. இதற்காக 1999ம் ஆண்டு பொருள்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு 2003ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக 2004ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது டார்ஜிலிங் டீ தான். அதன் பின் இன்று வரை 357 பொருள்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை மல்லிகை, காஞ்சி பட்டு, திருப்பதி லட்டு, தஞ்சாவூர் மரக்குதிரை, நீலகிரி தேயிலை என 31 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் அதிக புவிசார் குறியீடுகளைப் பெற்ற மூன்றாவது மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. கர்நாடகம் முதலிடத்தையும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ‘திண்டுக்கல் பூட்டு, ஹார்ட்வேர் மற்றும் ஸ்டீல் பர்னிச்சர் தொழிலாளர்கள் கூட்டுறவு சொசைட்டி லிமிடெட்’ சார்பில் திண்டுக்கல் பூட்டிற்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அதே ஆண்டு, ராஜிவ் காந்தி கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு தயாரிப்பு மற்றும் விற்பனை சொசைட்டி லிமிடெட் சார்பில் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்துள்ளது.
பல ஆண்டு காத்திருப்பின் வெற்றியாய் கடந்த வியாழக்கிழமை (29.8.19), திண்டுக்கல் பூட்டிற்கும், காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் பூட்டிற்கு கிடைத்தது அங்கீகாரம்
திண்டுக்கல் என்றாலே பூட்டும், பிரியாணியும் தான் நினைவுக்கு வரும். திண்டுக்கல் பூட்டின் உயர்ந்த தரம் மற்றும் எளிதில் தேயாத திறனால் உலகம் முழுவதும் அறியப்பட்டு திண்டுக்கல்லிற்கு ‘லாக் சிட்டி’ என்ற பெயரும் வந்தது.
கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான பூட்டு தயாரிக்கும் தொழில் 1900ம் ஆண்டு வாக்கில் சங்கரலிங்காச்சாரி சகோதரர்களால் தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. 1930 ஆண்டில், பரட்டாய் ஆச்சாரி என்பவர் ஒரு மாங்காய் அளவிலான பூட்டு, டிராயர் பூட்டு மற்றும் சதுர பூட்டை வடிவமைத்ததற்கான சான்றுகள் உள்ளன. மேலும், இந்த பூட்டுகள் கோயில்களில் பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருவதிலிருந்து அவற்றின் நீண்ட மற்றும் தொடர்ச்சியான இருப்பை நிரூபிக்கின்றன.
திண்டுக்கல்லில் 5 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் மட்டுமே பூட்டுகள் தயாரிக்கப்படுகிறது. பூட்டு தயாரிப்பில் 3,125 தொழிற்கூடங்கள் ஈடுபடுகின்றன. அவைகள் நாகல்நகர், நல்லம்பட்டி, குடைபாறைப் பட்டி, யாகப்பன்பட்டி ஆகிய கிராமங்களில் மட்டுமே குவிந்துள்ளன. இப்பகுதிகளில் இரும்பு அதிகமாக கிடைப்பதே, பூட்டு தொழில் வளர்ச்சிக்கு காரணம். திண்டுக்கல்லில் உள்ள 3 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கு இத்தொழிலையே சார்ந்துள்ளனர்.
நாட்டின் பிற பகுதிகளில் தயாரிக்கப்படும் பூட்டுகள் போலின்றி, கைவினை கலைஞர்களின் கைகளால் தயாரிக்கப்படுவை திண்டுக்கல் பூட்டுகள். சராசரியாக ஒவ்வொரு கைவினைகலைஞரும் ஒரு நாளைக்கு 3-4 பூட்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். அவ்வாறு கைவினைக் கலைஞர்களால் அக்காலத்திலே 50க்கும் மேற்பட்ட வகையான பூட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மாங்கோ பூட்டு, அல்மிரா பூட்டு, தந்திர பூட்டு என பலவகை பூட்டுகள் திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன. அவற்றில் டெலோ பூட்டுகளை வேறு சாவி கொண்டு திறக்க முடியாது, அதன்சாவி தொலைந்துவிட்டால் பூட்டை உடைக்க தான் வேண்டும்.
அப்படி பெருமைவாய்ந்த பூட்டு தொழிலுக்கு பெரிய பூட்டு போடும் நிலை ஏற்பட்டது. உத்திரபிரதேசத்தின் அலிகாரில் பெரும் நிறுவனங்கள் பூட்டு தயாரிக்க களமிறங்கின. அதுவும், இயந்திரத்தின் உதவியோடு ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்பட்ட பூட்டுகள் மலிவு விலையில் நாடு முழுவதும் விற்பனையிக்கப்பட்டது.
வியர்வை வழிய கைகளால் தயாரிக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டின் மவுசு குறைந்தது. திண்டுக்கல் பூட்டுத்தொழில் நசிவைத் தடுக்க அரசு இங்கு பூட்டுத் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் (லாக் சொசைட்டி) என்ற அமைப்பை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்கள், அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்கள் திண்டுக்கல் பூட்டுக்களையே பயன்படுத்த வேண்டுமென்று ஏற்கெனவே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் திண்டுக்கல் பூட்டிற்கு கிடைத்திருக்கும் புவிசார் குறியீடு, பூட்டு தயாரிக்கும் தொழில் மீண்டும் உயிர்தெழுவதற்கான ஊன்றுகோலாகும்.
பெண்களை கவர்ந்த கண்டாங்கி சேலை!
சந்திரமுகி சாரீ தொடங்கி ஓவியா டிசைனர் சாரீ வரை சினித்துறை தொடர்பாக ஆண்டுத்தோறும் வகை வகையாய் புடவைகள் அணிவகுத்து வெளியாகினும், பல ஆண்டுக்காலமாய் பெண் உலகத்தார் விரும்பும் ஒரு வகை கண்டாங்கிச் சேலைகள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை ஆதாரமாகக் கொண்டு நெய்யப்படும் கண்டாங்கி சேலை, தடிமனான, பருத்தி மூலம் தரமாகத் தயாரிக்கப்படுகிறது.
பாரம்பரியமான முறையில் கட்டங்கள், கோயில், மயில்கள் போன்ற வடிவங்களில் சேலையின் இருபுறங்களிலும் பெரிய பார்டர்கள் கொண்டதாக இருக்கும். சேலையின் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை அப்பெரும் பார்டர்களே ஆக்கிரமித்து புடவைக்கு கூடுதல் அழகு சேர்க்கும். குறிப்பாக, 5.10 முதல் 5.60 மி.மீ நீ ளம் கொண்டதாக பார்டர்கள் உள்ளன.
திறன்மிக்க காரைக்குடி நெசவாளர்களால் கையால் நெய்யப்படுகிறது இந்த கண்டாங்கி சேலை. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ராம்நாடு சமாஸ்தானத்தை 7வது மன்னனான கிழவன் சேதுபதி 1674 முதல் 1701ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அக்காலத்திலே கண்டாங்கிச்சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதிலிருந்தே அதன் நூற்றாண்டுகால பழமை வெளிப்படுகிறது.
இதனால் கண்டாங்கிச்சேலை, கைத்தறி சேலை என்று கூறி பவர்லூம் சேலைகள் சந்தையில் அதிகம் விற்கப்பட்டதில், உண்மையான கண்டாங்கி சேலைகள் என்று எண்ணி மக்களும் போலிகளை வாங்கி உடுத்தினர். அந்த நிலையை போக்கியுள்ளது புவிசார் குறியீடு.
தொழில் சார்ந்து பராம்பரிய பொருள்களின் வளர்ச்சிக்கு புவிசார் குறியீடு எவ்வகையில் உதவும் என்பது குறித்து விரிவாக விளக்குகிறார் புவிசார் குறியீடு தலைமை அலுவலர் சின்னராஜா.
“ஒவ்வொரு கைவினைப்பொருள்களும் நலிவடைந்து சென்றுக்கொண்டிருக்கிறது. கைவினைக் கலைஞர்கள் ஏன்டா இந்த தொழிலில் இருக்கிறோம் என்று வருந்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் பொருள்களின் தயாரிப்பு ரீதியில் பலம்வாய்ந்தவர்கள். ஆனால், அதை எப்படி மார்க்கெட்டிங் செய்யவேண்டும் என்ற உத்தி பெரும்பாலோனோருக்கு தெரியாது. அந்தவகையில், அவர்களது தொழில் அழிவுப் பாதைக்கு வழிவகுத்து கொடுக்கும்.
திண்டுக்கலில் குறிப்பிட்ட பகுதியில் உள்ளோர் தவிர்த்து மற்ற யாரும் இனி ‘திண்டுக்கல் பூட்டு’ எனும் பெயரில் உற்பத்தி செய்து விற்பனை செய்ய இயலாது. மீறினால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற இயலும். பூட்டு தயாரிக்கும் கலைஞர்கள் தவிர்த்து பொதுமக்களும் போலியான தயாரிப்புகளை ஓரிஜினல் என்று கூறி விற்பதை கண்டால் புகார் அளிக்கலாம்,” என்றார்.
புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்படும் பொருள்; பராம்பரியமானதாகவும், பழம்பெருமை வாய்ந்ததாகவும் தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் பல இடங்களில் பூட்டு உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால், திண்டுக்கல் பூட்டில் இரண்டு சாவி உள்ளது, இரண்டு லாக் உள்ளது என்று அதற்கேன்று ஒரு தனித்துவம் உள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் சிறை கைவிலங்குகள் அனைத்தும் திண்டுக்கல்லில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த கைவிலங்குலாம் சாவியில்லை எனில் அறுத்துதான் கழட்டவேண்டும். அந்த ஒரு தனித்துவத்தை நிரூபிக்க வேண்டும். அதை வாய்மொழியாக சொன்னால் போதாது, முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கவேண்டும்.
ஒரு பொருளுக்குப் புவிசார் குறியீடு பெற வரலாற்று ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், ஆய்வக அறிக்கைகள் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும். திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைக்கான புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்த அமைப்புகள், அதன் தனித்துவத்தை அறிக்கைகளாக சமர்பிக்க காலம் தாழ்த்தினர். அதனால் தான், 5 ஆண்டுக்காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால் ஓராண்டிலும் புவிசார் குறியீடு பெறலாம். உற்பத்தியின் தரத்தை ஆய்வு செய்வதற்கும், மதிப்பீடு செய்வதற்கும், பல துறைச் சார்ந்த குறைந்தபட்சம் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆய்வு குழு அமைக்கப்படும். அந்தந்த பொருள்களைச் சார்ந்த நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள். தஞ்சாவூர் சீரகச் சம்பா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, ஊட்டி வரிக்கி, மணப்பாறை முறுக்கு என 23 பொருள்கள் பரிசீலனையில் இருக்கின்றன,” என்று கூறினார்.
மேற்கொண்ட தகவல்களை அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி கூறுகையில்,
“புவிசார் குறியீடு பதிவு செய்வதற்கான மையம் சென்னையில் தான் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் உற்பத்தி அல்லது விளைவிக்கப்படும் பொருள்களுக்கு இம்மையமே புவிசார் குறியீடு வழங்கிவருகிறது. புவிசார் குறியீடு கேட்டு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட எந்தவொரு சங்கமும், அமைப்பை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தயாரிப்பாளர்களின் நலன்கள் காக்கும் பொதுநலன் கொண்டவராக இருத்தல் அவசியம்.
புவிசார் குறியீட்டை பதிவு செய்து கொள்வதன் மூலம், வர்த்தக வரம்பு மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கும். உண்மையான இடத்தை தவிர்த்து வேறு பகுதியில் உற்பத்தி செய்ததை விற்றால் இந்த குறியீடு பாதுகாப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
புவிசார் குறியீடானது உற்பத்தியாளர்களின் பொருளாதார செழிப்பிற்கு வித்தாக அமையும். இனி வரும் காலங்களில் கண்டாங்கி சேலைகள், மற்றும் திண்டுக்கல் பூட்டின் மவுசு கூடி, உற்பத்தி அதிகரிப்பதுடன் மக்களுக்கும் தரமான ஒரிஜினல் புடவையும், பூட்டுகளும் கிடைக்கும்,” என்றார் சஞ்சய் காந்தி.