அன்று ஒற்றை இலக்கம், இன்று 2,60,000+ டெலிவரி ஊழியர்கள் - ‘ஸ்விக்கி’யை ஸ்ரீஹர்ஷா வளர்த்த கதை!
ரூ.87,500 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஸ்ரீஹர்ஷா மெஜட்டி, ஐஐஎம் மாணவர் டூ ‘ஸ்விக்கி’ நிறுவன சிஇஓ என பாய்ச்சல் காட்டிய கதை.
இந்தியாவிலேயே அதிக மதிப்பு மிக்க யூனிகார்னை உருவாக்கிய இணை நிறுவனரும், சிஇஓவுமான ஸ்ரீஹர்ஷா மெஜட்டியின் கதை, புதிதாக தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, உணவு டெலிவரியில் ஸ்விக்கி மற்றும் ஜோமேட்டோ நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. குறிப்பாக ஃபுட் டெலிவரி துறையில் மதிப்புமிக்க யூனிகார்ன் நிறுவனமாக ஸ்விக்கி விளங்குகிறது. ஸ்விக்கியின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓவான ஸ்ரீஹர்ஷா மெஜட்டியின் வளர்ச்சி குறித்து சற்றே விரிவாகப் பார்க்கலாம்.
யார் இந்த ஸ்ரீஹர்ஷா மெஜட்டி?
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்ரீஹர்ஷா மெஜட்டி, ராஜஸ்தானின் பிலானியில் உள்ள புகழ்பெற்ற பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸில் பி.இ. பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஐஐஎம்-கல்கத்தாவில் எம்பிஏ பட்டம் பெற்றார். ஸ்ரீஹர்ஷாவின் தந்தை விஜயவாடாவில் உணவகம் நடத்தியவர். அவரது தாய் மருத்துவராக சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தியுள்ளார். இதனால் ரத்தத்திலேயே பிசினஸ் கலந்திருந்ததால், ஸ்ரீஹர்ஷாவுக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
லண்டனில் முதலீட்டு வங்கியாளராக சிறிது காலம் பணியாற்றிய பிறகு, இந்தியா திரும்பிய ஸ்ரீஹர்ஷா தனது சொந்தத் தொழிலை தொடங்க முடிவெடுத்தார். அப்போது இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்த தருணம், ஆனால் டெலிவரி கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனைக் கவனித்த ஸ்ரீஹர்ஷா சின்னச் சின்ன கொரியர் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வேலையில் இறங்கினார். தனது நண்பரான நந்தன் ரெட்டியுடன் இணைந்து "பண்ட்ல்" என்ற முதல் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான இது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் 2014-ம் ஆண்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
ஸ்விக்கி உருவான கதை:
இந்தியாவில் ஓலா மற்றும் உபெர் போன்ற நிறுவனங்கள் வெற்றிகரமாக இருப்பதைப் பார்த்த ஸ்ரீஹர்ஷாவுக்கு இதனை உணவு டெலிவரித் துறையில் கொண்டு வரும் எண்ணம் உதயமானது. தொழில்நுட்பம் மற்றும் மொபைல் போன்களின் வசதியைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி சேவையை வழங்க முடிவெடுத்தார். ஸ்விக்கி நிறுவனத்தை உருவாக்க ஸ்ரீஹர்ஷாவிற்கு முதலீட்டை விட நல்லவொரு புரோகிராமர் தேவைப்பட்டார். ராகுல் ஜெய்மனி என்ற டெக்கியுடன் இணை நிறுவனராக இணைந்து, 2014-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள சிறிய அலுவலகம் ஒன்றில் ‘ஸ்விக்கி’ நிறுவனத்தை தொடங்கினார்.
இந்நிறுவனம் 2015-ம் ஆண்டு முதல் சுற்றிலேயே 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டியது. 2018-ம் ஆண்டில், ஸ்விக்கி யூனிகார்ன் அந்தஸ்தையும், 2022-ம் ஆண்டு $10.7 பில்லியன் மதிப்பீட்டில் ஒரு டெகாகார்ன் நிறுவனமானது.
ஒரு நிறுவனத்தின் மதிப்பு ஒரு பில்லியன் டாலர்களை தாண்டும்போது யூனிகார்ன் அந்தஸ்தையும், 10 பில்லியன் டாலரை தாண்டும்போது டெகாகார்ன் அந்தஸ்தையும் பெறுகிறது.
2019-ம் ஆண்டு 100 நகரங்களில் சேவை வழங்கி வந்த ஸ்விக்கி நிறுவனம் அடுத்த ஆண்டே 500 நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்தியது. தற்போது வரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் உணவகங்களுடன் கூட்டு சேர்ந்து 500 நகரங்களிலும் டெலிவரி செய்து வருகிறது.
ஆரம்பத்தில் வெறும் 4, 5 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட ஸ்விக்கி நிறுவனத்தில் இப்போது, 5000 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 2 லட்சத்து 60 ஆயிரம் டெலிவரி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.