‘அப்பா எனக்கு அனுப்பிய முதல் இ-மெயில்’ - 25 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த சுந்தர் பிச்சை!
25 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்நுட்பம் எப்படி இருந்தது என்பதை குறிப்பிட்டு தனது தந்தை முதன்முதலில் எழுதிய ஈமெயில் குறித்த நினைவுகளை கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு இ-மெயில் கதை அல்லது முதன்முதலில் எழுதப்பட்ட இ-மெயில் பற்றிய பிளாஸ்பேக் இருக்கும். சிலருக்கு தாங்கள் அனுப்பிய அல்லது பெற்ற முதல் இ-மெயில் கதை இருக்கும். கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையும் அதற்கு விதிவிலக்கானவரல்ல, அவர் தன்னுடைய அப்பாவிடம் இருந்து பெற்ற முதல் இ-மெயிலின் சுவாரஸ்யம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
கூகுளின் வெள்ளிவிழா அதாவது, 25வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் போது, ஒரு கருத்தை பகிர்ந்துள்ள சுந்தர்பிச்சை, 25 ஆண்டுகளில் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டிருக்கிறது என்று நினைத்துப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போது என்னுடைய அப்பா இந்தியாவில் முதன்முதலாக அவருடைய இ-மெயில் முகவரியைப் பெற்றார். அவருடன் எளிய முறையில் மிக விரைவாக தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க முடியும் என்கிற இந்த விஷயம் என்னை ஆச்சரியமடைய வைத்தது. அதனால் முதன்முதலில் என்னுடைய இ-மெயில் ஐடி-யை அவருக்கு அனுப்பினேன்,” என்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர்பிச்சை.
நீண்ட காத்திருப்பு
அப்பாவிற்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்று கொண்டிருந்தன. ஒரு வழியாக இரண்டு நாட்களுக்குப் பிறகு,
“அன்புள்ள திரு.பிச்சை, மின்னஞ்சல் கிடைத்தது, அனைத்தும் நலம்...” என்று பதில் வந்தது.
தந்தை மகனுக்கு இடையேயான உரையாடல் போல இல்லாமல் பதிலானது அலுவல் ரீதியிலும், தாமதமாகவும் வந்ததால் என்னவாக இருக்கும் என்று நான் அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன் என்று பிச்சை குறிப்பிட்டுள்ளார். விஷயம் என்னவென்றால்,
மின்னஞ்சலை யாருடைய அலுவலகத்தில் இருந்தாவது அச்சிட்டு பிரதி எடுத்து வந்து கொடுத்த பின்னர் அப்பா அதைப் படித்துவிட்டு பதிலை தெரிவிக்க அதனை அந்த நபர் வந்து மெயில் அனுப்பியுள்ளார், என்று தெரிய வந்தது.
என்னுடைய அப்பா எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதையும் தற்போது தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளது என்பதை என்னுடைய மகன் அதனை பயன்படுத்துவதை வைத்து நான் ஒப்பிட்டு பார்க்கிறேன்.
“தொழில்நுட்பத்தை இன்றைய தலைமுறை குழந்தைகள் அதிவிரைவாக கற்றுக்கொள்கிறார்கள். கைகடிகாரத்தில் இருந்தே தொலைபேசி அழைப்பை எடுத்து பேசுவது, ஆடியோ சென்சார் மூலம் காரில் பாடலை ஒலிக்கவிடுவது என என்னுடைய அப்பாவிற்கு எதெல்லாம் மாயாஜால அறிவியலாக இருந்ததோ, அவற்றை என்னுடைய மகன் சர்வ சாதாரணமாகச் செய்கிறான்...” என்று பிச்சை கூறியுள்ளார்.
கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ஆராய்ச்சி மாணவர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் கூகுளை உருவாக்கினர். 1998 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் உலகிலுள்ள தேடல் தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட ஒரு வலைதளமாகும்.
ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர், இன்று சுந்தர் பிச்சை வீட்டை வாங்கியது எப்படி?