Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

2K கிட்ஸை வில்லிசை பக்கம் ஈர்த்த 19 வயது ‘வில்லுப்பாட்டு மாதவி’

தமிழகத்தில் அழிந்துவரும் நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்றான வில்லிசைக்கு புத்துயிரூட்டி வரும் 19 வயது வில்லுப்பாட்டுக் கலைஞர் மாதவி இன்றைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மகத்தானது.

2K கிட்ஸை வில்லிசை பக்கம் ஈர்த்த 19 வயது ‘வில்லுப்பாட்டு மாதவி’

Thursday April 27, 2023 , 4 min Read

யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ‘வில்லுப்பாட்டு மாதவி’ என்று டைப் செய்தாலே நூற்றுக்கணக்கான வீடியோ பதிவுகளை அள்ளித் தருகிறது ஆன்லைன் அல்கரிதம். அந்த அளவுக்கு இணையத்திலும் வைரல் நட்சத்திரமாக வலம் வரும் மாதவி, தமிழறிந்த 2கே கிட்ஸ் பலரிடமும் வில்லுப்பாட்டுக் கலையைக் கொண்டு சேர்த்திருக்கிறார்.

தென் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில், குறிப்பாக கோடைக்கால திருவிழாக்களில் நடைபெறுகின்ற கலை நிகழ்ச்சிகளில் இப்போது மாதவியின் வில்லுப்பாட்டுக்கு நல்ல மவுசு. தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையே வசப்படுத்தியுள்ள மாதவி, தெள்ளத் தெளிவான தமிழில், தனக்கு இயல்பாய் வரும் வட்டார வழக்கில் மக்களை மகிழ்விக்கிறார்.

மாதவியின் தமிழ் உச்சரிப்பும் பாடும் விதமும் பாவனைகளும் பார்வையாளர்களை அப்படியே கட்டிப்போடச் செய்பவை. கடந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான வில்லிசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள மாதவி தன் திறமையால் ஏழ்மை நிலையில் இருந்த தனது குடும்பத்தையும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

villupaatu madhavi

யார் இந்த வில்லுப்பாட்டு மாதவி?

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அச்சங்குன்றம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த மாதவியின் தந்தை மாரிசெல்வம் ஒரு கொத்தனார். தாய் மாலதிக்கோ பீடி சுற்றும் வேலை. வீட்டில் இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன். இந்தக் குடும்பப் பின்னணி கொண்ட மாதவி இன்று வில்லிசைக்குப் புத்துயிர் ஊட்டிக்கொண்டே, அந்தத் திறமையால் தன் குடும்பத்தின் நிலையை உயர்த்தவும் பங்கு வகித்து வருகிறார்.

“என்னோட சின்ன வயசுல தாத்தா - பாட்டி ஊர்ல நடக்குற கோயில் விழாக்களுக்கு குடும்பத்தோட போறப்ப, அங்க நடக்குற வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை ஆர்வத்தோட பார்ப்பேன். அதுல, வில்லுப்பாட்டுக் குழுவினர் பல்வேறு கருவிகளால் எழுப்புகிற இசைக்கு ஏத்தமாதிரி நடுவுல கம்பீரமாக ஒரு பெண் அமர்ந்து பாடுவதைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கும். அது எனக்கு ரொம்ப தாக்கத்தை ஏற்படுத்துச்சு. அதனால, வில்லுப்பாட்டு எங்கே நடந்தாலும் சென்று ரசிப்பேன். எனக்குள்ள வில்லிசை மீது தீராதக் காதல் வந்துடுச்சு.”

இப்படி எந்தப் பின்னணியும் இல்லாமல் வில்லுப்பாட்டு மீது ஆர்வம் வந்த கதையை பேட்டி ஒன்றில் விவரித்துள்ள மாதவியை வில்லிசைக் கலைஞராக்கியதில் அவரது குடும்பத்துக்கும் பெரும் பங்கு உண்டு.

வில்லுப்பாட்டு மீது ஆர்வம் கொண்ட மாதவியை விளையாட்டாக வீட்டில் வில்லுப்பாட்டு பாடச் சொல்லி குடும்பத்தினர் கேட்டு ஊக்கப்படுத்துவர். மகளின் திறமையைக் கண்டு வியந்த தாயும் தந்தையும் அவரை முறைப்படி வில்லுப்பாட்டு கற்கவும் துணைபுரிந்தனர்.

உறவினர்களின் எதிர்மறைப் பேச்சுகளைக் காதில் போட்டுக்கொள்ளாமல் வில்லுப்பாட்டுக் கலையைக் கற்க ஆரம்பித்தார். வி.கே.புதூர் இசக்கி புலவர், வல்லம் மாரியம்மாள் மற்றும் கடையநல்லூர் கணபதி புலவர் ஆகியோரிடம் வில்லிசைப் பயிற்சியை மிகக் குறைந்த காலத்திலேயே நிறைவாகப் பெற்றார்.

villu pattu madhavi

மாதவி தனது 14 வயதில் சொந்த ஊரின் முத்தாரம்மன் கோயிலில்தான் தனது முதல் வில்லுப்பாட்டு அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். முதல் நிகழ்ச்சியிலேயே ஊர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இவரது திறமை பக்கத்து ஊர்களில் பரவ, இதோ இந்த 4 ஆண்டுகளில் தென்னகம் முழுவதும் மேடை ஏறிவிட்டார் மாதவி.

யூடியூபில் பதிவான இவரது நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு வடமாநிலங்களில் உள்ள தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்தும் அழைப்பு வந்திருக்கிறது. உலக அரங்கில் வில்லுப்பாட்டைக் கொண்டு செல்லும் விருப்பம் உள்ள மாதவிக்கு விரைவில் வெளிநாடுகளில் இருந்தும் அழைப்பு வந்தாலும் ஆச்சரியமில்லை.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் முழுநேர வில்லிசைக் கலைஞர் ஆனார். அதனால் படிப்பைத் தொடர முடியாவிட்டாலும் பத்தாம் வகுப்பை தொலைதூரக் கல்வி மூலம் முடித்துவிட்டார். கல்வியைத் தொடரவும் முடிவு செய்திருக்கிறார்.

வில்லுப்பாட்டுக்கு புத்துயிர்

கோயில் திருவிழாக்களில் வெவ்வேறு கலை, இசை நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதால், வில்லிசைக்குப் புகழ்பெற்ற தென்மாவட்டங்களிலேயே கூட வில்லுப்பாட்டுக்கு முக்கியத்துவ குறைந்து அழியும் விளிம்பு நிலையில் இருந்து வந்ததுதான் நிஜம்.

அந்நிலை இப்போது மாறி, மீண்டும் வில்லுப்பாட்டு கலைகட்ட தொடங்கியிருப்பதற்கு மிக முக்கியக் காரணம், மாதவியின் பங்களிப்பு என்றால் அது மிகையில்லை.

“பல ஊர்களில் இருந்து எங்களைப் பாட அழைப்பர். பக்கத்து ஊர் என்றால் அப்பாவுடன் இரு சக்கர வாகனத்திலேயே சென்றுவிடுவேன். கொஞ்சம் தூரமாக இருந்தால் பஸ்ஸில் செல்வோம். என் எல்லா பயணங்களிலும் அப்பா உடன் இருப்பார். அவர்தான் பக்கபலமாக இருக்கிறார்,” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் மாதவி.

பொதுவாக, இரவு 9 மணியளவில்தான் அனைத்துக் கோயில்களிலும் வில்லுபாட்டு நிகழ்ச்சி தொடங்கி இரவு 1 மணி வரை நடக்கும். சில நேரங்களில் அதிகாலை 3 அல்லது 4 மணி வரை கூட நிகழ்ச்சி தொடரும். துளியும் களைப்படையாமல் தொடர்ச்சியாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களையும் இசையில் மயக்குவதில் மாதவி வல்லவர்.

மாதவி அங்கம் வகிக்கும் குழுவில் ஆறேழு கலைஞர்கள். அந்தந்த கோயில்களின் வரலாறு, கடவுள்களின் கதைகள், புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு கதைகளும் பாடல்களும் அமைத்து இந்தக் குழு வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தும். கூடவே, பாரம்பரியம், கலாசாரம் சார்ந்த தகவல்களுடன் கருத்துகளையும் இடையிடையே சொல்வது மாதவியின் பாணி. இதற்கும் அவரது குழுதான் ஹோம் ஒர்க் செய்து உதவும்.

அந்த வகையின் மாதவின் கருத்துகள் பலவும் ஷார்ட்ஸ், ரீல்ஸ்களாக வைரல் ஆவதையும் கவனிக்கலாம். அந்தக் கருத்துகள் சிலவற்றில் பெண்களுக்குப் பாடங்கள் என்ற பெயரில் சில பிற்போக்கான கருத்துகள் இருப்பதையும் கவனிக்க முடிகிறது. அதுபோன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, தற்காலத்துக்கு ஏற்ப முற்போக்குக் கருத்தாக்கங்களை வில்லுப்பாட்டின் ஊடாக கொண்டுவந்தால் இன்னும் சிறப்பு.

நம் கண்முன்னே அழிந்துவரும் கலைகளுள் ஒன்றான வில்லிசையை மீட்கும் தேவதையாகவே நமக்கு மாதவி தோன்றுகிறார். அதேபோல், தான் புத்துயிரூட்டும் வில்லிசைதான் தனக்கும் தன் குடும்பத்துக்கும் உறுதுணையாக இருப்ப்பதையும அவர் புரிந்துவைத்திருக்கிறார்.

வில்லிசை என்பது தன்னோடு நின்றுவிடக்கூடாது என்பதற்காக இளம் தலைமுறைக்கு வில்லுப்பாட்டுக் கலையைச் சொல்லித் தரும் எதிர்காலத் திட்டமும் மாதவியிடம் இருப்பது மகத்தான எண்ணம்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மேடைகளில் வில்லுப்பாட்டு நிகழ்த்திய மறைந்த பெரும் கலைஞரான பூங்கனி, வில்லிசைக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது. வில்லிசை வரலாற்றில் தவிர்க்க முடியாத பெண் கலைஞர்களில் முக்கியமானவரான பூங்கனிக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு, மாதவிக்கு கிடைத்திருப்பது நவீனத்தின் நன்மை.

ஆம், மாதவியின் நிகழ்ச்சிகளை முழுமையாகவும், செல்போன் பதிவுகளாகவும் இணையத்தில் பதிவேற்றப்படுவது அவரது திறமையை உலகுக்கு பரவச் செய்வதுடன், 2கே கிட்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வில்லுப்பாட்டு மீது வசீகரமும் ஈடுபாடும் கொள்ள வழிவகுத்துள்ளது.


Edited by Induja Raghunathan