மாட்டுச் சானம் மூலம் பொருட்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப்'களுக்கு 60% வரை அரசு நிதியுதவி!
பசு மாட்டுச்சானம் கொண்டு பொருட்களை தயாரிக்கும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பது தொடர்பான முயற்சியில் தேசிய பசு ஆணையம் ஈடுபட்டுள்ளது.
பசு மாட்டின் கழிவுகளை அடிப்படையாகக் கொண்டு பொருட்களைத் தயாரிக்கும் வர்த்தக மாதிரியை ஊக்குவிக்கும் வகையில், இத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 60 சதவீத ஆரம்ப நிதி உதவி அளிக்க தேசியப் பசு ஆணையம் திட்டமிட்டிருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்ற பால் பொருட்களுடன், பசுவின் கழிவுகளை வர்த்தக ரீதியாக ஸ்டார்ட் அப்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
”பசு மாடு சார்ந்த தொழில்முனைவில் இளைஞர்கள் ஈடுபட்டு, பால், நெய் மூலமாக மட்டும் அல்லாமல், மருத்துவ மற்றும் விவசாயப் பலன்கள் கொண்ட பசுமாடு சிறுநீர் மற்றும் சானம் வாயிலாகவும் வருமானம் ஈட்ட ஊக்குவிக்க விரும்புகிறோம்,” என்று ஆணையத்தின் தலைவர் வல்லப் கத்தாரியா கூறியதாக தேசிய நாளிதழ் ஒன்று தெரிவிக்கிறது.
இத்தகைய பொருட்களில் ஸ்டார்ட் அப்கள் ஆர்வத்தை ஈர்க்கும், உத்திகளை வகுக்க கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த செய்தியை முதலில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டது.
பசு மாடு கழிவுகள் சார்ந்த பொருட்களின் மருத்துவக் குணம் தொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் ஆணையம், அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான மேடையை அளிக்க உள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவங்களை பாரம்பரிய வர்த்தகத்திற்கு கவனத்தை மாற்றும் வகையில், கோசாலைகள் பராமரித்து வருபவர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் வளர்ச்சி முகாம்களை ஆணையம் நடத்த உள்ளது.
2018 செப்டம்பரில், இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு, இத்தகைய பசு பாதுகாப்பு மையங்களின் மோசமான பராமரிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது. 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், விலங்குகள் பதிவேடு பராமரிக்கப்படவில்லை என்றும், ஆரோக்கியமான மற்றும் நோய்வாய்ப்பட்ட மாடுகள் பிரித்து வைக்கப்படவில்லை என்றும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் கறக்கும் பருவத்தை கடந்த பிறகு பசுக்களின் நலனை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் அரசால் அறிவிக்கப்பட்டன. இந்த நோக்கத்துடன், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ராஷிடிரிய காமதேனு ஆயோக் என்றும் குறிப்பிடப்படும் ஆணையம் அமைக்கப்பட்டது.
பசு வளர்ப்பு, இயற்கை உரம், பயோகேஸ் உள்ளிட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள மத்திய மற்றும் மாநிக கால்நடை அறிவியல் அல்லது விவசாயத் துறையுடன் இணைந்து இந்த ஆணையம் பணியாற்றுகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்நோம் | தமிழில்: சைபர்சிம்மன்