நிஜ மலர்கள் ஜடை அலங்காரம்: வித்தியாசமான தொழிலில் ஜெயித்த ஜீவா!
‘தலைமுடியை விரித்துச் செல்லும் மாடர்ன் பெண்களும், திருமணம், வளைகாப்பு நேரங்களில் பூக்கள் கொண்டு ஜடை அலங்காரம் செய்து கொள்ள விரும்புகின்றனர்’ - ஜீவா
பெண்கள் வாழ்க்கையில் பூக்களின் பங்கு இன்றியமையாதது என்று தான் சொல்ல வேண்டும். என்னதான் நாகரீகம் என்ற பெயரில் தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு செல்லும் மாடர்ன் பெண்களாகவே இருந்தாலும், திருமணம், வளைகாப்பு என என அவர்களின் வாழ்க்கையிலும் ஜடை அலங்காரம் தவிர்க்க முடியாததாகவே உள்ளது.
அதிலும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான நாளான திருமணத்தன்று தங்களது உடை மற்றும் ஜடை அலங்காரத்தில் அவர்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்கின்றனர். பெண்களின் இந்த பூக்கள் மீதான ஆர்வத்தையே தனது வியாபாரமாக செய்து மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளார் பார்ட்டி பெட்டல்ஸ் உரிமையாளர் ஜீவா.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவரான ஜீவா, திருமணமாகி சென்னைக்கு வந்தவர். தனது ஊரில் விதவிதமான பூக்கள் கிடைக்கும் என்பதால், அவற்றை விதவிதமாக கட்டி உடையின் நிறத்திற்கு ஏற்றவாறு தலையில் சூடி பழக்கப்பட்டவர் ஜீவா. ஆனால் சென்னையில் அவர் வசித்த பகுதியில் அந்தளவுக்கு விதவிதமான பூக்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் ஊருக்குச் சென்று திரும்பி வரும் போதெல்லாம் அங்கு தனக்குப் பிடித்த மாதிரியான பூக்களையும் அவர் வாங்கி வந்துள்ளார்.
அப்படியாக அவர் விதவிதமான மலர்களை வைப்பதைப் பார்த்து அக்கம்பக்கத்தார் அவரிடம் விசாரித்துள்ளனர். தங்களுக்கும் இதே போல் செய்து தர முடியுமா என அவர்கள் கேட்டுள்ளனர். அதோடு அக்கம்பக்கத்து வீட்டு குழந்தைகளின் பிறந்தநாளுக்கும் இப்படி விதவிதமான பூக்களைக் கொண்டு ஜடை அலங்காரமாகச் செய்து கொடுத்துள்ளார் ஜீவா. அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அக்கம்பக்கத்தார் மூலம் முன்பின் அறிமுகமில்லாதவர்களும் ஜீவாவிடம் ஜடை அலங்காரம் செய்து தரச் சொல்லி கேட்டு வந்துள்ளனர். இப்படியாக மக்களிடம் கிடைத்த எதிர்பாராத வரவேற்பைத் தொடர்ந்து இதையே ஒரு தொழிலாகச் செய்தால் என்ன என்ற எண்ணம் ஜீவாவிற்கு தோன்றியது. அதன் விளைவாக உருவானதே ‘பார்ட்டி பெட்டல்ஸ்.’
“இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு விதவிதமாக ஹேர்கட் செய்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக உள்ளது. கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் பெண்கள் மற்ற நாட்களில் எப்படி இருந்தாலும், திருமணம் மற்றும் வளைகாப்பு அன்று நம் பாரம்பரிய முறைப்படி பூக்களைக் கொண்டு ஜடை அலங்காரம் செய்து கொள்வதையே பெரிதும் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாடர்னாக வண்ணமயமாக பூக்கள் அலங்காரம் செய்து தருகிறேன்,” என்கிறார் ஜீவா.
முதலில் பொழுதுபோக்காக ஆரம்பித்த இந்த மலர் அலங்காரம் இன்று ஜீவாவிற்கு வருமானத்தோடு, மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது. நிச்சயதார்த்தம், முகூர்த்தம், ரிசப்ஷன், பிறந்தநாள் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் வெவ்வேறு வகைகளில் ஜடை ரகங்களைத் தயார் செய்து தருகிறார் ஜீவா.
“இயற்கைப் பூக்களை மட்டுமே பயன்படுத்துவது தான் பார்ட்டி பெட்டல்ஸின் சிறப்பு. புடவையின் நிறம் மற்றும் டிசைனுக்கு மேட்சிங்காக ஜடையை வடிவமைப்பதுதான் இதில் உள்ள சுவாரஸ்யமான சவால். இதுபோன்ற டிசைனர் ஜடைகளை பிரத்யேகமாக தயாரிக்க அதிக நேரம் எடுக்கும். சமயங்களில் ஒரு ஜடைக்கு தேவையான மலர் அலங்காரத்தை உருவாக்க ஐந்து நாட்கள் கூட ஆகும்.
“மலர்களை வெளியில் வைக்கும் நேரம் அதிகமாக இருந்தால், அவை எளிதில் வாடி விடும் என்பதால் விரைவாக செய்து முடிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. சில நாட்கள் இரவு முழுவதும் கண் விழித்து உழைத்தால்தான் காலையில் முகூர்த்தத்திற்கு பிரஷ்ஷான மலர்களைத் தர முடியும்” என தன் தொழிலில் உள்ள நெளிவு சுளிவுகள் பற்றி சொல்கிறார் ஜீவா.
குறைந்தபட்சமாக 1,000 ரூபாயில் இருந்தே தலையலங்கார பூக்கள் செய்து தருகிறார் ஜீவா. மனைவியின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தியும் உறுதுணையாக இருக்கிறார். ஜீவாவால் போக இயலாத நாட்களில் அவரது கணவரே கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு சென்று விதவிதமான மலர்களை வாங்கி வந்து கொடுக்கிறார். அதோடு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு ஜடை அலங்காரத்தை டெலிவரி செய்யவும் உதவியாக இருக்கிறார்.
பல வண்ண மலர்களின் இதழ்களை ஒரு கோர்வையாக சேர்த்து ஜடை அலங்காரம் செய்கிறார் ஜீவா. நிஜ மலர்களோடு வேறுசில பொருட்களைக் கொண்டு அலங்கரிப்பதும் அவருக்கு கை வந்த கலை. பெண்கள் பெரும்பாலும் எல்லா விசயங்களிலும் மேட்சிங் பார்ப்பார்கள் என்பதால், ஆர்டர் தரும் பெண்களின் உடை வண்ணத்திற்கு ஏற்ப மலர்களைத் தேர்வு செய்கிறார் ஜீவா. நிஜத்தில் அது போன்ற வண்ணத்தில் நிஜ மலர்கள் கிடைக்காத பட்சத்தில், பிளாஸ்டிக் பூக்களைப் பயன்படுத்தாமல், நிஜ மலர்களின் மீது தேவையான நிறத்தில் பெயிண்ட் அடித்து ஜடை அலங்காரம் உருவாக்குகிறார்.
“நவீன கால பெண்கள் மலர்களை தவிர்த்து புதுவிதமான அலங்காரங்களையும் விரும்பிக் கேட்கிறார்கள். அப்படி உருவானதுதான் முந்திரி ஜடை அலங்காரம். இதில் மலர்களுடன் முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் சேர்க்கப்பட்டிருக்கும். சில அலங்காரங்களில் பொம்மைகளையும் பயன்படுத்துகிறேன்” என்கிறார், ஜீவா.
முதுகலை பட்டம் பெற்றவரான ஜீவா, பெண்கள் வேலைக்கு என வெளியில் சென்று மற்றவர்களிடம் வேலை பார்ப்பதைவிட, இது போன்ற தங்களுக்கு விருப்பமான துறையில் வித்தியாசமாக சிந்தித்து தொழில் தொடங்குவது நல்லது எனக் கூறுகிறார். ஏனென்றால் சுயதொழில் மூலம் வீட்டையும் பார்த்துக் கொள்ள முடியும், வருமானத்தையும் பெருக்கிக் கொள்ள முடியும் என்பது அவரது கருத்து.
மாதத்தில் முகூர்த்த நாட்களில் மட்டுமே ஜீவாவிற்கு வேலை இருக்கும் என்பதால், மற்ற நாட்களில் இந்த ஜடை அலங்கார முறையை வகுப்பாக எடுக்கிறார் ஜீவா. இதன் மூலம் மேலும் பலருக்கு தொழில் வாய்ப்பையும் அவர் ஏற்படுத்தித் தருகிறார். நேரடி ஆர்டர்கள் மட்டுமின்றி, ஜீவாவிற்கு பல அழகு நிலையங்களில் இருந்தும் ஆர்டர்கள் கிடைக்கின்றன.
ஜீவாவிற்கு தர்ஷன் மற்றும் சவுந்தர் என்ற இரு மகன்கள் உள்ளனர். குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு தனது தொழிலையும் சிறப்பாக செய்து வரும் ஜீவா, சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.
படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றில்லாமல், தனக்கு பிடித்தமான ரசனையான விசயங்களிலும் வித்தியாசமாக சிந்தித்து பொருள் ஈட்டலாம் என்பதற்கு நல்ல உதாரணமாகி இருக்கிறார் ஜீவா.