தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ’யாதும் ஊரே’, ’தொழில் தோழன்’ திட்டங்கள்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், தொழில்முனைவோர்கள் குறைகளை களையவும், ’யாதும் ஊரே’, ’தொழில் தோழன்’ உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தனியாருடன் இணைந்து தொழிற் பூங்காக்களை சிப்காட் நிறுவனம் உருவாக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவை எண் 110 விதியின் கீழ், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விவரம் வருமாறு:
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, முதலீட்டு தூதர்கள் உருவாக்கி, தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு உருவாக்கப்படும். இதற்காக ’யாதும் ஊரே’ என்ற தனிச் சிறப்பு பிரிவு மற்றும் இணையதளம் ரூ. 60லட்சம் செலவில் அமைக்கப்படும்.
முதலீட்டை ஈர்க்கும் வகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும் முதலீட்டாளர்களை அடையாளம் காணவும், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும், ஜப்பான், அமெரிக்கா, கொரியா, சீனா, தைவான் ஆகிய நாடுகளுக்கு என தனி அமர்வுகள் அமைக்கப்படும். தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பிரிவு துவங்கப்படும்.
மேலும், தொழில் வளர் தமிழகம் எனும் பெயரில், நவீன உத்திகளை பயன்படுத்திக் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும். இணைய வழி விழிப்புணர்வும் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் தொழில் துவங்க 20 ஏக்கர் அல்லது அதற்கு மேல் நிலம் அளிக்க முன்வரும் தனியார் மற்றும் தொழில் முதலீட்டாளர்களை இணைக்கும் வகையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு இணையதளம் அமைக்கப்படும்.
அதே போல, தொழில் நிறுவனங்களுக்கான குறைதீர் வழி முறைகளை அளிக்க, ’தொழில் தோழன்’ எனும் இணையம் அடிப்படையிலான வழிமுறை உருவாக்கப்படும். நான்கு வாரங்களுக்குள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும்.
ஏற்றுமதிக்கான உட்கட்டமை வசதிகளை மேம்படுத்தி, உடனடியாக தொழில் துவங்க ஏற்ற வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம்- வடகல், மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் அனைத்து வசதிகளும் கொண்ட தொழிற்கூட கட்டிடங்கள் ரூ. 50 கோடியில் அமைக்கப்படும்.
இதே போல, வல்லம்- வடகால் மற்றும் இராணிப்பேட்டை சிப்காட் தொழில் பூங்காக்களில், தொழிற்சாலை பணியாளர்களுக்கு குடியிருப்பு வசதி ஏற்படுத்தித் தரும் வகையில், ரூ,50 கோடியில் குடியிருப்புகள் கட்டப்படும். சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில், ரூ.40 கோடியில், 50,000 சதுர அடியில், வணிக வசதிகள் மையம் உருவாக்கப்படும்.
கருத்தரங்குக் கூட்டங்கள், பயிற்சி அமையங்கள் ஆகிய வசதிகளை இந்த மையம் கொண்டிருக்கும். அனைத்து மாவட்டங்களையும் தொழில்மயமாக்கும் வகையில், 100 ஏக்கர் அல்லது அதற்கு மேல் நிலம் வைத்துள்ள தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து தொழிற்பூங்காங்களை சிப்காட் நிறுவனம் உருவாக்கும். இவற்றுக்கு சிப்காட் தொழிற்பூங்காக்களுக்கான சலுகை நீட்டிக்கப்படும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி திறனை மேம்படுத்தவும், தொழில் விரிவாக்கத்திற்கும் 3 சதவீத மானிய வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இது 6 சதவீதமாக உயர்த்தப்படும். இதன் மூலம், ஆண்டுதோறும் 400 புதிய சிறு மற்றும் குறு நிறுவனங்கள் உருவாகவும், 1,200 சிறு மற்றும் குறு நிறுவனங்கள் விரிவாக மற்றும் 10,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவும் வழி செய்யப்படும். இதற்கான கூடுதல் மானிய தொகையான 33 கோடியை அரசே ஏற்கும்.
கோவையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் இடத்தேவையை கருத்தில் கொண்டு, அருகே ரூ.200 கோடியில், 9 ஏக்கரில் கூடுதலாக தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பத்தூரில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு பூங்காவில் அமைய உள்ள, உயர் கணிணி மற்றும் வடிவமைப்பு மையத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும். ஒரு லட்சம் சதுர அடியில், ரூ.100 கோடியில் இந்த மையம் அமையும்.
இவைத்தவிர, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தியை பெருக்கிக் கொள்ள, நவீன தொழில்நுட்ப இயந்திரங்களை நிறுவிக்கொள்வதற்கான 25 சதவீத முதலீட்டு மானியத்தின் உச்ச வரம்பு தற்போதைய ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கயிறு தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2.33 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.