வேம்பென கசக்கும் ஆங்கிலத்தை, அமிர்தமாக்கி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புகட்டும் கோவை ஆசிரியை...
ஆங்கிலம் என்றாலே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேம்பாக கசக்கும், அம்மொழில்யின் மீது ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக, பாடங்களை, மெட்டோடு பாட்டாக பாடி, கற்பித்தலை ஓர் மகிழ்ச்சியான நிகழ்வாக மாற்றி வருகிறார்.
அரசுப் பள்ளி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்றாலே சமுதாயத்தில் ஓர் இளக்காரம். அதேநேரத்தில் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் என்றால் ஓர் மரியாதை, பெருமை. சமுதாயத்தின் இப்பார்வை தவறானது.
”அரசுப் பள்ளி மாணவர்களிலும் முத்துக்களும், வைரங்களும் உள்ளனர். ஓவ்வொரு மாணவனும் ஓர் வகையில் சிறப்பானவனே. சரியான முறையில் கற்பித்தால், ஓவ்வொரு மாணவ, மாணவியும் சிகரம் தொடுவார்கள்,” என்கிறார் கோவையைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியை இவாஞ்சலின் பிரிசில்லா.
இவர், சமீபத்தில் தேசிய கீதத்தை தமிழில் பாடி, அதை 3 நாள்களில் 6 மில்லியன் பேரை பார்க்க வைத்த சாதனைக்குச் சொந்தக்காரர். அதுமட்டுமின்றி, ஆங்கிலம் தெரியவில்லை என்ற ஓர் காரணத்தினால், தாழ்வுமனப்பான்மையால் எந்த மாணவனின் முன்னேற்றமும் தடைபட்டுவிடக் கூடாது என்பதால், தினசரி தான் ஆங்கிலப் பாடம் நடத்தும்போது, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பாக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளையும் நடத்துகிறார் பிரிசில்லா.
ஆங்கிலம் என்றாலே வேம்பாக கசக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக, பாடங்களை, ஆங்கிலப் பாடல்களை மெட்டோடு பாட்டாக பாடி, கற்பித்தலை ஓர் மகிழ்ச்சியான நிகழ்வாக மாற்றி வருகிறார். இதுகுறித்து அவர் நமக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
எனக்கு சொந்த ஊர் ஏற்காடு. நான் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்விதான் பயின்றேன். ஆனால் நாங்கள் குடியிருந்த பகுதியில் ஏராளமான ஆங்கிலேயர்கள் குடியிருந்தனர். இதனால் எனது தந்தையும் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவார். ஆனால் எனக்கு மட்டும் ஆங்கிலம் அவ்வளவு எளிதாக வரவில்லை.
இதற்காகவே நான் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிலும்போது, தினசரி 5 வாக்கியங்களை படித்து மனப்பாடம் செய்து எனது தந்தை மற்றும் எனது வகுப்புத் தோழிகளுடன் பேசிப் பழகினேன். இவ்வாறு கஷ்டப்பட்டுத்தான் நானும் ஆங்கிலம் பழகினேன். அதனால்தான் இன்று என் அனுபவத்தைப் பயன்படுத்தி, என் மாணவர்கள் கஷ்டப்படாமல் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்பதற்காக பாடுபடுகிறேன் என்கிறார்.
1994ல் இருந்தே தனியார் பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றிய இவர், 2001ல் ஏற்காட்டில் உள்ள மலைவாழ் மக்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்துள்ளார். 2014ஆம் ஆண்டு அவினாசி அந்தியூர் சாலையில் உள்ள சேயூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார்.
அப்போது 7, 8ஆம் வகுப்பு மாணவர்கள் கூட ஆங்கில அறிவில் மோசமாக இருப்பதைக் கண்டு, அவர்களையும், மற்ற மாணவர்களையும் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இணையாக கொண்டு வரவேண்டும் என லட்சியம் பூண்டுள்ளார்.
”அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் என்றாலே ஓர் வெறுப்பு, பயம். முதலில் அதைப் போக்குவதற்காகவே பாடங்களை மெட்டுக்களோடு பாடல்களாக்கி கற்றலை ஓர் சந்தோஷமான நிகழ்வாக்கினேன். இதனால் அவர்களிடம் இருந்த பயம், வெறுப்பு போன்றவை நீங்கியது.”
தொடர்ந்து, அவர்களுக்கு பாடம் மட்டுமன்றி, ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளையும் எடுத்தேன். மேலும், ஆங்கிலத்தில் தனித்தனியாக எழுதாமல், கூட்டெழுத்தாக எழுதுவது, தமிழில் இருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்வது என மாணவர்களை ஆங்கிலத்தில் வல்லவர்களாக்க என்னென்ன செய்யவேண்டுமோ, அதையெல்லாம் செய்தேன். இப்போது அதில் பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறேன் என்றே கூறவேண்டும்.
முதலில் மாணவர்களை, ஆசிரியர்கள் நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும். அனைத்து குழந்தைகளும் வெவ்வேறானவர்கள். ஓர் குழந்தை உடனடியாக கற்றுக் கொள்வதை, மற்றொரு குழந்தை மெதுவாகத்தான் கற்றுக் கொள்ளும். எனவே இதுபோல மெதுவாக கற்கும் குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்தி கற்பிக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து மாணவர்களையும் ஓர் கட்டத்தில் சமன் செய்துவிடலாம் என்கிறார்.
மேலும், ஆங்கிலம் கற்பித்தல் மட்டுமன்றி மாணவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் திறமை இருக்கவேண்டும் எனக் கூறும் அவர், அவர்களுக்கு பொது அறிவு, நாட்டு நடப்புகள், உலக விஷயங்களையும் கற்றுத் தருகிறார். படிப்பு மட்டுமே உலகமல்ல. எனது மாணவர்களுக்கு அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்கவேண்டும் என்கிறார்.
பொதுவாகவே மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன பிரிவு எடுத்துப் படித்தால் தங்களது எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற விழிப்புணர்வு இல்லை. முதலில் இதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். மேலும்,
“எதிர்காலத்தில் கல்வி கற்க வாய்ப்பின்றி ஏழ்மையில் வாடும் ஏழைக் குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி என கல்வி தொடர்பான அனைத்து விஷயங்களையும் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கவேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியமாகும்,” என்கிறார் ஆசிரியை பிரிசில்லா.
சதா சர்வகாலமும் மாணவர்கள், மாணவர்கள் என்று அவர்களையும் தங்கள் குழந்தைகளைப் போல பாவித்து, அவர்களின் எதிர்காலத்துக்காக சிந்தித்துக் கொண்டிருக்கும் இவர்களைப் போன்ற ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவுத் தீயில், கல்வி தீபமேற்றுவதால்தான், மனிதர்களால் சமுதாயத்தில் சுடர்விட்டு பிரகாசமாக ஜொலிக்க முடிகிறது.