புதுக்கோட்டை முல்லிகாபட்டி கிராமத்தில் 260 கழிவறைகள், பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் - ‘கிராமாலயா’ அமைப்பு ஏற்படுத்திய மாற்றம்!
பாங்க் ஆப் அமெரிக்கா ஆதரவு பெற்ற கிராமாலயாவின் வாஷ்மேன் திட்டம், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தின் முல்லிகாப்பட்டி கிராமத்தில் 260 வீடுகளுக்கு தூய்மையான கழிவறைகளை அளித்து, சுற்றுச்சூழலுக்கு நட்பான மாதவிலக்கு சுகாதார மாற்று தீர்வுகளையும் கற்றுத்தந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முல்லிகாபட்டி கிராமத்தில், 41 ஆண்டுகளில் முதல் முறையாக பெண்களின் சுகாதாரம், கழிவறை வசதியில் மாற்றத்தை செல்வராணி கண்டிருக்கிறார்.
கூரை வேய்ந்த வீட்டில் ஏழு சகோதரிகளுடன் வளர்ந்த செல்வராணி, இயற்கை உபாதை கழிக்க அல்லது மாதவிலக்கு காலத்தில் நாப்கின் மாற்ற வீட்டிற்கு வெளியே மரங்கள் அடர்ந்த பகுதியை தேடிச்செல்ல வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு முன் வரை இந்த கிராமத்தில் உள்ள எல்லா இளம் பெண்களும் இதே அனுபவித்திற்கே உள்ளாகி வந்தனர். அவர்கள் காலை விடியலுக்கு முன் எழுந்து வயல் வெளிக்கு செல்ல வேண்டும், மாதவிலக்கு காலத்தில் கூட ஒற்றை நாப்கினுடன் பல மணி நேரம் கடினமான வேலைகள் செய்ய வேண்டும்.
“இந்த பிரச்னைகளை வாழ்கையின் சில அசெளகர்யங்களாக மட்டுமே பார்த்தோம், ஏனெனில் கிராமங்களில் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது. ஆனால் சகஜமாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், இவை எங்கள் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நேரத்தை பாதித்தன. சுகாதாரமற்ற மாதவிலக்கு சூழலால் நான் பல ஆண்டுகள் வலியால் அவதிப்பட்டிருக்கிறேன்,” என்கிறார் அவர்.
ஆனால், இன்று மல்லிகாபட்டி கிராமம் நெப்புகை பஞ்சாயத்தின் பேசு பொருளாகி இருக்கிறது. கிராமத்தின் 260 வீடுகள் கழிவறைகளுடன் கூடிய கான்கிரீட் குளியலறைகளைக் கொண்டுள்ளன மற்றும் எல்லா இளம் பெண்களும் துவைத்து பயன்படுத்தக்கூடிய மறுசுழற்சி நாப்கின்களுக்கு மாறிவிட்டனர். இதன் மூலம் சுகாதாரம், கழிவறை வசதிக்கான முன்னுதாரணமாக திகழ்கிறது” என்கிறார் பஞ்சாயத்து தலைவர் எஸ்.ஆறுமுகம்.
இந்த மாற்றங்களுக்கு எல்லாம், ’கிராமாலயா’ தொண்டு நிறுவனத்தின் ’வாஷ்மேன்’ (தண்ணீர், கழிவறை வசதி, சுகாதார கல்வி, மாதவிலக்கு கல்வி, ஊட்டச்சத்து) திட்டம் காரணமாக அமைகிறது. பாங்க் ஆப் அமெரிக்கா ஆதரவு கொண்ட இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 159 கிராமங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவிலக்கு கல்வி மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வுடன் சுகாதார கல்வியை அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
“இந்த திட்டத்தின் கீழ், பதின் பருவ பெண்கள், பெண்களுக்கு மாதவிலக்கு கல்வி அளிக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு நட்பான மறுசுழற்ச்சி துணி நாப்கின்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர். எங்கள் தொண்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற சுகாதார கல்வியாளர்கள் இந்த விழிப்புணர்வை அளிக்கின்றனர். மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் மூலம் மாதவிலக்கு கல்வி நிர்வாக பயிற்சி அளிக்கப்படுகிறது,” என்கிறார் கிராமாலயா நிறுவனர், சி.இ.ஓ.எஸ்.தாமோதரன்.
இந்த அமைப்பு, கிராமப்புறம், நகரம் மற்றும் கடலோர பகுதிகளில் தண்ணீர், சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
பல்முனை திட்டம்
பத்து சதவீதத்திற்கும் குறைவான கழிவறை கொண்டுள்ள கிராமங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான பல்முனை திட்டமாக ’வாஷ்மேன்’ உருவாக்கப்பட்டதாக தாமோதரன் கூறுகிறார். சமூக சேவைக்காக கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்கப்படுவதால், நீர்நிலைகள் மாசடைந்து, தண்ணீரால் பரவும் நோய்கள் பரவுகின்றன என்கிறார்.
“இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த, கழிவறை வசதி அமைத்து, கிராமவாசிகள் அவற்றை பராமரிக்க பயிற்சி அளிக்கிறோம். 24 மணிநேர தண்ணீர் வசதி தேவைப்படுவதால், அனைத்து வீடுகளும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் குழாய் இணைப்பு பெற உதவுகிறோம்.” என்கிறார்.
வீட்டில் பயன்படுத்தப்படும் தண்ணீர், நாங்கள் அமைத்து தந்துள்ள தோட்டத்தில் பாய்ச்சப்படுகிறது. இந்த தோட்டங்களில் விளையும் காய்கறிகள் கொண்டு, இல்லத்தலைவிகள் வருமானம் ஈட்டுகின்றனர், என்கிறார் அவர்.
எனினும், புதிய கழிவறைகள் அமைத்து, தண்ணீர் வசதி அளிப்பது மட்டும், சிறந்த மாற்று தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாவிட்டால், பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் மோசமான சுகாதார பழக்கங்களுக்கு தீர்வு காண முடியாது.
வாஷ்மேன் திட்டத்தின் ஒரு பகுதியாக, கழிவறை பயன்படுத்திய பிறகு, சாப்பிடுவதற்கு முன் கைகழுவுவதன் அவசியத்தை பள்ளிகள் மற்றும் வீடு வீடாக சென்று சிறார்கள் மத்தியில் கிராமாலயா விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
“பூஜ்ஜிய மாதவிலக்கு நட்பு வசதி கொண்ட கிராமங்களில் இறுதியாக மாதவிலக்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மேற்கொள்கிறோம். எங்கள் சுகாதார கல்வியாளர்கள், கிராமங்களில் ஐந்து முதல் பத்து பெண் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து, நீடித்த தன்மை கொண்ட மாதவிலக்கு நாப்கின்கள் பயன்பாடு மற்றும் அவற்றை பயன்படுத்தும் வழிகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்,” என்கிறார்.
மோசமான ஊட்டச்சத்து காரணமாக பெண்கள் மத்தியில் இரத்தச்சோகை, குழந்தைகள் மத்தியில் வளர்ச்சி தடை ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி, அவர்களுக்கு இது தொடர்பாக புரிதலை அளிக்கிறோம், என்கிறார்.
நீடித்த வளர்ச்சி
தமிழ்நாட்டின் திருச்ச்சி மற்றும் தெலுங்கானாவின் ஜொகுலாம்பா கட்வால் மாவட்டங்களில் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளித்து, வாஷ்மேன் திட்டத்திற்காக மாதவிலக்கு நாப்கின்களை தைக்க செய்துள்ளது. இது டால்மியா பாரத் CSRBOX CSR விருது வென்றுள்ளது.
வாஷ்மேன் தன்னார்வலராக பயிற்சி பெற்ற செல்வராணி, மாதவிலக்கு தொடர்பாக பெண்களை பேச வைக்கக் கூட பல வாரங்கள் முயற்சிக்க வேண்டும் என்கிறார்.
“வயதான பெண்கள் துணி அடுக்குகளை பயன்படுத்தினாலும் இளம் பெண்கள் மறுசுழற்சி நாப்கின்களை பயன்படுத்தும் எண்ணத்தை விரும்பவில்லை. இந்த துணிகளை வெளியே காய வைப்பதிலும் சிக்கல் இருக்கிறது. மீண்டும் பயன்படுத்துவதற்காக வெய்யிலில் காய வைத்தாக வேண்டும்,” என்கிறார் செல்வராணி.
இது தொடர்பாக அவர் இளம் பெண்களோடு பேசியதோடு, கிராமாலயா கல்வியாளர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்த பெண்கள் இச்செய்தியை வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்.
ஒரு முறை நாப்கின்களால் அதிகம் பாதிக்கப்படுவது சுகாதார ஊழியர்கள் தான் என்கிறார் தாமோதரன்.
“இந்த நாப்கின்கள் நீர்நிலைகள் அருகே மற்றும் மற்ற குப்பைகளுடன் வீசப்படுகின்றன. மேலும் ஒரு முறை நாப்கின்கள் மக்குவதற்கு 800 ஆண்டுகள் ஆகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதன் பொருளாதாரத்தையும் விளக்கினோம். மாதம் ஒரு நாப்கின் பாக்கெட் வாங்க ரூ.100 வரை செலவிடுவதையும், இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தக்கூடிய மறுசுழற்சி நாப்கின்களுக்கு ரூ.600 செலவு ஆவதையும் சுட்டிக்காட்டினோம்,” என்கிறார் தாமோதரன்.
முல்லிகாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுகாதார ஊழியரான சாவித்ரிக்கு வாஷ்மேன் திட்டம் நல்ல மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
“பல ஆண்டுகளாக வேலைக்கு செல்வதற்கே அச்சமாக இருக்கும் ஏனெனில் தெருக்களில் குப்பை கூளங்கலில் சிதறிக்கிடக்கும் நாப்கின்களை கையாள வேண்டியிருக்கும். வீட்டிற்கு சென்றதும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படுவேன். இது இப்போது வெகுவாக குறைந்துள்ளது என்கிறார் சாவித்ரி.
“ஒரு பெண்ணாக மாதவிலக்கு சுகாதாரம் பற்றி பலவற்றை தெரிந்து கொண்டுள்ளதோடு, மறுசுழற்சி நாப்கின்களை பயன்படுத்துவது எனது வேலையை மேம்படுத்தியிருப்பதோடு, வாழ்க்கையையும் மேம்படுத்துவதை உணர்கிறேன்,” என்கிறார்.
ஆங்கிலத்தில் : சரண்யா சக்ரபாணி | தமிழில்: சைபர் சிம்மன்
கிராமப்புற பெண்களுக்கு நிதிச் சேவைகளை சுலபமாக்கும் ‘Women’s World Banking’
Edited by Induja Raghunathan