பாரம்பரிய உணவுடன் எழில்மிகு ‘ஃபார்ம் ஸ்டே’ - தமிழ்ப் பாட்டிகளின் இயற்கை முயற்சி!
தாயும் மகளுமான 89 வயது லட்சுமி அம்மாளும், 71 வயது கஸ்தூரியும் ‘ஃபார்ம் ஸ்டே’ பிசினஸில் கலக்குவதுடன், விருந்தினர்களுக்கு இயற்கையோடு கரையும் அனுபவத்தையும் தருகின்றனர்.
பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து சற்றே விலகி இயற்கை எழில் சூழ்ந்த வசிப்பிட அனுபவமும், அன்புடன் பரிமாறப்படும் பாரம்பரிய உணவுகளை ருசிக்கும் அனுபவமும் பெற விரும்புவோரை அழைக்கிறது, விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள இரட்டணை கிராமத்தில் அமைந்துள்ள ‘வக்சனா ஃபார்ம்ஸ் ஸ்டே’.
செழிப்பான மூங்கில் மரங்களால் சூழப்பட்ட பண்ணைக்கு, மண்வாசனையை நுகர்ந்தபடி சென்றால், பல்வேறு வகை மரங்களும், வகை வகையான பூச்செடிகளும், நிறைந்த காய்கறிகளும், மணக்கும் மூலிகைகளும், செழித்து நிற்கும் பயிர்களும் ஊடாக 13 ஏக்கர் பரப்பளவில் ரம்மியமாக காட்சி அளிக்கும் இந்தப் பண்ணை இல்லத்தை நிர்வகிப்பவர்கள் இரண்டு பாட்டிகள் என்பதே வியத்தகு உண்மை.
ஆம், தாயும் மகளுமான 89 வயது லட்சுமி அம்மாளும், 71 வயது கஸ்தூரியும் ‘ஃபார்ம் ஸ்டே’ பிசினஸில் கலக்குவதுடன், விருந்தினர்களுக்கு இயற்கையோடு கரையும் அனுபவத்தையும் தருகின்றனர்.
பண்ணை உருவானது எப்படி?
தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாளுக்கும், கஸ்தூரி சிவராமனுக்கும் பலரையும் போலவே ஆரம்பத்தில் சொந்தமாகத் தொழில் நடத்துவது என்பது தொலைதூரக் கனவாக இருந்தது. ஆனால், 2021-ஆம் ஆண்டில், அவர்கள் தங்களது அச்சங்களைக் களைத்து, இரட்டணை கிராமத்தில் உள்ள 185 ஆண்டு பழமையான தங்களது இயற்கை விவசாயப் பண்ணையில் பைக்கோ பண்ணையை அமைக்க முடிவு செய்தனர்.
இத்தனைக்கும் தாய் லட்சுமி அம்மாளுக்கு வயது 89, மகள் கஸ்தூரி சிவராமனுக்கு வயது 71. லட்சுமி அம்மாளின் கணவர், அதாவது, கஸ்தூரியின் தந்தை இயற்கை எய்திய பிறகே தாயும் மகளும் தங்களது ‘வக்சனா’ பண்ணை தங்கும் விடுதியை அமைக்க முடிவெடுத்தனர்.
37 ஆண்டுகளாக வறண்ட நிலமாக இருந்த பகுதியை செம்மைப்படுத்தினர். இந்த இரண்டு ‘பொற்கைப் பாட்டிகள்’ உழைப்பில் இன்று ஒரே நிலத்தில் பல்வேறு வகையான மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குகின்றன. இதனுடன், நிலத்தில் உள்ள குளங்கள் மழைநீரை உறிஞ்சுகின்றன. அதே தண்ணீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
அங்கிங்கெனாதபடி இயற்கையின் சலசலப்பு
“பண்ணை வீடுகளுக்குக் குறைவில்லை, நிறையவே வந்துவிட்டன என்றாலும், எங்கள் கைவண்ணத்தில் வித்தியாசம் ஏற்படுத்த முயன்றோம்,” என்கிறார் கஸ்தூரி.
மேலும், பண்ணை வீட்டில் வந்து தங்குபவர்களுக்கு வசதியாக நல்ல சூரிய ஒளியும் அருமையான சில்லென்ற காற்றும் வரக்கூடிய அளவுக்கு பெரிய ஜன்னல்களையும் அமைத்ததாக தெரிவித்தார்.
நீங்கள் ‘வக்சனா’ பண்ணை வீட்டிற்குள் நுழையும்போதே நகர வாழ்க்கையின் இரைச்சல், சத்தத்திலிருந்து விலகி, அமைதியையும், ஒருவித நிம்மதியையும் உணர்வீர்கள். விருந்தினர்களுக்கு இங்கு மிகுந்த ருசியான உணவு கிடைப்பதுதான், இந்தப் பண்ணை வீட்டிற்கான கூடுதல் ஈர்ப்பாகும்.
“இங்கு இயற்கை விவசாயம் செய்கிறோம். இங்கு விளையும் நெல், காய்கறிகள், பழங்கள், கீரைகளைக் கொண்டே சமைக்கிறோம். இயற்கை சூழல் நிறைந்த இந்த இடத்தில் தங்கும் விடுதி ஆரம்பிக்க யோசனை வந்தபோது, வழக்கமான ஓட்டல் ரூம் போல் இல்லாமல் வீடு மாதிரி இருக்க வேண்டும் என்று விரும்பி, நாங்கள் நினைத்தது போலவே உருவாக்கினோம்.
இங்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன. பலரும் குடும்பமாக வந்து தங்கி மகிழ்ந்துவிட்டுப் போகிறார்கள். 6 பேர் கொண்ட ஒரு குடும்பம் 24 மணி நேரம் தங்குவதற்கு ரூ.6,000 கட்டணமாக பெறுகிறோம். நகரங்களில் வசிப்பவர்களுக்கு கிராமத்து வாசனையுடன் கூடிய புத்துணர்வு கிடைக்கிறது” என்கின்றனர் இந்த மூத்த நிர்வாகிகள்.
நோ டிரிங்ஸ், சிகரெட்...
இந்தப் பண்ணை விடுதியின் முக்கியமான இன்னொரு விஷயம், மது - சிகரெட்டுக்கு தடா.
“இயற்கையோடு இயைந்து வாழும் அனுபவம் பெற இங்கு வருவோருக்கு சிகரெட் பிடிக்கவும், மது அருந்தவும் அனுமதி இல்லை. காபி, டீ-க்கு கூட நாங்கள் வளர்க்கும் மாடுகளின் பாலைக் கொண்டே செய்து தருகிறோம்,” என்கின்றனர்.
பண்ணை நிலத்தில் விளையும் காய், கனிகளைக் கொண்டே உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இருவரும் பாட்டிகளாயிற்றே வெறும் இயற்கைக் காற்று, இயற்கை ருசி உணவு மட்டும்தானா, மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லையா என்று கேட்பவர்களுக்காகவே ஏசிகள், வாஷிங் மெஷின்கள், தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற நவீன வசதிகளும் உள்ளன.
விருந்தினர்கள் மினி - லைப்ரரிகளில் படித்து மகிழலாம் அல்லது இயற்கையின் பேரின்பத்தில் நேரத்தை செலவிடலாம். செல்லப் பிராணிகளை உடன் அழைத்து வருபவர்களை பாட்டிமார்கள் எப்போதும் வரவேற்பார்கள்.
“தமிழில் மட்டுமே உரையாடத் தெரிந்த இரண்டு வயதான பாட்டிகளாகிய எங்கள் பண்ணையில் தங்குவதற்கு யார் வருவார்கள் என்று நான் எப்போதும் ஆச்சரியப்படுவேன்,” என்று பூரிக்கிறார் கஸ்தூரி. இது தாங்கள் எடுத்த சிறந்த முடிவு என்று இப்போது உறுதியாக நம்புகிறேன் என்று ஒப்புக்கொள்கிறார்.
பண்ணை தங்குமிடம் இதுவரை 200 விருந்தினர்களுக்கு விருந்தளித்துள்ளது. ஒருமுறை இந்த பண்ணை வீடு அனுபவத்தையும் சுற்றுலா விரும்பிகள் ருசி பார்க்கலாமே!
ரூ.36 ஆயிரம் வரை மின்சார செலவு சேமிப்பு: கோவையில் பாரம்பரிய கட்டிடக் கலையிலான இகோ வீடு!
Edited by Induja Raghunathan