கொரோனோ வைரஸ் எதிரொலி: ஆன்லைன் தளங்களில் ஆர்டர்கள் அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நகரங்களில் ஷாப்பிங் மால் உள்ளிட்ட கடைகள் மூடியுள்ளதால், ஆன்லைனில் மக்கள் மளிகைப் பொருட்களை வாங்குவது இருமடங்காக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நகரங்களில் ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களை மூட அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் கிராஃபர்ஸ், பிக்பாஸ்கெட் ஆகிய ஆன்லைன் மளிகை தளங்களில் மக்கள் பொருட்களை வாங்கும் அளவு இருமடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நகரங்களில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது திடீரென்று அதிகரித்திருப்பதால் இந்தத் தளங்கள் அதற்கேற்ப பொருட்களின் இருப்பு அளவை அதிகரித்துள்ளது.
தனிநபர் சுகாதாரப் பராமரிப்புப் பொருட்கள், தேன், ஆயுர்வேதப் பொருட்கள் உள்ளிட்ட நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
"கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு நகரங்களில் பல்வேறு பிரிவுகளின்கீழ் பொருட்களை அதிகளவில் வாங்குவதைப் பார்க்கமுடிகிறது. மும்பை, பெங்களூரு, புனே, அகமதாபாத் போன்ற நகரங்களில் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லி என்சிஆர் மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் வணிகம் 60 சதவீதம் அதிகரித்துள்ளது,” என்று கிரோஃபர்ஸ் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ அல்பிந்தர் தின்சா தெரிவித்துள்ளார்.
மேலும், "எங்களது ஆர்டர்கள் எண்ணிக்கை 45 சதவீதமும் ஆர்டர் மதிப்பு 18 சதவீதமும் அதிகரித்துள்ளது,” என்றார்.
அலிபாபா நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் பிக்பாஸ்கெட் நிறுவனம் அதன் தளத்தில் வாடிக்கையாளர் தொடர்பும் வருவாயும் இருமடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. வாடிக்கையாளர்கள் வாங்கும் அதன் பொருட்களின் மொத்த மதிப்பும் 15-20 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிக்பாஸ்கெட் கடந்த மூன்று நாட்களாக விநியோகச் சங்கிலியில் சில சிக்கல்களை சந்திருந்தபோது அதற்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளை முறையாக எடுத்து, அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்திசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
விநியோகம் தாமதமாவது குறித்து பிக்பாஸ்கெட் கூறும்போது,
“அடுத்த சில நாட்களுக்கு நாங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஏனெனில் பொருட்களின் இருப்பு, டெலிவரி, ஊழியர்கள் போன்றவை தொடர்பான ஏற்பாடுகளுக்கு சற்று அவகாசம் தேவைப்படும். இதை சீரமைக்க எங்கள் குழு கடினமாக பணியாற்றி வருகிறது. வெகு விரைவில் துரிதமாக டெலிவர் செய்வோம்,” என்றது.
இதுவரை விநியோகம் தொடர்பான சிக்கல்களை சந்திக்கவில்லை என்று கிரோஃபர்ஸ் தெரிவிக்கிறது.
“இருப்பினும் முக்கியப் பொருட்களின் இருப்பு அதிகமாக இருப்பதை உறுதிசெய்ய கூடுதல் ஊழியர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய தயாரிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டு பொருட்களின் இருப்பு அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதேசமயம் முக்கியப் பொருட்கள் அனைவருக்கு கிடைக்கவேண்டும் என்பதை உறுதிசெய்ய வாடிக்கையாளர்கள் தேவையான அளவை மட்டுமே வாங்கிச் செல்ல கோரிக்கை விடுத்து வருகிறோம்,” என்று அல்பிந்தர் தெரிவித்தார்.
கிரோஃபர்ஸ் தளத்தில் தனிநபர் சுகாதாரப் பராமரிப்புப் பொருட்கள் பிரிவைப் பொறுத்தவரை சானிடைசர்களுக்கான தேவை 400 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் ஹேண்ட் வாஷிற்கான தேவை 120 சதவீதமும் சோப்புகளுக்கான தேவை 70 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேபோல் தரையை சுத்தப்படுத்தும் பொருட்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அல்பிந்தர் தெரிவித்தார்.
"நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் தேன் போன்ற பொருட்கள், ச்யவன்பிராஷ் போன்ற ஆயுர்வேதப் பொருட்கள் உள்ளிட்டவற்றிகான தேவை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. டாய்லெட் பேப்பர், டிஷ்யூ போன்ற பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய பொருட்களுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. மக்கள் பீதியடைந்திருப்பதால் கோதுமை, சர்க்கரை, பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதைப் பார்க்கமுடிகிறது,” என்றார்.
அதேபோல் பிக்பாஸ்கெட் நிறுவனமும் கோதுமை, பருப்பு, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது.
"எங்களது பொருட்களில் பெரும்பாலானவை பிரைவேட் லேபிள் தயாரிப்புகள் என்பதால் சிக்கல் இல்லை. எங்களிடம் சானிடைசர் தவிர மற்ற எஃப்எம்சிஜி பிராண்டட் தயாரிப்புகளுக்கான பற்றாக்குறை இல்லை. மொத்தத்தில் விநியோகம் தொடர்பான சிக்கல் ஏதும் இல்லை,” என்கிறது பிக்பாஸ்கெட்.
கிரோஃபர்ஸ் சில பயனர்கள் பொருட்களை பதுக்கிவைப்பதாகவும் உண்மையில் தேவை இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது.
"மாநிலம் முழுவதும் மக்கள் பொருட்களை பதுக்கி வைப்பதை கவனித்தோம். அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். உண்மையில் தேவையிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார் தின்சா.
பொருட்களை அதிகப்படியாக வாங்கினாலோ அல்லது பல முறை ஆர்டர் செய்தாலோ ஆர்டர்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் தங்கள் தளத்தில் இதுவரை யாரும் பொருட்களை பதுக்கி வைக்கும் விதத்தில் வாங்கவில்லை என்று பிக்பாஸ்கெட் தெரிவிக்கிறது.
தகவல்: பிடிஐ