காஞ்சி இளைஞருக்கு ‘இரு கைகள்’ தானமாக கொடுத்த அகமதாபாத் பெண்!
விபத்தில் கைகளை இழந்த காஞ்சிபுரம் இளைஞருக்கு அகமதாபாத்தைச் சேர்ந்த பெண்மணியின் கைகளை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தி கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சாதனை படைத்துள்ளது.
விபத்தில் கைகளை இழந்த காஞ்சிபுரம் இளைஞருக்கு அகமதாபாத்தைச் சேர்ந்த பெண்மணியின் கைகளை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தி கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சாதனை படைத்துள்ளது.
உடல் உறுப்பு தானம் என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கண் தானம், அதற்கு அடுத்தபடியாகவே இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உள் உறுப்புகளை தானம் கொடுப்பது நினைவுக்கு வரும். ஆனால், தற்போது வளர்ந்து வரும் நவீன மருத்துவத்தில் கை, கால்கள் போன்ற உறுப்புகள் கூட அறுவை சிகிச்சை மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பொருத்தப்படுகின்றன.
தற்போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைகளை இழந்த இளைஞருக்கு அகமதாபாத்தைச் சேர்ந்த பெண்மணியின் கைகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன.
மின் விபத்தால் கைகளை இழந்த இளைஞர்:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞரின் வாழ்க்கையையே மின்சார விபத்து ஒன்று புரட்டிப்போட்டது. 2018ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக உயர் மின் அழுத்த விபத்தில் ஏற்பட்ட தீக்காயங்களால் இளைஞர் தனது இரண்டு கைகளையும் இழந்தார். விபத்தால் கைகளை இழந்த மகனுக்கு அவனது அம்மாவே கைகளாக மாறி, ஆதரவு அளிக்கத் தொடங்கினார்.
ஆனால், இளம் வயதிலேயே கைகளை இழந்து வேலைக்கு செல்ல முடியாமல், வீட்டிலேயே முடங்கியது இளைஞரை வாட்டி வதைக்க ஆரம்பித்தது. எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக கைகளை பெற்று, தன்னம்பிக்கையுடன் மீண்டும் தனது வாழ்க்கையை தொடர வேண்டும் என முடிவெடுத்தார். மேலும் கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்திலும் (TRANSTAN) பதிவு செய்தார்.
மூன்று ஆண்டுகளாக இரண்டு கைகளும் இல்லாமல் ஊனத்துடன் வாழ்க்கை நடத்தி வந்த இளைஞருக்கு, 2022ம் ஆண்டு நல்ல தொடக்கமாக அமைந்தது. மே 28ம் தேதியன்று, அகமாதாபாத்தில் இருந்து கை தானம் கிடைக்க உள்ளதற்காக அறிவிப்பை, NOTTA மற்றும் TRANSTAN-யிலிருந்து பெற்றார்.
விமானத்தில் பறந்து வந்த கைகள்:
சென்னையில் உள்ள இளைஞருக்கு அகமாதாபாத்தைச் சேர்ந்த பெண்ணின் கைகள் பொருத்தப்படுவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், அகமதாபாத்தில் இருந்து கைகளை பத்திரமாக எடுத்து வருவது என்பது, அறுவை சிகிச்சையை விட சவாலானதாக இருந்தது.
NOTTA, இரு மாநில அரசுகள், TRANSTAN மற்றும் DMS ஆகியவற்றின் ஆதரவு மற்றும் கூட்டு முயற்சியின் மூலமாக கைகள் இரண்டும், சரியான நேரத்தில் இளைஞருக்கு பொருத்தப்பட சென்னை வந்தடைந்தன.
பெண்ணின் கையானது, கையானது அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு 1800 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பறந்து கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டிக்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவமனையில் இளைஞருக்கு 14 மணி நேர நீண்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள் குழு முழு கவனத்துடனும், அர்ப்பணிப்புடனும் நடத்திய அறுவை சிகிச்சை இறுதியில் வெற்றியை எட்டியது.
இந்த அறுவை சிகிச்சை வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக பிளாஸ்டிக், அழகியல் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மைய இயக்குனரும் மூத்த மருத்துவருமான செல்வ சீதாராமன் மற்றும் 8 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், 4 எலும்பியல் நிபுணர்கள், ஒரு இரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர், 4 மயக்கவியல் நிபுணர்கள், ஒரு சிறுநீரக மருத்துவர் (உறுப்பு மாற்று நோயெதிர்ப்பு சிகிச்சை) மற்றும் 30 துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் தங்களது பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.
பிளாஸ்டிக், அழகியல் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மைய இயக்குனரும் மூத்த மருத்துவருமான செல்வ சீதாராமன் சிகிச்சை குறித்து கூறுகையில்
"கை மாற்று அறுவை சிகிச்சையைக் கையாள மிக உயர்ந்த அளவிலான துல்லியம் மற்றும் மருத்துவ நிபுணத்துவம் தேவையாகும். இந்த நிலையில், முழங்கைக்கு கீழே இருபக்க கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் இந்த அரிய சாதனையை தமிழ்நாடு மாநிலத்தில் பதிவு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவிலேயே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. இந்த மைல் கல்லை அடைவதில் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவு அளித்தமைக்காக அரசு துறைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்றார்.
மருத்துவமனைக்கு வெங்கையா நாயுடு வாழ்த்து:
இந்திய மருத்துவத் துறையில் நடந்த இந்த முக்கியமான வளர்ச்சியை இந்திய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கையா நாயுடு மனப்பூர்வமாக பாராட்டியுள்ளார்.
“மாநிலங்கள் முழுவதும் இத்தகைய குறிப்பிடத்தக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவர்களால் இந்த நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்பது எனக்குப் பெருமை அளிக்கிறது. எனது புரிதலில், இந்த சிகிச்சை செயல்முறை உண்மையில் கடினமானது. மேலும், இதை சாதிப்பதற்கு மருத்துவர்கள் ஒரு குழுவாக மிகவும் உன்னிப்பாக இதனை அணுகியுள்ளனர். உடல் உறுப்புகளை, குறிப்பாக மூளைச்சாவு அடைந்த நோயாளிகளின் கைகளை தானம் செய்யவும், மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்கவும் மக்களைத் தூண்டுவதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.
கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாக்டர் அலோக் குல்லர் மருத்துவர்கள் டீமை பாராட்டுகையில்,
"வாழ்க்கையை மாற்றும் இந்த சிகிச்சை செயல்முறையைச் செய்து, GGHC இன் பெயரை ’நன்மைக்கான கவனிப்பு’ என்ற எங்கள் கருப்பொருளுக்கு ஏற்ப வரலாற்றில் செதுக்கியதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையின் தலைமையிலான எங்கள் பல சிறப்புக் குழுவைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர்களின் உன்னதமான செயலுக்காக நன்கொடையாளரின் குடும்பத்தினருக்கு வணக்கம் செலுத்துகிறேன்,” எனக்கூறியுள்ளார்.
2022, மே 28ம் தேதி அன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று வரை 60 நாட்களைக் கடந்த நிலையில், மாற்று கைகள் பொருத்தப்பட்ட இளைஞர் உடல் ரீதியாக நன்றாக இருப்பதாகவும், அவருக்கு தீவிர பிசியோதெரபி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.