பல உயிர்களைக் காப்பாற்றிய இரு இளைஞர்களின் உறுப்புகள்: மதுரையில் இருந்து சென்னை பறந்த இதயம்!
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வெவ்வேறு சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில் தற்போது அவர்களது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ள உருக்கமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வெவ்வேறு சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், தற்போது அவர்களது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ள உருக்கமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை தினேஷ்:
கோவை, அவினாசி சாலையில் உள்ள ஜிஆர்டி கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பிகாம் படிக்கும் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சரத்குமார், நஜீம் பாசில், தினேஷ், ஹக்கீம், சுதர்சன், திலீப், பீமா உள்ளிட்ட 8 பேரும் 4 டூவீலரில் கடந்த 18 ஆம் தேதி ஊட்டிக்கு சென்று விட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, அன்னூர் - கோவை ரோட்டில் கடத்தூர் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டு இருந்த பொழுது, தினேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்ட நஜீம் பாசில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த போது எதிரே அசுர வேகத்தில் வந்த லாரி ஒன்று இவர்களது வாகனத்தின் மீது மோதியதில் இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அதே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேலம் மறஜோதிபட்டியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவரது மகன் தினேஷ் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
இதனையடுத்து, கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் நேற்று முன் தினம் அவரது பெற்றோரின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியின் டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகனின் இழப்பை தாங்கிக்கொண்டு, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்ட பெற்றோருக்கு பாராட்டுக்கள் குவிழ்ந்து வருகிறது.
தேனி சக்திகுமார்:
தேனி மாவட்டம் உத்தமாபாளையத்தில் சாலையோர உணவகம் நடத்தி வரும் அழகு சுந்தரி, முத்தரசு தம்பதியின் ஒரே மகன் சக்திகுமார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், தற்போது இரண்டாம் ஆண்டிற்கான கல்வி கட்டணம் செலுத்துவதற்காக கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கார் மோதி விபத்துக்குள்ளான சக்திகுமார் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து, அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்ததாக பெற்றோர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
“சக்திகுமார் மூளைச்சாவு அடைந்தாலும் அவரது உள் உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படுவதாகவும், எனவே உடல் உறுப்பு தானம் செய்தால் உங்களுடைய மகன் இறந்த பிறகும் பலரது உயிரைக் காப்பாற்றுவார் என்பதை பெற்றோருக்கு புரிய வைத்துள்ளனர்.”
இதனையடுத்து, பெற்றோரின் சம்மதத்துடன் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 நோயாளிகளுக்கு ஒரு சிறுநீரகம், கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும் இருதயம், நுரையீரல்கள் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டன.
மதுரை டூ சென்னை பறந்த இதயம்:
உயிரிழந்த இளைஞரின் இதயம் ‘சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டு சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தானம் முடிந்த நிலையில், சக்திகுமாரின் இதயம் மற்றும் நுரையீரலும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடல் உறுப்புகளை சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் அதிவிரைவாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு போக்குவரத்து காவல்துறையினரின் உதவியோடு இதயம், நுரையீரல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மதியம் 12:30 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
20 கிலோ மீட்டரை வெறும் 13 நிமிடங்களில் கடந்து மதுரை விமான நிலையத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இளைஞர் சக்திகுமார் தற்போது உயிரிழந்த பின்பும், 5 பேருக்கு உடல் உறுப்பு தானம் செய்ததன் மூலமாக உயிருடன் வாழ்த்து வருகிறார்.
தொகுப்பு - கனிமொழி