ஹர்பஜன் பாட்டி- 94 வயதிலும் நாட் அவுட்...!
வயது ஒரு பொருட்டு அல்ல, எந்த வயது ஆனாலும் நாம் முயற்சிப்பதை நிறுத்தக்கூடாது என்றும் கூறலாம். இவ்விரண்டுமே ஹர்பஜன் பாட்டிக்கு பொருந்தும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு ஹர்பஜன் கவுர் தனது தொழில் முனைவுப் பயணத்தை துவங்கினார். "ஹர்பஜன்ஸ்" ’Harbhajan's' என்ற அவரது நிறுவனத்தைத் துவக்க அவரது மகள் அவருக்கு நம்பிக்கைக் கொடுத்தார். ஆர்கானிக் முறையில் ஹர்பஜன் கடலை மாவு (பேசன்) பர்ஃபிக்கள் செய்ய அதனை அவரது மகள் சண்டிகரில் உள்ள ஆர்கானிக் சந்தையில் விற்கிறார்.
"எனது வாழ்வில் நானாக இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை," என்று அவரது அன்னை ஹர்பஜன் கூறியது மகள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதற்கு பிறகே நீங்கள் ஏன் பர்ஃபி விற்கக் கூடாது என்ற யோசனையை தந்துள்ளார்.
"எங்கள் அம்மா அற்புதமாக சமைப்பார். சிறிய வயதில் நாங்கள் சாப்பிட வெளியே சென்றதே இல்லை. இனிப்புகள், மிட்டாய்கள், ஷர்பத் என அனைத்தையும் வீட்டிலேயே செய்வார். ஒவ்வொரு குளிர்காலத்திலும் கடலை மாவு பர்ஃபியை ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் செய்வார். எப்பொழுதும் எங்கள் வீட்டில் பர்ஃபி நிறைந்து இருக்கும் என்கிறார் அவரது மகள்.
முக்கியமாக இந்த கடலை மாவு பர்ஃபிக்கள் ஹர்பஜனின் கைப்பக்குவத்தில் அருமையாக இருக்கும். அனைவரும் ஹர்பஜனை அதைக்கொண்டு தான் நினைவு கூறுவர்.
எனவே தான் அவரது மகள் பர்ஃபி விற்கும் திட்டத்தை ஹர்பஜனிடம் கூறியுள்ளார்.
ட்விட்டரில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இவரை ’இந்த ஆண்டின் தொழில் முனைவர்’ என்ற அழைத்த பொழுதுதான், இந்த தொழில்முனையும் பாட்டியின் கதை அனைவருக்கும் தெரியவந்தது.
ஆனந்த் மஹிந்திராவை ஹர்பஜன் பாட்டி தொடர்பான ஒரு காணொளியை டாக்டர் மது என்பவர் இணைக்க, அவருக்கு அந்த வீடியோவை காணும் வாய்ப்பு அமைந்துள்ளது. அதைப் பார்த்துவிட்டு ட்விட்டரில் மஹிந்திரா பதிவிட்டது,
"ஸ்டார்ட் அப் என்ற வார்த்தை நம் மனதிற்கு சிலிக்கான் வேலியில், அல்லது பெங்களூருவில் கோடிகளைக் குவிக்கத் துடிக்கும் இளைஞர்களை முன் நிறுத்தும். ஆனால் இன்று முதல் அவர்களோடு 94 வயதான, முயற்சியைக் கைவிடாத இந்த பாட்டியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் தொழில் முனையலாம்," என்றார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்த டுவீட்டும் அவரது மற்ற ட்வீட் போல பலரை சென்றடைந்து. ஜனவரி 8 ஆம் தேதி வரை அந்த ட்வீட்டை 10,000 மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 2000 பேர் தங்கள் டைம்லைனில் பகிர்ந்துள்ளார்கள். மற்றவர்களும் ஹர்பஜன் பாட்டியை ஒரு எடுத்துக் காட்டாக கொண்டாடி வருகின்றனர்.
எனவே இந்த ஹர்பஜன் பாட்டி 94 நாட் அவுட் தானே... !!
தமிழில் : கெளதம் தவமணி