'கம்ப்யூட்டர் பெண்கள்- 2' - மனித கம்ப்யூட்டர்களாக இருந்த பெண் மேதைகள்!
கம்ப்யூட்டர் இயந்திரம் உருவாக்கப்படுவதற்கு முன், நுட்பமான கணக்குகளை போட்டுக்கொடுத்து அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்ட மனித கம்ப்யூட்டர்களில் பெண்களே அதிகம் இருந்தனர்.
சார்லஸ் பாபேஜ் உருவாக்க முயன்ற கம்ப்யூட்டர் இயந்திரம் இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் தான் சாத்தியமானது. ஆரம்ப கம்ப்யூட்டர்கள் எல்லாம் அளவில் பிரும்மாண்டமாக இருந்த நிலையில், அவற்றின் செயல்திறன் சொற்பமாகவே இருந்தது. கம்யூட்டர்கள் அளவில் சுருங்கத் துவங்கிய பிறகு தான் அவற்றின் செயல்பாட்டில் புதிய பாய்ச்சல்கள் நிகழத்துவங்கி, இன்று கம்ப்யூட்டர் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது எனும் நிலைக்கு மனிதகுலம் வந்திருக்கிறது.
இன்று சூப்பர் கம்ப்யூட்டர்கள் நொடிப்பொழுதில் கோடிக்கணக்காண கணக்கீடுகளை நிறைவேற்றும் ஆற்றல் கொண்டிருக்கின்றன என்றால், நம் உள்ளங்கையில் இருக்கும் செல்பேசியே அந்த கால கம்ப்யூட்டர்களை விட பல மடங்கு திறன் பெற்றவையாக இருக்கின்றன.
எல்லாம் சரி, கம்ப்யூட்டர் இயந்திரம் கண்டறியப்படுவதற்கு முன் மனிதகுலம் என்ன செய்து கொண்டிருந்தது? சிக்கலான கணித சமன்பாடுகளையும் கையாள வேண்டிய திட்டங்களை எவ்வாறு எதிர்கொண்டனர்?
நவீன காலத்தில் கம்ப்யூட்டர் செய்யும் பல வேலைகளை கம்ப்யூட்டருக்கு முந்தைய காலத்தில் மனிதர்களே கம்ப்யூட்டர்களாக இருந்தனர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்றாலும், இந்த மனித கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்துள்ளனர் என்பது தான் நாம் வியப்பானது.
ஆம், கம்ப்யூட்டர் வரலாற்றின் ஆரம்ப காலத்தில் அதன் வளர்ச்சியில் பெண்கள் முக்கியப் பங்காற்றியது மட்டும் அல்லாமல், கம்ப்யூட்டருக்கு முந்தைய காலத்தில் பெண்களே பெரும்பாலும் மனித கம்ப்யூட்டர்களாக செயல்பட்டு விஞ்ஞான வளர்ச்சிக்குத் துணை நின்றுள்ளனர்.
ஒரு பக்கம் பாலின பாகுபாடு காரணமாக பெண்கள் கல்வி கற்பதில் பல்வேறு தடைகள் இருந்தாலும், இன்னொரு பக்கம் அறிவியல் ஆய்வுக்குத் தேவையான நுணுக்கமான கணக்குகளை நிறைவேற்றித்தரும் பணியை மேற்கொள்ள பெண்களின் உதவியே நாடப்பட்டது.
எப்படி நுட்பமான கை வேலைப்பாடுகளை மேற்கொள்வதில் பெண்கள் ஏற்றவர்களாக கருதப்பட்டனரோ, அது போலவே, சிக்கலான கணக்குகளுக்கு விடை காண்பதை பொறுமையாக மேற்கொள்ளும் திறன் படைத்தவர்களாகவும் பெண்கள் கருதப்பட்டனர்.
பக்கம், பக்கமாக கணக்குகளை போட்டுப்பார்த்து விடை காண பொறுமையோடு, கணித ஆற்றலும் தேவை. இவை பெண்களுக்கே இருப்பதாகக் கருதப்பட்டது. இப்படி அந்த கால மனித கம்ப்யூட்டராக விளங்கிய பெண்ணான ’நிக்கோலே லெபாட்டே’ (Nicole-Reine Lepaute) பற்றி தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த வானவியலாலராகவும், கணித மேதையாகவும் அறியப்படும் நிக்கோலே அலெக்சி கிளைராட் மற்றும் ஜோசப் லலாண்டே (Alexis Clairaut , Joseph Lalande) ஆகிய இரண்டு கணித மேதைகளுடன் இணைந்து புகழ் பெற்ற ஹாலே வால் நட்சத்திரத்தின் வருகையை கணக்கிட்ட சாதனையில் முக்கியப் பங்காற்றிவராகக் கருதப்படுகிறார்.
ஹாலி வால் நட்சத்திரத்தின் கண்டுபிடிப்பு அறிவியல் உலகின் மைல்கல் நிகழ்வுகளில் ஒன்றாக அமைகிறது. எண்ணற்ற வால்நட்சத்திரங்கள் இருக்கின்றன என்றாலும், பூமியில் இருந்து பார்க்கக் கூடிய வகையில் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து போகும் வானியில் விருந்தாளியாக ’ஹாலி வால் நட்சத்திரம்’ அறியப்படுகிறது.
இன்று ஹாலி வால்நட்சத்திரம் பற்றி கூடை கூடையாக தகவல்கள் தெரிந்திருக்கின்றன என்றாலும், 17ம் நூற்றாண்டுக்கு முன் வரை வால் நட்சத்திரம் பற்றி அதிகம் அறியப்படாமலே இருந்தது. வால் நட்சத்திரங்கள் தோற்றம் பற்றிய கட்டுக்கதைகளும், மூட நம்பிக்கைகளுமே ஆதிக்கம் செலுத்திய நிலையில் இவை பற்றி ஆய்வுலகமும் நிச்சயமற்றே இருந்தது.
இந்நிலையில், தான் இங்கிலாந்தைச்சேர்ந்த எட்மண்ட் ஹாலி 1682 ல் ஹாலி வால் நட்சத்திரத்தை கண்டறிந்தார். (இவரது பெயரிலேயே அந்த வால் நட்சத்திரம் அழைக்கப்படுகிறது).
வால் நட்சத்திரத்தை கண்டறிந்ததோடு, அதன் தோற்றம் மற்றும் நீள் வட்ட பாதை குறித்தெல்லாம் விரிவாக ஆய்வு செய்த ஹாலி, இந்த வால் நட்சத்திரம் மீண்டும் பூமியில் தோன்றக்கூடிய காலத்தையும் கணித்து கூறினார். இந்த கணிப்பு துல்லியமாக அமையவில்லை என்றாலும், வால்நட்சத்திரம் மீண்டும் தோன்றும் எனும் வகையிலான அறிவியல் கணிப்பு அந்த காலகட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு முக்கியக் கண்டுபிடிப்பாகவும் அமைந்தது.
நியூட்டனின் சமகாலத்தவரான ஹாலி, அவரது கால்குலஸ் கணித சமன்பாடுகள் அடிப்படையில் வால் நட்சத்திரத்தின் வட்டப் பாதையை கண்டறிய முற்பட்டிருந்தார். ஹாலி விட்டுச்சென்ற பணியை தொடர்வது போல, பிரான்ஸ் கணித மேதைகள் கிளைரட் மற்றும் லலாண்டே இதற்கான ஆய்வில் ஈடுபட்டு ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் எப்போது பூமிக்கு அருகே வரும் என 1757ம் ஆண்டு கணித்துக்கூறினர். அவர்கள் கணித்தபடியே அடுத்த ஆண்டு வால் நட்சத்திரம் 33 நாட்கள் தாமதமாக தோன்றியது.
வால் நட்சத்திரத்தின் பாதை எந்த வடிவில் இருக்கும் என்பதை நியூட்டன் கோட்பாட்டின் உதவியோடு ஹாலி கண்டறிந்திருந்தார். ஆனால், அதன் மீது சனி மற்றும் வியாழன் கோள்களின் தாக்கத்தையும், சூரியனின் தாக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இப்படி மூன்று விதமான நகரும் பொருட்கள் தொடர்பான சமன்பாடுகளை கணக்கிடுவதில் காலுகுலசை பயன்படுத்துவதில் பெரும் சிக்கல் இருந்தது.
இந்த இரண்டு கோள்களையும் கடிகாரத்தின் இரண்டு முள்களாக கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றின் வட்ட பாதை தொடர்பான தகவல்களை கணக்கிடுவது என கிளைரட் மற்றும் லலாண்டே என தீர்மானித்தனர். முள்ளின் ஒவ்வொரு நகர்வும், கோள்களின் நகர்வில் ஒன்று அல்லது இரண்டு கோணமாக கணக்கில் கொள்ளப்பட்டது. இதற்காக நுட்பமான கணக்குகளை போட்டு பார்க்க வேண்டியிருந்ததால், நிக்கோலேவின் உதவியை நாடினர்.
18ம் நூற்றாண்டில் கடிகாரத் தயாரிப்பு நுட்பமானதாகவும், மதிப்பு மிக்கதாகவும் கருதப்பட்டது. கடிகார நுட்பத்தில் சிறந்து விளங்கிய ஆண்ட்ரி லெபுட்டேவின் மனைவியான நிக்கோலேவுக்கு கடிகாரவியலிலும் ஆர்வம் இருந்தது, கணிதத்திலும் தேர்ச்சி இருந்தது, அரண்மனை கடிகார பணி தொடர்பாக ஆண்ட்ரியை சந்திக்க வந்த லலாண்டே, நிக்கோலேவின் கணிதத் திறமையை தெரிந்து கொண்டு தங்கள் ஆய்வில் இணைத்துக்கொண்டார்.
பொதுவான ஒரு வரைபடத்தை வைத்துக்கொண்டு அவர்கள் கணக்குகளை பிரித்து வைத்துக்கொண்டு செயல்பட்டனர். கோள்களின் பாதை தொடர்பான நுட்பமான கணக்குகளை பதிவு செய்து அவற்றின் அமைப்பை கொண்டு ஹாலி வால் நட்சத்திரம் அடுத்த ஆண்டு தோன்றும் என்ற கணிப்பை வெளியிட்டனர். அவர்கள் கணித்தபடியே ஹாலி வால் நட்சத்திரம் தோன்றியது. மாபெரும் அறிவியல் சாதனையாக இது அமைந்தது.
இந்த சாதனைக்கான கணக்கீட்டு ஆய்வில் நிக்கோலே முக்கியப் பங்காற்றியதோடு, ஆய்வுலகில் மேலும் பல பங்களிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். இதே போலவே, அரை நூற்றாண்டுக்கு பின் அமெரிக்காவில் கடல்சார் களஞ்சியத்தை உருவாக்கிய ஆய்வில் மரியா மிட்சல் எனும் பெண் கணக்கிடுவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரே பெண்ணாகவும் திகழ்ந்தார். மிட்சல் இதற்கு முன் புதிய வால் நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்த பெருமைக்கும் உரியவர்.
நிக்கோலோ, மிட்சல் போன்ற மனித கம்ப்யூட்டர்களே தங்கள் கணிதத் திறன் மூலம், கம்ப்யூட்டருக்கு முந்தைய காலத்தில் கணக்கிடுவதில் பங்களிப்பை செலுத்து அறிவியல் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். நவீன கம்ப்யூட்டரின் ஆரம்ப காலத்திலும் இந்த போக்கு தொடர்ந்தது. அது மட்டும் அல்ல, கம்ப்யூட்டரின் திறனை ஆரம்ப காலத்தில் கிலோ கேர்ள் (kilo-girl) என்றே கணக்கிட்டனர்.
இந்த வரிசையில் கம்ப்யூட்டர் வளர்ச்சிக்கு வித்திட்ட கம்ப்யூட்டர் பெண்களைத் தொடர்ந்து பார்க்கலாம்...
டேவிட் ஆலன் கிரியர் (David Alan Grier), கம்ப்யூட்டர் வருகைக்கு முன் மனித கம்ப்யூட்டராக விளங்கிய பெண் சாதனையாளர்கள் பற்றி தனது வென் கம்ப்யூட்டர்ஸ் வேர் ஹியூமன் (When Computers Were Human) புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.