ஆற்றலுடன் ஆரோக்கியமாக குழந்தைகள் வளர ஊட்டச்சத்துடன் சுவைமிகு உணவுவகைகள் வழங்கும் ’Habitos’
பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்பது என்பது பல்வேறு நோய்களுக்கு வரவேற்பளித்துவிடும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் இரவு உணவுக்குப் பின், நீண்ட இடைவெளிக்குப் பிறகே நாம் காலை உணவை உண்கிறோம். அந்த உணவையும் நேரமின்மை அல்லது இன்னபிற காரணங்களைக் கூறி தவிர்ப்பது மிகவும் தவறானது.
பொதுவாக காலை நேரத்தில் அனைத்து வீடுகளும் பரபரப்பாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக, தம்பதி இருவரும் பணிக்குச் செல்பவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். காலையிலேயே காலை, மதிய உணவு தயாரிப்புப் பணி, குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது, தாங்கள் அலுவலகத்துக்கு கிளம்புவது என வீடு போர்க்களமாகவே மாறிவிடும்.
இந்தச் சூழ்நிலையில் காலை உணவை பெரும்பாலானோர் சாப்பிடக்கூட நேரமின்றி அதையும் ஓர் டப்பாவில் அடைத்துக் கொண்டுதான் ஓடுகின்றனர். அதையும்கூட சாப்பிட நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இதில் எங்கேபோய் சாப்பிடும் உணவில் என்ன சத்துக்கள் இருக்கிறது என பார்ப்பது.
பெரும்பாலும் காலை உணவை தவிர்ப்பது என்பது பல்வேறு நோய்களுக்கு வரவேற்பளித்துவிடும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் இரவு உணவுக்குப் பின், நீண்ட இடைவெளிக்குப் பிறகே நாம் காலை உணவை உண்கிறோம்.
அந்த உணவையும் நேரமின்மை அல்லது இன்னபிற காரணங்களைக் கூறி தவிர்ப்பது மிகவும் தவறானது.
அதிலும் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு என்பது அவர்களின் அந்த நாளை உற்சாகமாகத் தொடங்கும் ஓர் முக்கிய தொடக்கமாகும். மேலும், அந்த உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், குழந்தைகளின் அறிவு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உகந்ததாகவும் இருக்கவேண்டும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் கோவையைச் சேர்ந்த Habitos Food Services. இவர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கான தீங்கில்லாத ஊட்டச்சத்து நிறைந்த தின்பண்டங்கள், காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை மினி சிற்றுண்டி போன்றவற்றை வழங்குகின்றனர்.
Habitos Food Services 2016ம் ஆண்டு விவேக் சிதம்பரம், சரவணன் ஆகியோரால் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இணையதளம் மூலம் ஆர்டர் எடுத்து உணவுவகைகள் விநியோகம் செய்யப்பட்டது. காலப்போக்கில் தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்ட இவர்கள், பள்ளி மாணவர்களுக்கான ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்வது என முடிவெடுத்தனர்.
இதையடுத்து பாபு அழகேசன், வெள்ளையன் போன்ற அதே சிந்தனையுடைவர்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தனர். இதுகுறித்து நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளை கையாளும் Habitos குழுவைச் சேர்ந்த பழனியப்பன் நம்மிடம் கூறியதாவது,
”பள்ளி மாணவர்கள் காலை உணவைத் தவிர்ப்பதால் அல்லது ஊட்டச்சத்தில்லாத உணவுகளை உண்பதால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இதனால் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு எதிராக நாம் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து கோவையில் உள்ள பள்ளிகளில் ஊட்டச்சத்து கேண்டீன்களை அமைக்கலாம் எனத் திட்டமிட்டோம்.”
இதில், முதல் பள்ளியாக யுவபாரதி பப்ளிக் பள்ளியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு சராசரி குழந்தைக்கு புரதத்தில் 45 சதவீதம் பற்றாக்குறையும், மற்ற நுண்ணூட்டச் சத்துக்களில் 65 சதவீத பற்றாக்குறையும் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினரின் ஓத்துழைப்புடன், எங்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் குழுவின் உதவியுடன் பள்ளிக் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவு, திண்பண்டங்கள் மற்றும் மதிய உணவை வழங்கும் திட்டத்தை வகுத்தோம்.
குழந்தைகளுக்கான உணவை தயாரித்து அவர்களை அதனை ஆர்வமாக உண்ணச் செய்வது என்பது மிகுந்த சவாலான காரியமாகும். ஏனெனில் சத்துமிகுந்த உணவு, அதன் சுவை காரணமாக குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகலாம். அதே நேரத்தில் சத்தற்ற உணவுகள், அதன் சுவை காரணமாக குழந்தைகளுக்கு பிடிக்கலாம்.
”இதனால் நாங்கள் இப்பணியில் இறங்கும்முன் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்தான, அதே நேரத்தில் சுவையான உணவை மெனுவாக உருவாக்கவேண்டியிருந்தது. மேலும், அந்த உணவையும் குழந்தைகள் சலிப்படையாமல் சாப்பிட பல்வேறு முறைகளில் விதவிதமான உணவுப் பொருள்களை தயார் செய்யவேண்டி இருந்தது,” என்கிறார்.
எனவே நாங்கள் முதல் 15 நாள்களுக்கு ஓர் மெனுவை தயார் செய்தோம். பின்பு மீண்டும் அதே மெனுவை எஞ்சிய 15 நாள்களுக்கு வழங்கினோம். இதனால் குழந்தைகள் முதல் நாள் உண்ட உணவை அடுத்து 15 நாள்களுக்கு பிறகே உண்பார்கள். இதனால் அவர்கள் விதவிதமான உணவுகளை உண்பதோடு, இந்த உணவுகளை உண்பதில் சலிப்படைவது இல்லை. மேலும், எத்தனை விதங்களில் நாங்கள் உணவு தயாரித்தாலும், அவை அனைத்திலும் அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்.
சூப்கள், பழச்சாறுகள், குக்கீஸ்கள், மற்றும் லட்டுகள் போன்ற இனிப்பு வகைகள் உணவியல் நிபுணர்களின் வழிகாட்டுதலின்பேரில், ஊட்டச்சத்துக்களின் சமநிலையை பராமரிக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.
இதேபோல மாணவர்களுக்கு காலையில் ஓர் சிற்றுண்டியும், திண்பண்டங்களும் அதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து நிறைந்த மதிய உணவும் வழங்கப்படுகிறது.
Habitos வழங்கும் உணவில் பழச்சாறுகள், தினை குக்கீஸ்கள், வேர்க்கடலை, காய்கறி அல்லது பழ சாண்ட்விச்கள் மற்றும் சாலட்கள் அடங்கியுள்ளன. மேலும், குழந்தைகள் பத்தே நிமிடங்களில் இவற்றை உண்டு முடிக்கும் வகையில் இவை பேக் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
மதிய உணவில் பழங்கள், காய்கனிகள் மற்றும் பருப்பு வகைகளின் கலவை வழங்கப்படுகிறது. இந்த உணவுகள் ஓர் குழந்தைக்கு ரூ.35 மற்றும் ரூ.55 என இருவகைகளில் வழங்கப்படுகிறது. வகைக்கேற்றவாறு இதில் உள்ள உணவுப் பொருள்களின் எண்ணிக்கை மட்டுமே மாறுபடுகிறது. மற்றபடி இ்ந்த உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகளில் எவ்வித வேறுபாடும் கிடையாது, என்றார் பழனியப்பன்.
மேலும், குறிப்பாக மாலையில் பள்ளி முடிந்தவுடன் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள் உற்சாகமாக கல்வி பயில அவர்களுக்கும் ரூ.35ல் ஓர் மினி சிற்றுண்டி வழங்கி வருகிறோம். இந்த உணவில் அடங்கியுள்ள கார்போஹைட்ரேட்டு, தாதுக்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சுறுசுறுப்பாக கல்வி கற்க உதவுகிறது என்றார்.
இதற்காகவே, 15 ஆயிரம் அடி பரப்பளவில் ஓர் தனிச் சிறப்பு வாய்ந்த சமையலறை அமைக்கப்பட்டு, உணவு தயாரிப்புப் பணிகள் நடைபெற்று, நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு உணவுப் வகைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் Habitos கோவையில் உள்ள 12 பள்ளிகளில் 1.6 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுகளை வழங்கியுள்ளது. குழந்தைகளுக்கான இந்த ஊட்டச்சத்து கேண்டீன் முறையை தமிழகத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூர், சென்னை போன்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
”இன்னும் ஓராண்டில் தென்னிந்தியா முழுவதும் எங்களது சேவையை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு சென்று ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாணவர் சமுதாயத்தை ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் அறிவில் சிறந்த ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்கமுடியும் என்பதே எங்களது கனவு,” என்கின்றனர் Habitos குழுவினர்.
Habitos குறித்து மேலும் அறிந்து கொள்ள www.habitos.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், 0422-4960101, 9842318000, 9940225924 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.