Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘நோ ரிப்பீட் மெனு’- சப்ஸ்கிரைப் பண்ணாலே வீடு தேடிவரும் மீல்ஸ்பாக்ஸ்!

காலையில் எழுந்தவுடன் இன்று என்ன சமைப்பது என்ற குழப்பமா? இதோ 275 வகையான கலவைசாதங்கள் மற்றும் 325 விதமான காய்கறி வகைககளை சமைத்து, மதுரை முழுவதும் டெலிவரி செய்கிறது முன்னாள் ஐடி ஊழியர்கள் தொடங்கியுள்ள ’அட்சயபாத்திரா’

‘நோ ரிப்பீட் மெனு’- சப்ஸ்கிரைப் பண்ணாலே வீடு தேடிவரும் மீல்ஸ்பாக்ஸ்!

Thursday June 20, 2019 , 5 min Read

காலையில் எழுந்தவுடன் இன்று என்ன சமைப்பது என்ற குழப்பமா? ஊட்டச்சத்துமிக்க ருசியான உ ங்களது லன்ச் பாக்சை யாராவது பேக் செய்து கொடுத்தால் எப்படியிருக்கும்? 

நிறுவனம் : அட்சயபாத்திரா

நிறுவப்பட்ட ஆண்டு : 2018

நிறுவனர்கள் : சுந்தரேஷ் மற்றும் கார்த்திக்

முதலீடு : ரூ40 லட்சம்

தலைமையகம்: மதுரை

துறை: உணவு

வீட்டைவிட்டு தனியாக தங்கியிருக்கும் பேச்சுலர்களின் கொலப்பசி என்றாலும் சரி, வீட்டுச்சாப்பாட்டுக்கு விடுமுறை விட்டதில், ஏற்படும் ஒட்டுமொத்த குடும்பத்தின் பசியினை போக்கவேண்டும் என்றாலும் சரி உடனே படையலிட்டு பசி தீர்க்க கொட்டிக்கிடக்கின்றன ஃபுட் டெலிவரி ஆப்ஸ்.

அதுவும் வேண்டாமெனில், தெருவுக்கு தெரு திறக்கப்பட்டுள்ள எக்கச்சக்க கையேந்தி பவன்களும், ஹைகிளாஸ் ஓட்டல்களும். இப்படி வயிற்றுக்கு விருந்தளிக்க இத்தனை வசதிகள் இருக்கையில் எதற்காக ‘அட்சயபாத்திரா’-வுக்கு சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும்? வெரி சிம்பிள்...

ஓட்டல்களின் ஆளும் அரசனான அஜினோமோட்டோயின்றி, எவ்வித கலப்படமுமற்ற, ஊட்டச்சத்துமிக்க, 275 வகையான கலவைசாதங்கள் மற்றும் 325 விதமான காய்கறி வகைகளை அளித்து உங்களது சுவைமொட்டுகளுக்கு விருந்தளிக்கிறது ’Atchayapathra foods' எனும் லன்ச் அண்ட் டின்னர் டெலிவரி நிறுவனம்.
atchapathra1

அட்சயபாத்திரா நிறுவனர்கள் சுந்தரேஷ் மற்றும் கார்த்திக்

மதுரை அண்ணாநகரில் கஸ்டமர் அலுவலகத்துடன், அனுப்பானடியில் 2,500சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட சமையலறையுடன் செயல்படும் அட்சயபாத்திராவில் வார அல்லது மாத சப்ஸ்கிரைப் செய்துவிட்டால், நேரம் தவறாது குறித்த நேரத்துக்கு சுடsசுட உணவு வீடுதேடி வரும். நடப்பு மாதத்திற்கு 1,400 சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள அட்சயபாத்திராவின் நிறுவனர்கள் எக்ஸ்-ஐடி ஊழியர்கள்.

ஐபிஎம் ஐடி நிறுவனத்தில் பத்தாண்டு பணிக்கு பிறகு மென்பொறியியல் தொடர்பான 6 நிறுவனங்களை வெற்றிகரமாய் நடத்திவரும் சுந்தரேஷின் ஏழாவது நிறுவனமே அட்சயபாத்திரா. சுந்தரேஷ் நிர்வகித்துவரும் மற்ற மென்பொறியியல் நிறுவனங்களுக்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதியஉணவு வழங்கும் திட்டத்தை துவங்க அதற்கான செலவினங்களை மதிப்பீடு செய்துள்ளார். அதன் விளைவாய் ஹெல்தியான மதிய உணவு வழங்கும் நிறுவனத்தை அவரே அவருடைய நண்பர் கார்த்திக் உடன் இணைந்து தொடங்க முடிவெடுத்துள்ளார். அதுவும் பக்கா வெஜிடேரியன் உணவுகளை வழங்கும் நிறுவனம் தொடங்கவேண்டும் என்பதில் தீர்மானமாய் இருந்தார்.

“இதுவரை 26 வெளிநாடுகளுக்கு சென்றுள்ளேன். எங்கு போனாலும் கடைசி 3 நாட்கள் அந்த நாட்டுடைய ஸ்பெஷல் உணவு, ஸ்டீரிட் ஃபுட் எல்லாம் தேடித் தேடிச் சென்று உண்டு, உணவுத் துறையில் பிசினஸ் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.” 

இவர் தொழில் தொடங்கும் முன் ஆறுமாத காலங்கள் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். உணவுத் துறையில் நாம் தேர்ந்தெடுப்பது எது? அதை எப்படிச் செய்வது? மக்களிடம் அதன் தேவை என்ன?அதன் எதிர்காலம் என்ன? என்று தொழில் தொடங்கும் முன்னே அத்தனைக்கும் விடை தேடியுள்ளார்.

“மதுரை என்றாலே எல்லோருக்கும் காரச்சார கறிவிருந்து தான் ஞாபகத்துக்கு வரும். 15 லட்ச மக்கள் வாழும் மதுரையில 4.5 - 6 லட்சம் மக்கள் சைவ உணவு விரும்பிகள். சைவ உணவு ஓட்டல்களுக்கான தேவையும் இருக்கிறது. நல்ல வெஜிடேரியன் ஓட்டல்கள் என்று கேட்டாலும், ஒண்ணு, இரண்டு தான் சொல்லுவோம். சோ, நல்ல சைவச் சாப்பாடு கொடுக்கணும். அதே சமயம் ஊட்டச்சத்து மிகுதியாகவும், விலை குறைவாகவும் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தோம். அதே போல் ஓட்டல் போன்றோ, கேட்டரிங் போன்றோ செயல்படாமல் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாய் இருந்தோம்.

ஆனால், ஃபுட் இன்டஸ்டீரிக்கு நாங்கள் புதிது என்பதால் முதலில் 3 மாதத்திற்கு எங்க கம்பெனி உட்பட 3 கம்பெனிகளில் பணிபுரியும் 400பேருக்கு இலவச மதியஉணவு கொடுத்து அவர்களது கருத்துகளை சேகரித்தோம்,” என்றார்.
Atchayapathra

முதற்கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு, மெனு கார்டை பக்குவமாய் வடிவமைக்க சில மாதங்களை செலவிட்டுள்ளனர். கடைகளில் கிடைத்த அத்தனை சமையல் புத்தகங்களை வாங்கியும், யூ டியுப்பில் உள்ள எல்லா சமையல் வீடியோக்களையும் டவுண்லோடு செய்தும் உணவில் உள்ள வெரைட்டிகளை பகுப்பாய்வு செய்துள்ளனர்.

ஆறு மாத ஆராய்ச்சி காலத்திலே செஃப் ஒருவரை நியமித்து, ‘நோ ரிப்பீட்’ என்ற பார்மூலாவில் மெனு கார்ட்டை தயாரித்துள்ளனர். அதாவது, 90 நாட்களில் ஒரு உணவு இருமுறை வராதபடி மெனு கார்டை டிசைன் செய்துள்ளனர். அப்படி 275 வகையான கலவைசாதங்கள் மற்றும் 325 விதமான காய்கறி வகைகளை வகைப்படுத்தினர். வெரைட்டி ரைஸ் உட்பட 5 ஐயிட்டங்களை அடக்கிய ‘மீல்ஸ் பாக்ஸ்’, கூட்டு, பொரியல், சாதம், சம்பார் என ஃபுல் மீல்ஸ் கொண்ட ‘அஞ்சறைப்பெட்டி’, மற்றும் டின்னர்பாக்ஸ் என்று மூன்று வகைகளில் உணவுகளை மதுரை முழுவதும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்து வருகின்றனர்.

அட்சயப்பாத்திராவின் தினம் காலை 6மணியிலிருந்து தொடங்குகிறது. உள்ளூர் விவசாயிகள் மற்றும் மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளை சுத்தமான நீரில் கழுவி, வெட்டப்படுகின்றன. அன்றைய லன்ச் மெனுவில் உள்ள ஐயிட்டங்களை சமைத்து முடிக்கையில், 9.30மணி முதல் 10.30மணியாகிவிடுகிறது.

சமைத்த உணவின் ஊட்டசத்தின் தரத்தை சோதனை செய்ய ஒரு லேப் மற்றும் உணவின் ருசியினை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள இரு டேஸ்ட் டெஸ்டர்கள் உணவின் ருசியினை சோதிக்கின்றனர். பிறகு, கிச்சனிலிருந்து உணவுகள் பேக்கிங் ஏரியாவுக்கு மாற்றப்படுகின்றன.

அங்கு சரியான அளவில் உணவுகள் பேக்கிங்காகி டெலிவரி டிபார்ட்மென்டை அடைகின்றது. அங்கிருந்து ஒவ்வொரு ஏரியாவுக்கான டெலிவரி பாய் மீல்ஸ் பாக்ஸ்களை வேனில் ஏற்றி மதியம் 12.30மணிக்குள் விநியோகித்துவிடுகின்றன. வாடிக்கையாளர்களிடமிருந்து சில்வர் பாக்ஸ்களை கலெக்ட் செய்ய மதியம் 3மணிக்கு கிளம்புகிறது வண்டி. மீண்டும் இதே சுழற்சி டின்னருக்கும் நடைபெறுகிறது.

atchayapathra3

மக்களது வயிறுடன் சேர்ந்து மனமும் நிறைந்து ஆரோக்கியமான வாழ்வினை வாழ வழிவகை செய்யும் அட்சயபாத்திராவின் கல்லா தான் நிறையவில்லை. ஏனெனில், ஆரோக்கியமான, தூய்மையான ‘மீல்ஸ் பாக்ஸ்’ சப்ஸ்கிரிப்ஷனில் கிடைக்கும் ஒரு நாள் மதிய உணவின் விலை ரூ50. மீல்ஸ் பாக்சின் மாத சந்தா தொகை வெறும் ரூ1,250 + ஜிஸ்டி.

“எங்களுடைய பிசினசே ‘பாட்டம் ஆப் தி பிரமிடு’ மாடல் தான். அதாவது, லாபத்தை குறைத்து எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவதாகும். அதனால், உடனடி வெற்றி இதில் சாத்தியமில்லை என்பது அறிந்ததே. எண்ணிக்கையை அதிகரிக்க, அதிகரிக்க தான், லாபம் எடுக்க முடியும். குறைந்தபட்ச லாபத்தை தொடவே 7மாதங்கள் ஆகிவிடும் என்று கணித்துவைத்திருந்தோம். அந்த டார்க்கெட்டை அடைவதற்கு உழைத்தோம். அந்த 7 மாத காலத்தில் மாதமாதம் 2 முதல் 2.5லட்ச ரூபாய் முதலீடு செய்து கொண்டிருந்தோம். இப்போது தான் லாப நோக்கில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. 2025ம் ஆண்டில் 1 லட்ச டெலிவரி செய்து ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் அளவிற்கு தொழிலை பெருக்க இலக்கு வைத்துள்ளோம்.

தொடக்கத்தில் 50-60 பேருக்கு தான் உணவு வழங்கி வந்தோம். இப்போது 3ம் வகுப்பு படிக்கும் குழந்தை முதல் 96 வயது முதியவர் வரை என 1350சப்ஸ்கிரைப்பர்ஸ் இருக்கிறாங்க. மதுரையில் உள்ள டாப் மோஸ்ட் டாக்டர்களில் பலரும் எங்களது கஸ்டமர் என்பது எங்களுக்கு ஒரு பெரிய மைல்கல். 4 ஐடி கம்பெனிகளுக்கும் ஃபுட் சப்ளை செய்கிறோம்.” என்றார்.

தொழில் வெற்றிக்கு பிசினஸ் ஐடியா மட்டும் போதுமானதில்லை... ஏன்?

“ஒரு நல்ல பிசினஸ் ஐடியாவை கொண்டு தொழிலை தொடங்கிவிட முடியாது. அப்படி செய்தால், நிலைத்திருக்கவும் முடியாது. நாங்களே முதலில் விமானங்களில் கொடுக்கப்படும் பிளாஸ்டிக் பிளேட்டுகள் போன்று தான் வழங்க திட்டமிட்டோம். அதற்கான தைவான் செய்த அதே டிசைனில் ரூ5 லட்சமதிப்புள்ள பிளேட்டுகளை தயார் செய்தோம். ஆனால், அரசு அதற்குள் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்தது. ரூ.5 லட்ச முழு நஷ்டம். இப்போதுவரை அந்த பிளேட்களை என்ன செய்வது என்று தெரியாமல் வைத்துள்ளோம்.

அப்போதிருந்து தான், நம்ம தொழிலின் எதிர்காலம் என்ன? என்பதை கணித்துவைப்பதன் முக்கியத்துவம் அறிந்தோம். நாங்க துவங்குகையில், ஸ்விகி, உபெர் எதுவுமில்லை. இப்போ, அவங்க வருகைக்கு பின்னர் நிறைய ஆஃபர்கள் கொடுக்கிறார்கள். ஆனால், அதையும் சமாளிக்க முன்பே ரெடியாக இருந்தோம். வணிகச்சூழல் எப்போதும் நிலையானதாகவே இருக்காது,” என்கிறார் சுந்தரேஷ்.
atchayapathra4

வித்தியாசமாகயிருந்தால் வெற்றி பெறலாம்..!

சாப்பாட்டு ராமன்களின் முரட்டு பசியினை தீர்க்க இங்கு எக்கச்சக்க வழிகள் உள்ளன. அப்படியிருக்கையில், செய்யும் தொழிலை வித்தியாசப்படுத்தி, விற்கும் பிராண்டை தனித்துவமாய் மிளிரச் செய்தாலே, சந்தையில் காணாமல் போகாமல் இருப்போம். அந்த வகையில் சுந்தரேஷ் செய்திருக்கும் வித்தியாசங்கள்:

வாடிக்கையாளர்கள் லன்ச் பாக்சில் சில மாறுதல்களை செய்து தரக்கூறினால், அதையும் அவர்களுக்காக மட்டும் பிரத்யேகமாய் செய்து கொடுக்கிறார். உதராணத்திற்கு, லன்ச் பாக்சில் இரண்டு சாதம், காய்கறிகளுக்கு மாறாக, ஒரு சாதம், சப்பாத்தி,காய்கறிகள் என்றுகேட்கும் வாடிக்கையாளர்களுக்கு அதை செய்த கொடுக்கின்றனர்.

மாத சப்ஸ்கிரிப்ஷன் செய்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் மாதத்தின் இடைப்பட்ட நாட்களில் வெளியூர் சென்றுவிட்டால், அந்த நாட்களில் வழங்கப்படும் உணவினை மாதம் முடிந்தபின் வரும்நாட்களில் நீட்டித்து வழங்கின்றது.

நீங்க மதுரவாசியா...? அப்போ நிச்சயம் இந்த ல்ன்ஸ்பாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க...!

அட்சயபாத்திரா இணையதள முகவரி : https://atchayapathrafoods.com/