‘ஹலோ விக்ரம்’ லேண்டருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திருக்கும் நாசா!
நிலவின் தென்துருவ பகுதியில் சாஃப்ட் லேண்டிங் செய்யாமல் போன விக்ரம் லேண்டரை செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாசா கைகோர்த்துள்ளது.
நிலவின் தென்துருவப் பகுதி பல மர்ம முடிச்சுகள் நிறைந்த பகுதியாக வானியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள எந்த நாடுமே இந்தப் பகுதியில் தனது ஆராய்ச்சியை செய்யவில்லை. புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிக்கு ஆர்வமூட்டுவதாகவும் இருக்கும் இந்தப் பகுதியில் அதிக அளவிலான நிலப்பரப்பில் சூரிய ஒளி படுவதில்லை. சூரிய கதிர் ஒளி விழாத இடத்தில் நீரும், தாதுக்களும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பூமிக்கு அருகில் இருக்கும் நிலவில் மனிதன் வசிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியுமா என்பதும் இந்தப் பகுதியில் செய்யும் ஆய்வில் கண்டுபிடிக்க முடியும். இத்தனை சவால்கள் நிறைந்த நிலவின் தென்துருவப் பகுதிக்கு இஸ்ரோ கடந்த 10 ஆண்டுகளாக முயற்சித்து மற்ற நாடுகளை விட குறைந்த செலவில் சந்திராயன் 2ஐ நிலவுக்கு அனுப்பியது. விண்ணில் ஏவப்பட்டது முதல் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது வரை என அனைத்தும் திட்டமிட்டபடி சென்று கொண்டிருந்தது.
செப்டம்பர் 7ம் தேதி அதிகாலையில் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி பிரக்யான் ரோவரை அந்தப் பகுதியில் ஊர்ந்து செல்லும் கடைசி முயற்சியில் தீவிரமாக இருந்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
நாடே கண்விழித்து அந்த வரலாற்று நிகழ்வை பார்த்துக் கொண்டிருக்க கடைசி சில நிமிடங்களில் லேண்டர் தனது பாதையில் இருந்து மாறியது. 2.1 கிலோமீட்டர் தூரத்தில் சென்ற போது விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கனத்த இதயத்துடன் கூறினார்.
எனினும் 95 சதவிகிதம் நினைத்ததை சாதித்து விட்ட சந்திராயன் 2 வெற்றியே என்று நாடே இஸ்ரோ விஞ்ஞானிகளைக் கொண்டாடியது. நம்பிக்கையோடு காத்திருந்த விஞ்ஞானிகளுக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதியில் கிடப்பதற்கான புகைப்படங்களை எடுத்துத் தந்தது நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர்.
ஆர்பிட்டரின் உதவியோடு நிலவில் சாய்வாக தரையிறங்கி இருக்கும் விக்ரம் லேண்டருக்கு சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் கொடுத்து அதனை செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். எனினும் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே அதில் 7 நாட்கள் முடிந்த நிலையில் இதற்கான சாத்தியக் கூறுகள் எந்த அளவுக்கு விஞ்ஞானிகளுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.
இஸ்ரோவின் சந்திராயன் 2 அடைந்திருக்கும் சாதனையை விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள வளர்ந்த நாடுகள் பாராட்டி வருகின்றன. நாசா விண்வெளி ஆய்வு மையம் இந்தியாவின் இந்த சாதனை அளப்பரியது என்று பாராட்டியுள்ளதோடு சூரியன் பற்றி இஸ்ரோவின் ஆராய்ச்சியில் தாங்களும் இணைய விரும்புவதாக விருப்பம் தெரிவித்துள்ளன.
பெங்களூரு வந்திருந்த நாசா விஞ்ஞானிகள் குழு இஸ்ரோ தலைவர் சிவனை சந்தித்துள்ளளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரோவிடம் சம்மதம் பெற்று நாசா விக்ரம் லேண்டரை செயல்பட வைக்கும் பணியில் இணைந்துள்ளது. விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்னர் மற்றும் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளன.
கலிபோர்னியா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 இடங்களிலுள்ள ஆய்வு நிலையங்களில் இருந்து ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டருக்கு ‘ஹலோ விக்ரம்’ என்ற செய்தியை நாசா தொடர்ச்சியாக அனுப்பி வருகிறது. நாசாவுக்கு சொந்தமான லேசர் ரிப்ளெக்டர் என்ற கருவி விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஹலோ செய்திக்கு விக்ரம் லேண்டரில் இருந்து பதில் வருமா என்று நாசா விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே விக்ரம் லேண்டர் 2.1 கிலோமீட்டர் தொலைவில் நிலவில் தாறுமாறாக தரையிறங்கவில்லை 300 மீட்டர் தூரத்திலேயே ஹார்ட் லேண்டிங் ஆகியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்துங்கள் என்று அதன் தலைவர் சிவன் அறிவுரை கூறியுள்ளார். மூத்த விஞ்ஞானி ஒருவர் இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில்
”எங்கள் சேர்மன் சிவன் எங்களிடம் பேசினார். ஆர்பிட்டர் சயின்ஸில் சந்திராயன்-2, 100 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளது. லேண்டிங் டெக்னாலஜியில் 95 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளோம். அதேபோல, சாஃப்ட் லேண்டிங்கிற்குப் பதிலாக ஹார்ட் லேண்டிங் செய்துள்ளோம். எனவே, கவலைப்படுவதற்குப் பதிலாக எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்துங்கள்,” என்று அறிவுறுத்தியதாக விஞ்ஞானி குறிப்பிட்டுள்ளார்.