மீண்டும் நம்பிக்கை: Chandrayaan 2 ஆர்ப்பிட்டர் கேமராவில் சிக்கிய விக்ரம் லேன்டர்!
நிலவில் சந்திராயன் 2 விண்கலத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டதாக கருதப்பட்ட நிலையில், விக்ரம் லேன்டர் இருக்குமிடம் தெரியவந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் துளிர்க்கும் நம்பிக்கை: சந்திராயன் 2 ஆர்ப்பிட்டர் கேமராவில் சிக்கிய விக்ரம் லேன்டர் புகைப்படம், தொடரும் ஆய்வுகள், முயற்சிகள்…
நிலவில் சந்திராயன் 2 விண்கலத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டதாக கருதப்பட்ட நிலையில், நிலவில் விக்ரம் லேன்டர் இருக்குமிடம் தெரியவந்துள்ளதாக இஸ்ரோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஏஎன்ஐ-க்கு, தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
விக்ரம் லேன்டர் நிலவில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கி வரும் ஆர்ப்பிட்டர் எடுத்துள்ள புகைப்படம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து, லேன்டரைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் லேன்டரை தொடர்பு கொள்வோம். ஆனால் இப்போது இதுகுறித்து எதுவும் உறுதியாக கூற இயலாது எனத் தெரிவித்தார்.
சந்திராயன் 2வில் இருந்து செப். 2ஆம் தேதி வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேன்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இயங்கிக் கொண்டிருந்தது. செப். 7ஆம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு அது நிலவில் வெற்றிகரமாக தரையிறக்க பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.
லேன்டரின் உயரம் மற்றும் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, அது நிலவின் தரைப்பகுதியை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது. விக்ரம் லேன்டர் சரியாக நிலவில் இருந்து 2.1 கி.மீட்டர் தொலைவில் இருந்தது. சரியாக அது தரையிறங்க 3 நிமிடங்கள் இருக்கும்போது திடீரென லேன்டர் பூமியில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து, நிலவின் ஈர்ப்பு விசையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் எனவும், அது நிலவின் பரப்பில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் எனவும், அது நிலவின் சுற்றுவட்டப்பாதையிலேயே வெடித்து சிதறியிருக்கலாம் எனவும் பல்வேறு யூகங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தன.
ஆனால், நிலவில் சந்திராயன் 2 இறங்கும் நிகழ்வைப் பார்ப்பதற்காக இஸ்ரோ மையத்துக்கு நேரில் வந்திருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகளையும், இஸ்ரோ தலைவர் சிவனையும் அவர்களின் கடின உழைப்புக்காக பாராட்டிவிட்டுச் சென்றார். மேலும், இது ஓர் நல்ல முயற்சி, இது நமது எதிர்கால சாதனைக்குப் பயன்படும் எனவும் தெரிவித்துச் சென்றிருந்தார். நாட்டு மக்களும் தங்கள் முழுமூச்சாக விஞ்ஞானிகளின் உழைப்பை மதிப்பதாகவும், தாங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்பதாகவும் சமூக வலைதளங்கள் மூலம் விஞ்ஞானிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வந்தனர்.
மேலும், இஸ்ரோ தலைவர் சிவனும், லேன்டரின் நிலை குறித்து விரைவில் ஆர்ப்பிட்டர் வெளியிடும் புகைப்படம் மூலம் அறிந்து கொள்ளலாம் என நம்பிக்கைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது, ஆர்ப்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் லேன்டர், நிலவின் பரப்பில் இருப்பது உறுதியாகியுள்ளதால் விஞ்ஞானிகளை மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா மட்டும் திட்டமிட்டபடி செப். 7ஆம் தேதியே நிலவில் லேன்டரை வெற்றிகரமாக தரையிறக்கியிருந்தால் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக நிலவில் விண்கலனை நிலைநிறுத்திய 4ஆவது பெரிய நாடாக இருந்திருக்கும். ஆனால் எந்த நாடும் முயற்சிக்காத வகையில் நிலவில் சூரிய வெளிச்சமே படாத அதன் தென்துருவத்தில் லேன்டரை தரையிறக்க முயற்சித்த முதல் நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் நிலவின் தரைத்தளத்தில் உள்ள கனிமங்கள் குறித்து ஆய்வு செய்வதோடு, சூரியனின் ஓளியே படாததால் நிலவின் தென்துருவத்தில் நீரானது அதிக அளவில் உறைந்த நிலையில் இருக்கலாம் என்பதும் விஞ்ஞானிகளின் கணிப்பாகும்.
லேன்டர் நிலவில் சரியாக தரையிறங்கி இருந்தால், லேன்டருடன் மீண்டும் தொடர்பு சாத்தியமாகும் பட்சத்தில், அதில் உள்ள ரோவர் வாகனம் நிலவின் பரப்பில் பயணித்து ஆய்வு செய்து, விண்வெளி ஆய்வில் இந்தியாவை சிகரத்துக்கு எடுத்துச் செல்லும் என்பது உறுதி. அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்.