’அன்புள்ள விக்ரம், சிக்னலை மீறினாலும் கேஸ் எழுத மாட்டோம்’- வைரலான நகைச்சுவை ட்வீட்!
விக்ரம் லேன்டருக்கு நாக்பூர் காவல்துறை எழுதிய ட்வீட் இது. தங்களை உடனடியாக தொடர்பு கொள்ளவும் வேண்டுகோள்!
இந்தியர்களால் மட்டுமல்ல உலக அரங்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம் சந்திரயான் 2. செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலையில் சந்திரயானின் 2 திட்டத்தின் அதிமுக்கிய நிகழ்வான விக்ரம் லேன்டர் தரையிறக்கத்திற்காக இந்தியர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். அன்றைய தினம் திட்டமிட்டபடி அனைத்தும் நடந்திருந்தால் உலக அரங்கில் இந்தியா மாபெரும் சாதனையைப் படைத்திருக்கும்.
ஆனால், கடைசி நேரத்தில் சந்திராயனின் விக்ரம் லேன்டரில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் நாடே சோகத்தில் ஆழ்ந்தது. இத்திட்டம் ஒரு பின்னடைவை சந்தித்தது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தாலும், இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகளின் இந்த மாபெரும் முயற்சியை இந்தியத் தலைவர்களும், உலக நாடுகளும் பெரிதும் பாராட்டினர்.
இஸ்ரோ தலைவர் சிவனை பிரதமர் மோடி கட்டியணைத்து தேற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் இருப்பதாக கூறிய பிரதமர், இஸ்ரோ விஞ்ஞானிகளை எண்ணி இந்தியா பெருமைக் கொள்வதாக அப்போது தெரிவித்தார்.
தொடர்ந்து மாயமான விக்ரம் லேன்டரைத் தேடும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் பலனாக ஆர்பிட்டரில் உள்ள கேமரா மூலம் அதன் இருப்பிடம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விக்ரம் லேன்டருக்கு நாக்பூர் போலீசார் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதில்,
‘அன்புள்ள விக்ரம், தயவு செய்து எங்களைத் தொடர்பு கொள். நீ சிக்னல் மீறி சென்றதற்காக நாங்கள் உனக்கு செல்லான் அனுப்ப மாட்டோம்...‘ என்று குறிப்பிட்டு பதிவிட்டனர்.
ஏற்கனவே கடந்த ஒன்றாம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, அபராதத் தொகை நாடு முழுவதும் பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், நாக்பூர் போலீசாரின் இந்த நகைச்சுவையான பதிவை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ரசிக்கும்படியான இந்தப் பதிவு குறித்து அவர்கள் தங்களது கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு சிலர் நாக்பூர் போலீசாரின் பதிவுக்கு பதிலடி தரும் வகையில்,
‘நிலா உங்கள் எல்லைப் பகுதி கிடையாது. இது பெங்களூருவின் எல்லைப் பகுதியில் வருகிறது’, ‘விக்ரமிடம் இன்சூரன்ஸ் இல்லை. அதனால், 2000 ரூபாய்காக பயப்படுகிறான்’ என விதவிதமாய் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.
நாக்பூர் போலீசாரின் இந்த ட்வீட், 18,000க்கும் மேற்பட்ட மறு ட்வீட் மற்றும் 68,000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று வைரலாகியுள்ளது.