சன்டே போல் தினமும் நிம்மதியாக உறங்க உத்தரவாதம் அளிக்கும் உயர்தர மெத்தைகள்!
’சன்டே மேட்ரெசஸ்’ (Sunday Mattresses) 2015-ம் ஆண்டு அல்ஃபோன்ஸ் ரெட்டி என்பவரால் நிறுவப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் மெத்தை தயாரிப்புப் பிரிவில் செயல்படுகிறது. 40 லட்ச ரூபாய் நிதி உயர்த்தியுள்ளது.
தொழில்நுட்பம் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அங்கமாக உள்ளது. சமீபத்தில் படுக்கை சார்ந்த தயாரிப்புகளைக் கொண்ட பகுதியையும் தழுவியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ’சன்டே மேட்ரெசஸ்’ ஒவ்வொரு நாளும் சன்டே போலவே தூங்குவதற்கு உதவும் மெத்தை தயாரிப்பிற்குத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
அல்ஃபோன்ஸ் ரெட்டி பிட்ஸ் பிலானி, INSEAD பிசினஸ் பள்ளி, ஃப்ரான்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் 40 லட்ச ரூபாயை ஆரம்பகட்ட முதலீடாகக் கொண்டு 2015-ம் ஆண்டு சன்டே நிறுவனத்தை நிறுவினார்.
ஆந்திரப்பிரதேசத்தின் மதனபள்ளியைச் சேர்ந்த 38 வயதான அல்ஃபோன்ஸ் ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், சாஸ்கென், டெல்டா பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு படுக்கை தொடர்பான தயாரிப்புகளுக்காக மதனபள்ளி ரீடெயில் பிரைவேட் லிமிடெட் கீழ் ஆன்லைன் சந்தைப்பகுதியான ஃபேப்மார்ட் என்கிற நிறுவனத்தை நிறுவினார். சன்டே அதன் மற்றொரு வணிக முயற்சியாகும்.
நீங்கள் பணிபுரிவராக இருந்தால் வீட்டில் இருக்கும் சமயத்தில் படுக்கையில் அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். அந்த நேரத்தை நீங்கள் நிம்மதியாக செலவிட உதவும் நோக்கத்துடன் வாடிக்கையாளர் சேவை அளிக்கிறது. அவர்களது தயாரிப்புகள் 9,999 ரூபாய் முதல் 49,999 ரூபாய் வரை கிடைக்கிறது. திருப்தி இல்லையேல் 100 நாட்களில் திரும்ப அளிக்கும் வசதியும் 100 சதவீதம் கட்டணத்தை திரும்ப அளிக்கும் வசதியும் உள்ளது.
மெத்தை முக்கியத்துவம் வாய்ந்தது
இந்திய வாடிக்கையாளர்கள் மெத்தையைக் காட்டிலும் கட்டிலுக்கு அதிகம் செலவிடுவர். உங்களது கட்டில் தேக்கு, மஹோகனி, இரும்பு எதுவாக இருந்தாலும் அது தூக்கத்தை பாதிக்காது. மெத்தையின் மூலப்பொருட்கள், சுருள் (spring), தடிமன், அமைப்பு போன்றவையே முக்கியமானதாகும்.
”மெத்தையைத் தேர்ந்தெடுப்பது எளிதான விஷயம் அல்ல. நடுத்தர மெத்தை வகையே வளைந்திருக்கும் முதுகுத்தண்டின் இயற்கைத்தன்மையை தக்கவைத்துக்கொள்ள சிறந்ததாகும். எங்கள் மெத்தைகளை இளைஞர்கள் அதிகம் விரும்பி முயற்சித்துப் பார்க்கின்றனர்,” என்றார் அல்ஃபோன்ஸ்.
மக்கள் தங்களது மெத்தையை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது குறித்த விரிவான தரவுகளை மேம்பட்ட தொழில்நுட்பம் வாயிலாக சன்டே பெறுகிறது. தயாரிப்பில் புதுமைகளைப் புகுத்த இது உதவுகிறது. உதாரணத்திற்கு ஆரம்பத்தில் மிருதுவான இரண்டு மெத்தை மாதிரிகளை வழங்கி வந்தது. வாடிக்கையாளர் கருத்தைக் கொண்டே சன்டே 25,000 ரூபாய் மதிப்புடைய குறைந்த விலையிலான அதிக பொருட்களை இணைத்துக்கொண்டது.
”நாங்கள் திட்டம் உருவான 15 மாதங்கள் கழித்தே அறிமுகப்படுத்தினோம். ஏனென்றால் நாங்கள் எளிதான பாதையைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. நாங்கள் எதிர்பார்க்கும் தரத்தைக் கொண்ட மூலப்பொருட்கள் இந்தியாவில் இல்லை. பயணம் வாயிலாகவும் வணிக கண்காட்சி வாயிலாகவுமே இந்தத் துறை குறித்து தெரிந்துகொண்டோம்,” என்றார் அல்ஃபோன்ஸ்.
சன்டே அதன் மெத்தையின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. நீண்ட கால அடிப்படையில் வாடிக்கையாளரின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க முற்படுகிறது. ஐரோப்பிய தரநிலையை அடிப்படையாகக் கொண்டு இதன் மூலப்பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய எந்தவித ராசயனங்களும் இல்லை என்பதை உறுதிசெய்கிறது.
ஜெர்மனியில் இருந்து LGA சான்றிதழும் பெற்றுள்ளது. இது எந்த இந்திய ப்ராண்டிலும் இல்லை என்கிறார் அல்ஃபோன்ஸ். மெத்தையின் நீடிப்புத் திறனை இந்தச் சான்றிதழ் சுட்டிக்காட்டும். 1 முதல் 100 வரையில் உள்ள அளவுகோலில் 50 என்பது தேர்ச்சிக்கான குறியீடாகும். சன்டே 99-ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
அடிப்படைத் தேவை, தனித்துவமான சேவை
மெத்தை என்பது ஒவ்வொருவரின் அடிப்படை தேவையாக இருப்பினும் புதிய சிந்தனைகளை வரவேற்கும் படித்த தொழில்நுட்ப அறிவு கொண்ட இளைஞர்கள், குறிப்பாக பணிபுரியும் தம்பதிகள் அதிக ஆர்வம் காட்டியதாக தெரிவித்தார். இவர்களது கவனம் NPS-ல் உள்ளதே தவிர GMV-ல் இல்லை என்கிறார்.
”மற்ற அளவீடுகளைக் காட்டிலும் வாடிக்கையாளரின் மகிழ்ச்சியே எங்களுக்கு முக்கியம். மற்ற போட்டி நிறுவனங்களைப் போல் நாங்கள் வெறும் மெத்தை விற்பனையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தாமல் அனுபவத்தை அதிகரித்துக் கொள்ள விரும்புகிறோம்,” என்றார்.
தீவிர ஆய்விற்குப் பிறகு உள்ளூர் மற்றும் சர்வதேச குழுவைக் கொண்டு, சன்டே மெத்தைகள் வடிவமைக்கப்படுகிறது. முக்கிய மூலப்பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய ஏஜென்சிக்களால் அங்கீகரிக்கப்பட்டவைகளாகும். இவர்களது லேட்டக்ஸ் பெல்ஜியத்தில் இருந்து வாங்கப்படுகிறது. சன்டேவின் லேட்டக்ஸ் ப்ளஸ் மெத்தைகள் இந்தியாவில் முழுமையாக சான்றிதழ் பெற்ற முதல் மெத்தை என அல்ஃபோன்ஸ் தெரிவிக்கிறார்.
சன்டே மெத்தை மட்டுமன்றி தலையணைகள், மெத்தைவிரிப்புகள் போன்றவற்றையும் வழங்குகிறது. இவர்கள் இரண்டாண்டுகளுக்குள்ளாகவே டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் பரிந்துரைகள் வாயிலாக மட்டுமே 25,000 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக அல்ஃபோன்ஸ் தெரிவிக்கிறார்.
மேலும் பெரும்பாலான மெத்தை மற்றும் ஃபர்னிச்சர் ப்ராண்டுகள் டெலிவர் செய்யப்பட 7-14 நாட்களாகும். ஆனால் சன்டே அதில் பாதி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ளும். பெங்களூருவில் அதன் சொந்த நெட்வொர்க் வாயிலாக ஆர்டர் செய்யப்பட்ட அதே நாளிலேயே டெலிவர் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினர் அல்லாத மூன்றாவது நபர் வாயிலாக இந்தியா முழுவதும் 17,000 இடங்களுக்கு டெலிவர் செய்யப்படுவதாக அல்ஃபோன்ஸ் தெரிவிக்கிறார்.
தனித்துவமான உத்திகள்
ஃபேப்மார்ட், ப்ளிப்கார்ட், கேஎஃப்சி, பீட்டர் இங்லாண்ட் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்களை சன்டே குழு பெற்றுள்ளது. பாரம்பரிய மெத்தைத் துறையில் இருந்து நாங்கள் ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில்லை ஏனெனில் அவர்களின் மனநிலை தற்காலத்துக்கு ஏற்ப இருப்பதில்லை என்றார் அல்ஃபோன்ஸ்.
சன்டே அதன் வலைதளம் வாயிலாக ஆன்லைனிலும் பெங்களூருவில் உள்ள ஆஃப்லைன் ஸ்டோரிலும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. பெங்களூருவில் மற்றுமொரு கடையைத் திறக்கவும் பின்னர் சென்னை, ஹைதராபாத், மும்பை, பூனே, டெல்லி ஆகிய பகுதிகளில் செயல்படவும் திட்டமிட்டுள்ளனர். விநியோக மையமாக இல்லாமல் அனுபவமளிக்கும் மையங்களாக செயல்பட உள்ளனர்.
சன்டே வருவாயை அதிகரித்துள்ளபோதும் எந்த ஆன்லைன் சந்தைப்பகுதிகளிலும் விற்பனை செய்வதில்லை. அல்ஃபோன்ஸ் விவரிக்கையில்,
“நீங்கள் ஒரு மெத்தையை ஆன்லைனில் வாங்கினால் உங்கள் நண்பர்களிடம் ஃப்ளிப்கார்டிலோ அல்லது அமேசானிலோ வாங்கினேன் என்றே கூறுவீர்கள். அவர்களது டெலிவரியும் அனுபவமும் நாங்கள் வழங்குவது போல் இருக்காது. இதில் ப்ராண்ட் பெயர் அனைவரையும் சென்றடையாது. மற்ற மெத்தை ப்ராண்டுகளுடன் நாங்களும் ஒரு கூடுதல் ப்ராண்டாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. தனித்து விளங்க விரும்புகிறோம்.”
எனினும் சன்டே அதன் சொந்த வலைதளம் வாயிலாக ஒரு லட்சம் யூனிட்களை விற்பனை செய்யும் இலக்கை எட்டியதும் ஆன்லைன் சந்தைப்பகுதிகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. தரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதால் மற்ற மின் சில்லறை வர்த்தகர்களைப் போல் இந்த ஸ்டார்ட் அப் தள்ளுபடிகள் வழங்குவதில்லை. இவர்களது சராசரி விற்பனை அளவு 25,000 ரூபாயாகும்.
ஸ்டார்ட் அப் துவங்கியதில் இருந்து ஊழியர்களின் எண்ணிக்கை குறைவான அளவே அதிகரித்திருந்தாலும் வருவாய் 50 மடங்கு உயர்ந்துள்ளதாக அல்ஃபோன்ஸ் தெரிவிக்கிறார். 15 பேர் அடங்கிய குழு செயற்கை நுண்ணறிவையும் ஆட்டோமேஷனையும் பயன்படுத்துகின்றனர். பெங்களூருவில் நான்கு ட்ரக்குகள் உள்ளன. இவை ஒரு நாளில் சுமார் 10 டெலிவரிகளை செய்து முடிக்கும்.
"நிகழ்நேர தகவல்களுடனும் ஓட்டுனருக்கான தெளிவான வழிகாட்டலுடனும் செயல்படுகிறோம். ஊபர் ஒரு காரை அனுப்புவது போல் நாங்கள் மெத்தைகளை டெலிவர் செய்கிறோம். வாடிக்கையாளர்களின் விமர்சனங்களே ஓட்டுநர்களுக்கான ஊக்கத்தொகையை தீர்மானிக்கும்,” என்றார் அல்ஃபோன்ஸ்.
சன்டேவிற்கு பெங்களூருவில் இரண்டு கிடங்குகள் உள்ளன. மேலும் ஒரு கிடங்கு விரைவில் திறக்கவுள்ளது. உற்பத்தி பார்ட்னர்களுக்கும் பொருட்களின் இருப்பு தெரியும் வகையில் தரவுகள் நிகழ் நேர அடிப்படையில் மேம்படுத்தப்படுகிறது.
ஓராண்டில் லாபகரமாக செயல்பட்டது
சன்டே 2016-17-ல் 10-15 சதவீத மாத வருவாய் வளர்ச்சியுடன் லாபகரமாக செயல்பட்டது. முதலீட்டில் 100 சதவீத ஆண்டு வருவாய் ஈட்டப்படுவதாக அல்ஃபோன்ஸ் தெரிவித்தார்.
தற்போது நிதி உயர்த்தி வரும் நிலையில் விற்பனையோ தள்ளுபடியோ இல்லாத சில திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
“நாங்கள் லாபகரமாக செயல்பட்டு வருகிறோம். எங்களது உற்பத்தி மற்றும் R&D இந்தியாவில் உள்ளது. இதனால் செலவு குறைகிறது. அதிக வேலைவாய்ப்பையும் வழங்க முடிகிறது,” என்றார் அல்ஃபோன்ஸ்.
திரும்பப்பெறும் மெத்தைகளை சன்டே மறுவிற்பனை செய்கிறது. எனினும் இந்தச் சேவை ஆன்லைனில் இல்லை. அவர்கள் திரும்பப்பெறும் சதவீதம் ஐந்திற்கும் குறைவாகும். பொதுவாக ஏழு நாட்களில் திரும்பப்பெறப்படுவதால் பயன்படுத்தப்படாத நிலையிலேயே இருக்கும். மேலும் சன்டேவில் புதிய மெத்தை வாங்கும்போது வாடிக்கையாளர் விருப்பப்பட்டால் பழைய மெத்தை அகற்றப்படும்.
இந்தியாவில் மெத்தை துறையில் 30 சதவீதம் மட்டுமே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்றார் அல்ஃபோன்ஸ்.
“இந்தத் துறையின் தயாரிப்புகளுக்கு போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை. பிரத்யேகமான மெத்தைகளுக்கான ஸ்டோர்கள் தற்போது செயல்படத் துவங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனை அதிகரித்து வருகிறது. இது ஒரு நல்ல அறிகுறி,” என்றார்.
இந்தியாவில் மெத்தைக்கான சந்தை மதிப்பு 3 பில்லியன் டாலராகும். தூக்கம் சார்ந்த பொருட்களின் சந்தையில் Wakefit, SleepyCat போன்ற போட்டியாளர்கள் கவனம் செலுத்தும் போதும் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சந்தையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதைத்தான் சன்டே மேட்ரசஸ் இலக்காகக் கொண்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர் : அதிரா ஏ நாயர் | தமிழில் : ஸ்ரீவித்யா