Hindenburg எதிரொலி; FPOவை நிறுத்திய அதானி- FPO என்றால் என்ன?

அதானி குழுமம் அதன் FPO விற்பனையை திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அதனால் முதலீட்டாளர்களுக்கு சேர வேண்டிய தொகையையும் திரும்பக் கொடுக்கிறது. இது தொடர்பான விவரங்களை விரிவாக பார்ப்போம்.

இந்தியாவின் முன்னணி வணிகக் குழுமத்தில் ஒன்றான அதானி குழுமம் அதன் FPO விற்பனையை திரும்பப் பெற்றுள்ளதாக நேற்று அறிவித்தது. சந்தையில் அதானி குழுமம் வரலாறு காணாத சரிவை கண்ட போதும் முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்த சூழலில் அதனை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முதலீட்டாளர்களுக்கு சேர வேண்டிய தொகையையும் திரும்பக் கொடுக்கிறது. இது தொடர்பான விவரங்களை விரிவாகப் பார்ப்போம். 

துறைமுக மேலாண்மை, மின்சாரம், சுரங்கம், ரெனிவபுள் எனர்ஜி, விமான நிலைய செயல்பாடுகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, உணவு பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு என பல்வேறு சேவை சார்ந்த துறைகளில் அதானி குழுமம் இயங்கி வருகிறது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி வில்மார் என சுமார் 12 துணை நிறுவனங்களை உள்ளடக்கிய குழுமம் இது. இதன் தலைவராக கெளதம் அதானி உள்ளார். அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் இந்த குழுமத்தின் முதன்மை நிறுவனமாக உள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது நிறுவன வளர்ச்சியை 4 கட்டங்களாக பிரிக்கலாம் என சொல்லி இருந்தார் கெளதம் அதானி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை உலகின் முதல்நிலை செல்வந்தர்களில் ஒருவராகவும் அவர் அறியப்பட்டார். அவர் குறித்த செய்திகள் பரவலாக வைரலாகி வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் முதலீடு சார்ந்த ஆய்வு நிறுவனமான Hindenburg, அதானி குழுமத்தின் செயல்பாடு குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பல ஆண்டுகளாக பங்குகளை முறைகேடான முறையில் கையாண்டது மற்றும் கணக்கு விவகாரங்களில் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. அது அந்நிறுவனத்தின் பங்கு மதிப்புகளை சந்தையில் சரியச் செய்தது. 

adani group

இதன் எதிரொலியாக கெளதம் அதானியின் சொத்து மதிப்பு சரிவை கண்டது. அதன் காரணமாக டாப் 10 செல்வந்தர்களின் பட்டியலில் இருந்து புறந்தள்ளப்பட்டார். தற்போது Forbes-ன் ரியல் டைம் பில்லியனர் பட்டியலில் 68.3 பில்லியன் டாலர்களுடன் இந்தப் பட்டியலில் 16-வது இடத்தில் அவர் உள்ளார்.

இந்நிலையில்தான், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பத் தருவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. 

அதானி குழுமம் அறிக்கை: FPO சந்தாவை முன்னெடுத்துச் செல்லும் திட்டத்தை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் கைவிடுகிறது. இது நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவாகும். 

”நிறுவனத்தின் தற்போதைய சந்தை நிலவரம் மற்றும் சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் நலன் கருதி FPO-வை திரும்பப் பெறுகிறோம். மேலும், முதலீட்டாளர்களுக்கு அந்தத் தொகையை திரும்பக் கொடுக்க முடிவு செய்துள்ளோம் என பிப்ரவரி 1, 2023 தேதியிட்ட அறிக்கையில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது. 
gautam adani

இது குறித்து அதானி என்ன சொல்லியுள்ளார்?

“எங்களது FPO அறிவிப்பை அடுத்து அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் எங்கள் நிறுவனம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். FPO சப்ஸ்கிரிப்ஷன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. நிறுவனத்தின் பங்குகளில் ஏற்ற இறக்கம் இருந்தபோதும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. 

முன் எப்போதும் இல்லாத வகையில் நிறுவனத்தின் பங்குகளில் தற்போது ஏற்ற மற்றும் இறக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இதனை தொடர்வது சரியானதாக இருக்காது. அதே நேரத்தில் முதலீட்டாளர்களை நிதி இழப்புகளில் இருந்து காப்பது மிகவும் முக்கியமாகும். அதனை கருதி FPO-வை திரும்பப் பெறுகிறோம். இது நிர்வாகக் குழு எடுத்த முடிவு, என்று வீடியோ மூலம் பேசினார் அதானி. 

பணத்தை முதலீட்டாளர்களுக்கு செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக அவரவர் கணக்குகளில் பற்று வைக்கப்பட்ட தொகை விடுவிக்கப்படும். அதே நேரத்தில் நிறுவனத்தின் இருப்புநிலை வலுவாக உள்ளது. அதற்குக் காரணம் பணப்புழக்கம் மற்றும் சொத்துகள்தான். கடன் சார்ந்த விவகாரத்தில் சிறந்த டிராக் ரெக்கார்டை கொண்ட நிறுவனம் இது. இந்த முடிவு நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால இயக்கத்தை பாதிக்க செய்யாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

நீடித்த வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்துவோம். சந்தை நிலவரம் சீரானதும் மூலதானம் சார்ந்த சந்தை உத்தியை ரிவ்யூ செய்வோம். எங்களுக்கு உங்களது ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்பதை முழுமையாக நம்புகிறோம். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி, என அவர் தெரிவித்துள்ளார். 

fpo

FPO என்றால் என்ன? 

Follow on Public Offer என்பதன் சுருக்கம்தான் FPO. பங்குச் சந்தையில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தனது பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு புதிய பங்குகள் வெளியிடும் முறைதான் FPO. இது நிறுவனத்தின் பங்கு தளத்தை பல்வகைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

மூலதன விரிவாக்கம் அல்லது கடனை திரும்ப செலுத்த அல்லது பங்குகள் பொதுவான பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நோக்கில் நிறுவனங்கள் FPO அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். 

அதைத்தான் அதானி குழுமம் செய்திருந்தது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதித் திரட்டும் முயற்சியை அதானி குழுமம் முன்னெடுத்தது. தற்போது அதனை திரும்பப் பெற்றுள்ளது. 


Edited by Induja Raghunathan

Daily Capsule
Crickpe’s cash rewards raise concerns
Read the full story