தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா- வரலாற்றுச் சுவடுகளும், சாதனை நிகழ்வுகளும்!
பல்வேறு வரலாற்று சாதனை தீர்மானங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றியுள்ள தமிழ்நாடு சட்டசபை நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் 17ம் நூற்றாண்டு கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு சட்டசபையின் நூற்றாண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுகிறது. வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நூற்றாண்டு விழா நிகழ்வை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோகித், மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்வில், ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி புகைப்படத்தை குடியரசுத்தலைவர் சட்டசபை வளாகத்தில் திறந்து வைத்தார்.
கடந்த 40 ஆண்டுகளில் மாநிலத்தில் குறிப்பிட்டத்தக்க தலைவர் ஒருவர் படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பது இதுவே முதல் முறை.
1977ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் புகைப்படத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் சஞ்சீவ் ரெட்டி திறந்து வைத்தார். இந்திய அரசுச்சட்டம் 1919 இயற்றப்பட்ட பின், சென்னை மாகாணத்தில் 1921ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி நடைபெற்றது.
முதல் சட்டசபை
அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் நடைபெற்ற முதல் தேர்தலில், தி.மு.க-வின் தாய் கட்சி என வர்ணிக்கப்படும் நீதி கட்சி ஆட்சிக்கு வந்தது.
1921ம் ஆண்டு ஜனவரி 12 ம் தேதி, ஜார்ஜ் மன்னரின் சித்தப்பா கன்னாட் சென்னை மாகாண சட்டசபையை துவக்கி வைத்தார்.
மக்கள் பங்கேற்ற தேர்தலை அடுத்து சட்டசபையில் நியமன உறுப்பினர்கள் குறைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அதிக அளவில் இருந்தனர். சென்னை சட்டசபையில் கட்சிவாரியாக உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் எந்த உறுப்பினர் எங்கு வேண்டுமானாலும் அமரலாம் எனும் நிலை இருந்தது.
நீதிக் கட்சி பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க சட்டங்களைக் கொண்டு வந்தது. முக்கிய சீர்திருத்தங்களையும் கொண்டு வந்து மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கும் வழி வகுத்தது இந்த சட்டசபையில் தான்.
1920 தேர்தலில் ஆண்கள் மட்டுமே வாக்களித்தனர். 1921 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர், பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாவதற்கும் வழி செய்யப்பட்டது. 1927ம் ஆண்டு, புகழ்பெற்ற மருத்துவரும், சமூக சீர்திருத்தவாதியுமான முத்துலட்சுமி ரெட்டி முதல் பெண் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாரதியார் பாடல்
1927ல் காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி தடை செய்யப்பட்ட பாரதியார் பாடல்களை பாடி, இது தொடர்பான பிரச்சனையை எழுப்பி தடை நீக்கப்பட வழி செய்தார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952 ஜனவரியில் நடைபெற்ற பொதுத்தேர்தலை அடுத்த தமிழ்நாடு மாநிலத்தின் முதல் சட்டப்பேரவை 1952 மார்ச் 1ம் தேதி அமைக்கப்பட்டது.
1967-71ல் நான்காம் சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் சென்னை மாநிலத்தை ”தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டது. அப்போது தான் சென்னை சட்டசபை எனும் பெயர் தமிழ்நாடு சட்டப்பேரவை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1957ல் திமுக சார்பில் கருணாநிதி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் 13 முறை தேர்தலிகளில் வெற்றி பெற்று, தொடர்ந்து 62 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். எந்த ஒரு சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியை தழுவியதில்லை.
1967ம் ஆண்டு சட்டப் பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்தது. இதே எண்ணிக்கை தற்போதும் தொடர்கிறது.
புகழ்பெற்ற உறுப்பினர்கள்
1986ல் சட்ட மேலவை ரத்து செய்யப்பட்டது. 2010ல் சட்டசபை புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. 2011ல் மீண்டும் சட்டசபை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது.
ராமசாமி முதலியார், லட்சுமணசாமி முதலியார், சத்தியமூர்த்தி, சி.பி.ராமசாமி ஐயர், டி.எஸ்.எஸ் ராஜன், ராஜன், சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பல மகத்தான தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சட்டசபை எண்ணற்ற சுவாரஸ்யமான மற்றும் அனல் பறக்கும் விவாதங்களையும் கண்டிருக்கிறது.
சாதனைச் சட்டங்கள்
ஓமந்தூரார், பக்தவச்சலம், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்களை முதல்வர்களாக தமிழ்நாடு சட்டசபை கண்டிருக்கிறது.
தேவதாசி முறை ஒழிப்பு, அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கம், இந்து சமய அறநிலை பாதுகாப்புச்சட்டம், சுயமரியாதை திருமணச் சட்டம், இரு மொழி கொள்கை சட்டம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க சட்டங்களையும் நிறைவேற்றி மக்கள் நலனுக்கு வழிவகுத்துள்ளது.