உயிர் காக்கும் அசாத்திய மனிதர்களை கெளரவித்த 'அலெர்ட்'
இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்பவர், ஆதரவற்றோருக்கு இறுதி மரியாதை அளிக்கும் அமைப்பு, சாலைப் பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் தன்னார்வலர் உள்ளிட்டோருக்கு 'அலெர்ட்' அமைப்பு விருது வழங்கி கவுரவித்தது.
''வீட்டிற்கு ஒருவரையாவது அவசர காலங்களில் உதவுவதற்கு தயார்படுத்துங்கள்'' என்கிற அப்துல் கலாம் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கூறும் அலெர்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம், தங்கள் அசாத்திய பணிகளால் மக்களைக் காத்துவருவோருக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
'ஆம்புலன்ஸ்' மணிகண்டன்
புதுச்சேரியின் வல்லியனூரை சேர்ந்த ந.மணிகண்டன் 'அலெர்ட் பீயிங்' (Alert Being) விருதை பெற்றார். ஒருநாள் சாலையை கடக்கும்பொழுது ஓர் இளைஞர் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோது தன்னுடைய சொந்த சகோதரன் விபத்தினால் சாலையில் துடிதுடித்தபடி இருந்ததை கண்டு நிலைகுலைந்து போனார். அன்றிலிருந்து இன்று வரை யாருக்குக்காவது ஆபத்தென்று அழைப்பு வந்தால் உடனடியான தன்னுடைய ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு விரைவார்.
இந்த விருது வாங்கியப்பின் அவர் பேசும்போது,
"என்னை ஊக்கப்படுத்தி விருது கொடுத்த அலெர்ட்டுக்கு நன்றி. கலாம் ஐயா பெயரால் இந்த சேவையை செய்ய, யாரிடமும் காசு வாங்காமல் இதுவரை 200-க்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றியிருக்கிறேன். என் சொந்த உழைப்பிலயே ஆம்புலன்ஸ்க்குகான மாத தவணையை கட்டியுள்ளேன். மிகுந்த திருப்தியுடன் இந்தப் பணியை செய்து வருகிறேன். நிம்மதியாகவும் இருக்கிறேன்," என்றார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட தொழிலதிபர் ஒருவர் மேலும் இன்னொரு வாகனம் வாங்குவதற்குகான பணத்தை தான் தருவதாக கூறி அனைவரின் உள்ளத்தைக் கவர்ந்தார்.
உறவுகளுக்கு கெளரவம்
ஆதரவற்ற மற்றும் அடக்கம் செய்ய வசதியற்ற நிலையில் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்தும், வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறந்துவிடுபவர்களை அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவியாக அவசர ஊர்தி சேவை செய்தும், சாலையோரங்களில் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை அன்பு இல்லங்களில் சேர்த்தும், அவர்களின் குடும்பத்தின் ஒருவராக இருந்து இந்த நற்பணியை செய்து வருவதற்காக 'உறவுகள்' அமைப்பிற்கு 'குட் சமாரிட்டன் அலெர்ட்' விருது வழங்கப்பட்டது.
சீரமைப்பு ஆர்வலர் மீனா
மீனா சத்தியமூர்த்திக்கு 'சமாரிட்டன் அலெர்ட் பீயிங்' விருது வழங்கப்பட்டது. சீர்கேடான சாலைகளால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படடவர்தான் மீனா. இவற்றால் இனி யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற பொதுநலநோக்கில் 30 நாட்களில் இந்த சீர்கேடுகளை சீராக்கி காட்டவேண்டும் என்று தனக்குத் தானே சவால் விடுத்து கொண்டார். மீனாவின் தொடர் முயற்சியால் அவர் கொடுத்த மனுக்களை ஏற்று சென்னை மாநகராட்சி அப்பணிகளை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.
தன்னால் முடிந்தவரை பாராமரிப்பற்று கிடக்கும் சாலைகள், குப்பைத்தொட்டிகள், வழிந்து வடியும் சாக்கடைகள் என அனைத்தும் சரிவர இயங்கும் வரை தானும் இயங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறார்.
வாழ்நாள் சாதனையாளர்
தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணம், பெற்ற நன்கொடைகள் அனைத்தையும் பிறரின் நலனுக்காக வாரி வழங்கிய 'பாலம்' கல்யாணசுந்தரம் ஐயாவுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய பின் அவர் பேசும்போது,
''நான் ஒண்ணும் பெருசா செஞ்சிரல. என்னை விட நிறைய பேர் நிறைய விஷயம் பண்ணீருக்காங்க. யாரோ கொடுத்த பணத்த தேவைபடுவோருக்கு கொடுக்குறதுல என்ன கஷ்டம் இருக்கு. எனக்கு வந்தது, கொடுத்தேன். உங்களுக்கும் வந்திருந்தா நீங்களும் கொடுத்திருப்பீங்க.”
மக்களுக்காக தொண்டு செய்றவங்க காசசெல்லாம் ஏதிர்பார்த்து வேலை செய்யக்கூடாது. ஆனா ஒண்ணு மக்களை நீங்க பாத்துக்கிட்டா மக்கள் உங்கள பாத்துப்பாங்க. உண்மையான சந்தோசம், மத்தவங்களுக்கு உதவுறதுதான். என் சொந்தகாரவங்களாம் சொன்னாங்க: இப்படியே குடுத்தா உன் கடைசி காலத்துல உடம்பு சரியில்லாதப்ப யாரு பாப்பா? உன் சாவுக்கு நாலு பேருக்கூட வர மாட்டாங்கன்னு சொன்னாங்க. அவங்க ஏன் சிரமப்படணும்? அதுனாலதான் என் உடம்ப தானம் பண்ணிட்டேன்.
நான் உடம்பு சரியில்லாத இருந்தப்ப நிறைய பேரு பணம்கொடுக்க வந்தும் வேணாம்னு மறுத்துட்டேன். மாறா எல்லோரும் ஒரு ரூபாய் குடுங்கன்னு கோரிக்கை வச்சேன். அப்துல் காலம் உட்பட நிறைய பேர் எனக்கு பணம் கொடுத்தாங்க. மொத்தம் நாற்பது லட்சம் பணம் வந்தது. எல்லா சந்தோசமமும் தாற்காலிகமே.
”நாம் சாப்புடுற சாப்பாடு பரம ஏழைக்கும் போய் சேரணும். அதுதான் உண்மையான சந்தோசம். நல்லது செஞ்சா ராஜ கணக்கா இருக்கலாம் ஆசை இருக்கலாம்; பேராசை வேண்டாம்,'' என்று கூறினார்.
திரைப்பட நடிகை கவுதமி புற்றுநோய் பாதிக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்து அவற்றிலிருந்து மீண்டு இன்று புற்றுநோய் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி வருகிறார். அதனால் 'அலெர்ட் ஐகான்' விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகளுக்கு உரியவர்களை ஆறு பேர் கொண்ட நடுவர்கள் தேர்வு செய்தார்கள். இந்த நடுவர் குழுவில் மருத்துவர், தொழிலதிபர், ஐ.பி.எஸ் போன்ற பல்துறை நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, அலெர்ட் நிறுவனத்தின் நிர்வாகி ராஜேஷ் திரிவேதி Alert VoICE (VOLUNTEER IN CASE OF EMERGENCY) என்கிற செயலியை அறிமுகப்படுத்தி பேசினார்.
"இந்த செயலி பல லட்சம் உயிர்களை காப்பாற்றப் போகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்தக் கருவி அவசர நேரங்களில் எப்படி உதவுவது என்று தெரியாமல் இருந்த அனைவருக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்க இருக்கிறது. இது ஓர் உயிர் காப்பான் கருவி. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒருவர் தங்களை இத்துடன் இணைத்து கொண்டு தன்னார்வதுடன் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்தலாம்," என்றார்.
அலெர்ட் வாய்ஸ் செயலியை துவக்கி வைத்தார், அப்போலோவின் தலைவர் பிரதாப் சி ரெட்டி.
''இந்த ஆக்கப்பூர்வமான பணியில் எங்கள் மருத்துவமனை ஒரு பங்கு வகிக்கிறது என்பதில் பெருமை அடைகிறேன். அலெர்ட்டின் இந்த முயற்சிக்கு நாங்கள் என்றுமே துணை நிற்போம். இந்தியாவில் மாரடைப்பினால் இறப்பவர்கள் அதிகம். அதுவும் 40 வயதிற்கு குறைவானோர் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முறையான முதலுதவிகள் செய்தால் பிழைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. கவலைப்பட வேண்டாம். அப்பணிகளை இந்த செயலி நிறைவேற்றும்.” என்றார் அவர்.
ஆபத்து காலங்களிலும் அவசர நேரங்களிலும் ஒரு சாமானியனும் எப்படி முதலுதவி செய்யலாம் என்கிற விழிப்புணர்வு பணியை சுமார் 12 ஆண்டுகளாக செய்து வருவதாக கூறும் அலெர்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம், இந்தியா முழுவதும் 70,000 மேற்பட்ட மக்களுக்கு முதலுதவி தேவைப்படும் நேரங்களில் எப்படி உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்கிற பயிற்சியினை வழங்கியுள்ளதாகவும், இதனால் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.
கட்டுரை உதவி: பியர்சன்