அப்பாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கனவை ரூ.414 கோடி வருவாய் நிறுவனமாக்கிய மகன்!
உலகெங்கும் ஆர்வலர்கள் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி வரும் நிலையில், பக்கா லிமிடெட்டின் நிறுவனர், பிளாஸ்டிற்கான பயன்பாட்டை குறைப்பதைவிட, சூழலுக்கேற்ற நிலையான பேக்கேஜிங் மற்றும் டேபிள்வேர் தயாரிப்புகளை தயாரிக்கத் தொடங்கினார்.
1950-களின் பிற்பகுதியில் தான் பிளாஸ்டிக்கின் பயணம் தீவிரமாகத் தொடங்கியது. அதிலும், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பேக்கேஜிங் நுகர்வு 200 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகெங்கிலும் ஆர்வலர்கள் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி வரும் நிலையில், பக்கா லிமிடெட்டின் நிறுவனர், பிளாஸ்டிற்கான பயன்பாட்டை குறைப்பதைவிட வணிகம் அம்மாற்றத்திற்கான ஒரு வாகனமாக அமையும் என்பதை உணர்ந்து 'உலகத்தார் உணவை பாதுகாப்பாக உண்ண வேண்டும்' என்ற தாராகமந்திரத்துடன் சூழலுக்கு உகந்த நிலையான பேக்கேஜிங் மற்றும் டேபிள்வேர் தயாரிப்புகளை தயாரிக்கத் தொடங்கினார்.
4 தசாப்தங்களின் முடிவில் இன்று யாஷ் பக்கா லிமிடெட், Amazon, KFC மற்றும் Google போன்ற 40க்கும் மேற்பட்ட வணிக கூட்டாளர்களுடன் பணிபுரிகிறது. US, UK, ஸ்வீடன், துருக்கி மற்றும் ஆஸ்திரேலியா உட்பட 43 நாடுகளில் முன்னிலையில் உள்ளது மற்றும் 16,000க்கும் அதிகமான பங்குதாரர்களைக் கொண்டுள்ளது. 2023-24ம் நிதியாண்டில் ரூ.414 கோடி வருவாய் ஈட்டி சந்தையில் அதன் பெயரை நிலைநிறுத்தி உள்ளது.
கரும்பு கழிவுகளிலிருந்து காகிதங்கள்...
தந்தையின் கட்டாயத்தால் அவர்களது குடும்பத் தொழிலை கையெலிடுத்த வேத் கிருஷ்ணா, இம்மண்ணில் வாழ்வதற்கான அவரது நோக்கம், மண்ணை பாதுகாப்பது என்பதே பின்னாளிலே அறிந்தார். 1981ம் ஆண்டு கே கே ஜுன்ஜுன்வாலா கரும்புக் கழிவுகளை மறுசுழற்சி செய்து ஒரு காகித ஆலையை அமைக்க விரும்பினார். ஏனெனில், அவரது தந்தையின் கரும்பு ஆலையில் குவியல் குவியலாகிய கரும்பு சக்கைகள் எவ்வித பயனுமின்றி மண்ணில் முடிவதால், அதை மூலப்பொருளாக்கி ஒரு தயாரிப்பை உற்பத்தி செய்ய திட்டமிட்டார்.
ஆனால், அதில் ஒரு சிறிய சிக்கல் இருந்தது. இயந்திரங்களை வாங்குவதற்கு தேவையான நிதி அவரிடம் இல்லை. அவரது தொழில் முனைவோர் கனவுகளுக்கு நிதியளிப்பதற்காக அவரது மனைவி நகைகளை விற்று முதலீட்டு தொகையை அளித்தார். இது யாஷ் பேப்பர்ஸ் பிறப்பிற்கு வழிவகுத்தது.
ஒரு சிறிய காகித ஆலையாகத் தொடங்கிய 15 முதல் 20 ஆண்டுகளில் யாஷ் பேப்பர்ஸ் சந்தையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. தொழில் வளர்ச்சியை எட்டத் தொடங்கிய காலக்கட்டத்தில் கே கே-விற்கு உடல்நலம் பாதித்து இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. துயரக் காலம் அளித்த அனுபவம் அவரை தொழில்முனைவை விட்டு வேறு திசையில் பயணிக்க செய்தது.
உலகம் முழுவதும் சுற்றி வர விரும்பினார். அதனால், அவரது தொழிலை அவரது மகன்களிடம் ஒப்படைக்க எண்ணினார். ஆனால், அவரது இரு மகன்களும் குடும்பத் தொழிலில் ஆர்வம் காட்டவில்லை. மூத்த மகனான வேத் கிருஷ்ணா, அவரது தந்தையின் தொழில் முனைவோர் போராட்டங்களைக் கண்டதால், குடும்பத் தொழிலில் சேர விருப்பமில்லை. அப்போது அவர் லண்டனில் விளையாட்டு மேலாண்மை படித்து வந்தார். அவரது மகன்களின் ஆர்வமின்மை காரணமாக வணிகத்தை தொடர்ந்து நடத்துவதில் சவால்களை எதிர்கொண்ட கே கே 1998-99ம் ஆண்டுவாக்கில் நிறுவனத்தை விற்க முயன்றார். ஆனால், அதுவும் கைக்கூடவில்லை.
வெளிநாட்டில் படித்து கொண்டிருந்த வேத் கிருஷ்ணா, விடுமுறைக்கு மட்டுமே இந்தியாவிற்கு வந்து தந்தையுடன் இருந்ததால், கடினமாக முயற்சி செய்தும் வெற்றியை அடைய முடியாமல் தவித்த அவரது தந்தையின் வலியை அவரால் உணர முடிந்தது. அதன் காரணமாக நிறுவனத்தை கையிலெடுக்க முடிவெடுத்தார் வேத்.
தொழிற்சங்க பிரச்சினைகள் முதல் நிதி இழப்புகள் வரை ஆரம்பகால போராட்டங்கள் இருந்தபோதிலும், வேத் நிறுவனத்தை சீராக வளர்த்தார். இன்று, 43 ஆண்டுகளுக்குப் பிறகு, பக்கா லிமிடெட் 2023-24ம் நிதியாண்டில் ரூ.414 கோடி வருவாய் ஈட்டி சந்தையில் அதன் பெயரை நிலைநிறுத்தியது.
சுற்றுச்சூழலை துாய்மையாக்க வணிகம் ஒரு வாகனம்...
நிறுவனத்தில் வேத் பொறுப்பேற்ற சமயத்தில் நிறுவனத்தின் வருவாய் வீழ்ச்சியடைந்தது. செயல்பாடுகள் குழப்பமாக இருந்தன. தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இல்லை. வியாபாரம் சரிந்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது.
"விஷயங்களை மீண்டும் ஒழுங்கமைக்கவே எனக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆனது. விஷயங்கள் சிறப்பாக வரத் தொடங்கியதும், கரும்புக் கழிவுகளைப் பயன்படுத்தி அதிகசிறப்பு வாய்ந்த காகிதங்களைத் தயாரிக்க தீர்மானித்தேன். அது நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கான வாய்ப்பாக அமையுமென எண்ணினேன்," என்று வேத் தி பெட்டர் இந்தியாவிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து சர்க்கரைப் பொட்டலங்கள் முதல் மெக்டொனால்டு ரேப்பர்கள் வரை உணவு மற்றும் மருந்துத் தொழில்களுக்கான சிறப்புதர காகிதங்களைத் தயாரிப்பதில் நிறுவனம் முன்னோக்கிச் சென்றது. அச்சமயத்தில் வேத்தின் தந்தை இறந்தார். இது அவருக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் பெரும் அடியாகியது.
ஏனெனில், வேத் அவரது தந்தையின் அடிச்சுவடு பற்றி அவரது பாதையில் பயணித்து கொண்டிருந்தார். இச்சவாலான நேரம், வேத் அவரது தலைமைப் பண்பு உட்பட, அவரது தந்தையின் அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வருவதை உணர செய்து, அவரது பாதையை மறுபரிசீலனை செய்யத் தூண்டியது.
"நான் என் தந்தையைப் போல இருக்க முயற்சித்தேன். ஆனால், அவர் அதை ஒருபோதும் விரும்பவில்லை. அவரின் மறைவுக்கு பிறகு, நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன். சூழலுக்கு உகந்தது மற்றும் சூழலுக்கு நன்மை பயக்கும் ஒன்றை செய்ய விரும்பினேன். பேக்கேஜிங்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க, நிறுவனத்தை நிலைத்தன்மைக்கு மாற்றினேன்," எனும் அவர் சூழலை சுத்தம் செய்வதைவிட வணிகம் அம்மாற்றத்திற்கான ஒரு வாகனம் என்பதை உணர்ந்தார்.
இதைத் தொடர்ந்து நிறுவனம் மக்கும் பேக்கேஜிங் தயாரிப்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. மேலும், கரும்பு சக்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட மக்கும் டேபிள்வேர்களை உற்பத்தி செய்யும் CHUK என்ற பிராண்டையும் அறிமுகப்படுத்தியது. ஹல்டிராம்ஸ், ரெபெல் ஃபுட்ஸ் மற்றும் கஃபே காபி டே போன்ற பிராண்டுகள் இன்று அவர்களின் வாடிக்கையாளர்களாக உள்ளன.
“மண்ணில் வாழ்வதற்கான என் நோக்கம் மண்ணை பாதுகாப்பதே..!”
ஆர் அண்ட் டி-ல் முதலீடு செய்ததன் மூலம், நிறுவனம் அளவிடக்கூடிய தன்மையை அடைந்தது. இதன்மூலம், வேத் அவரது நோக்கத்தைக் கண்டறிவதோடு, 2018 நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.200 கோடியாக அதிகரிக்க வழிவகுத்தது. 2019ம் ஆண்டில், நிறுவனம் யாஷ் பேப்பர்ஸிலிருந்து "பக்கா லிமிடெட்" என மறுபெயரிடப்பட்டது, அதற்கு 'packaging with a soul' என்று பொருள்.
மேலும், வேத் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் MD பதவியில் இருந்து விலகி, ஸ்ட்ராட்டஜி லீட் ரோலுக்கு மாறினார். இந்த புதிய பொறுப்பில், அவர் மூலோபாய முன்முயற்சிகள், கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளித்தார். அதே நேரத்தில், அன்றாட செயல்பாடுகளை கவனிக்கும் பொறுப்பை மற்றவர்களுக்கு வழங்கினார்.
நிலையான பேக்கேஜிங்கிற்கான தயாரிப்புகளை உற்பத்தியில் கவனம் செலுத்தும் அதே வேளை, வேத் நிறுவனத்தின் கழிவு உற்பத்தியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். மக்கும் மேஜைப் பாத்திரங்களைத் தயாரிப்பதற்கான கூழ் தயாரிக்க நவீன கூழ் ஆலையையும் அமைத்தனர். பக்காவின் அயோத்தி தொழிற்சாலை ஆண்டுக்கு 50,000 டன் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. இதை 80,000 டன்களாக விரிவுபடுத்துவதற்கான திட்டங்களுடன் செயல்பட்டு வருகின்றது.
குவாத்தமாலாவில் 1,30,000 டன் உற்பத்தி திறன் கொண்ட ஒரு புதிய தொழிற்சாலையை நிறுவுவதன் மூலம் நிறுவனம் அதன் உலகளாவிய வரம்பை விரிவுபடுத்துகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் ரூ.1,400 கோடி வருவாயை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. நஷ்டத்தில் இருந்து மக்கும் பேக்கேஜிங்கில் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக நிறுவனத்தை மாற்றுவதற்கு வேத்திற்கு உதவியது அவருடைய நோக்கத்தைக் கண்டறிந்ததாகும்.
"வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் எதற்காக இங்கே இருக்கிறோம் என்பதை அறிவதுதான். நம்மால் 40 முதல் 50 ஆண்டுகள் வேலை செய்ய முடியும். 80 ஆண்டுகள் ஆயுட்காலம் உள்ளது. ஒவ்வொரு நாளையும் கணக்கிட முயற்சிப்பதுதான் எனக்கு உதவியது. தூய்மையான கிரகத்தை நோக்கி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த தயாரிப்புகளை உருவாக்கவும், அளவிடவும் நான் இங்கு இருக்கிறேன் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்," என்று கூறி முடித்தார்.
தகவல் மற்றும் படங்கள் உதவி : தி பெட்டர் இந்தியா
பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து நீடித்த தண்ணீர் தீர்வை அளிக்கும் தாய்- மகன் நடத்தும் 'Boon'