'15 நாட்கள் வாடாத மலர்கள்' - பூஜைப் பூக்கள் விற்பனைத் தொழிலில் புரட்சி செய்யும் சகோதரிகள்!
செழிப்பான மலர் வர்த்தகம் செய்யும் குடும்பத்தில் இருந்து வந்த சகோதரிகள் ரியா மற்றும் யசோதா கருத்தூரி, பூஜைக்குரிய மலர்களுக்கான சந்தாவைக் கொண்டு வருவதில் முக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டனர்.
பெங்களூரைச் சேர்ந்த யசோதா கருத்தூரி (28), ரியா கருத்தூரி (25) சகோதரிகள் பூக்களுக்கு மத்தியில் ‘மலர்களில் ஆடும் இளமை புதுமையே... மனதினில் ஓடும் நினைவு இனிமையே’ என்பது போல் வளர்ந்தனர்.
யசோதா பிறந்தபோது, அவர்களின் தந்தை ராமகிருஷ்ண கருத்தூரி எத்தியோப்பியாவில் ரோஜா பண்ணையைத் தொடங்கினார். மலர்களுடன் மலர்களாக வளர்ந்த இந்தச் சகோதரிகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக தந்தையின் ரோஜா வர்த்தகம் பூரித்து வளர்ந்ததையும் இவ்வர்த்தகம் இந்தியா மற்றும் கென்யாவிலும் பரவியதையும் ஆர்வத்துடனும் குதூகலத்துடனும் கவனித்தனர்.
இதுபற்றி ரியா மற்றும் யசோதா என்கிற பூக்களின் சகோதரிகள் கூறும்போது,
“யசோதா பிறந்த ஆண்டிலேயே எங்கள் தந்தை தனது முதல் ரோஜாப் பண்ணையைத் தொடங்கினார். அவர் அந்த மூன்று ஏக்கர் பண்ணையை ஒரு தசாப்த கால இடைவெளியில் உலகின் மிகப்பெரிய ரோஜா பண்ணையாக வளர்த்தார், அதை நாங்கள் எங்கள் கண்களால் பார்த்தபடிதான் வளர்ந்தோம்,” என்றார்கள்.
குடும்ப வணிகம் எனும் தூண்டுகோலால் விளைந்த ‘Hoovu Fresh’
பூக்கள் விற்பதில் சிறந்து விளங்கும் குடும்பத் தொழிலைச் சேர்ந்த சகோதரிகள் இருவருக்கும் மலர் வளர்ப்பு ஆர்வமூட்டும் வெளிப்படையான தேர்வாக இருந்தது. ஆன்லைன் மூலம் பூஜை பூக்களை விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே யசோதா மற்றும் ரியா சகோதரிகளுக்கு 2019ம் ஆண்டில் ரோஸ் பஜாரைத் தொடங்க அகத்தூண்டுதலாக அமைய 2020ம் ஆண்டின் மத்தியில் இது 'ஹூவு ஃப்ரெஷ்' (
) என்று மறுபெயரிடப்பட்டது.“கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு நாங்கள் இருவரும் எங்கள் குடும்பத் தொழிலில் வேலை செய்தோம், இது மலர் வளர்ப்பு மற்றும் வர்த்தகம் எவ்வளவு பெரியது என்பதைப் பற்றிய நெருக்கமான கண்ணோட்டத்தை எங்களுக்குக் கொடுத்தது. ஆனாலும் எங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்னவெனில். இந்தியப் பண்பாட்டில் பூஜை புனஸ்காரங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தில் பூக்களின் பங்கு பற்றி தெரிந்திருந்தும் எங்கள் வர்த்தகத்தில் அதற்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. பூங்கொத்து விற்பனைத் தொழில் பிரமாதமாக வளர்ந்து கொண்டிருந்தாலும் பூஜை மலர்களுக்கான வர்த்தகத் தொழில் மாற்றமடையாமல் இருந்து வந்தது,” என்கின்றனர் ஹூவு ஃப்ரெஷ் சகோதரிகள்.
ரியா ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர், யசோதா அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலை மற்றும் வணிக நிர்வாகத்தில் பி.எஸ் பட்டம் பெற்றவர். பட்டப்படிப்பை முடித்தவுடனேயே குடும்பத் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கிழக்கு ஆப்பிரிக்காவில் அயல்நாட்டு வர்த்தகத்தை அவர் கவனித்துக் கொண்டார்.
ஹூவு பிரெஷ் தொடக்கம்:
கன்னட மொழியில் ’ஹூவு’ என்றால் ’பூ’ என்று பொருள். தங்களது வணிக முத்திரை தனிச்சிறப்பான இந்தியத் தன்மையுடன் விளங்க வேண்டும் என்று சகோதரிகள் விரும்பினர்.
“மக்கள் பூஜையைப் பற்றி நினைக்கும்போது, அதை தங்கள் தாய்மொழிகளிலேயே சிந்திக்கிறார்கள். மேலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் அதே வேளையில் இந்தியப் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்த ஹூவு ஒரு நல்ல வழியாகும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்,” என்கின்றனர் இந்த சகோதரிகள்.
இந்தியாவில் பூக்கள் வர்த்தகம் என்பது பூங்கொத்து தொழிலை விட நான்கு மடங்கு பெரியது என்று அவர்கள் தங்கள் தயாரிப்பை ஆராய்ச்சி செய்யத் தொடங்கியபோது நிச்சயம் இது ஒரு பெரிய வெற்றியைப் பெறும் என்பதை அவர்கள் உடனடியாக அறிந்து கொண்டனர்.
“மக்கள் பூக்களுக்காக செலவிடும் தொகை சிறியதாக இருந்தாலும் உணர்ச்சி பாவனையில் அது மிகப்பெரிய விஷயம், புனிதமானதும் ஆகும். ஒருமுறை எங்கள் பூக்களை வாங்கி விட்டால் அவர்கள் நிச்சயம் எங்களை விட்டுப் போகமாட்டார்கள் என்ற அளவில் நம்பிக்கையாக இருந்தோம்.
எங்கள் வாடிக்கையாளர்களின் அன்பு இதனை பெரிய வெற்றியடையச் செய்யும் என்பதை நாங்கள் நம்பிக்கையுடன் அறிந்திருந்தோம், என்ற ஒரு விஷயத்தையும் சகோதரிகள் பகிர்ந்து கொண்டனர்.
பூக்கள் விரைவில் வாடிவிடக்கூடிய ஒரு பொருள். எனவே, அவை பறிக்கப்பட்டதிலிருந்து டெலிவரி செய்யும் வரை ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். இந்நிலையில்தான் ஹூவு தனது பூக்களின் ஆயுளை, வாடாத்தன்மையை இரண்டு முதல் மூன்று நாட்களில் இருந்து 15 நாட்களாக நீட்டிக்க முடிந்தது.
ஹூவுவில் தளர்வான பூக்கள் முதல் சிக்கலான மாலைகள் வரை 50 மலர் எஸ்.கே.யுக்கள் உள்ளன, அவை பூஜையில் பயன்படுத்தப்படும் துர்வா புல் போன்ற பசுங்கீரைகள் வரை உள்ளன. இதன் விலை ரூ.25-ல் தொடங்கி ரூ.1000 வரை செல்கிறது.
தங்கள் குழுவில் 90 சதவீதம் பெண்களே இருப்பதாகப் பெருமையுடன் கூறும் ரியா-யசோதா சகோதரிகள்,
“முதல் நாளிலிருந்து, நாங்கள் ஒரு வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதிலும், மிக உயர்ந்த தரமான பூக்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றுவதிலும் கவனம் செலுத்தினோம்,” என்கின்றனர்.
மேலும், அவர்கள் கூறுகையில், “முழு உலகமும் இந்தியாவின் மளிகைக் கடைகளைக் குறிவைத்துப் பின்தொடரும்போது, நாங்கள் இந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட கடைநிலைச் சந்தையை எங்களால் பின்தொடர முடிகிறது - அதாவது, தெருவோர வியாபாரிகளாக வேலை செய்யும் பல லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் அவர்களின் கூடைகளை நிரப்புவதை நாங்கள் குறிக்கோளாகக் கொண்டோம். ஸ்டார்ட்அப்கள் மூலம் இன்னும் தொட வேண்டும்,” என்று தொழில் விரிவாக்கம் பற்றிக் குறிப்பிட்டனர்.
பூஜை மலர் ஏகபோக சந்தை ஆதிக்கம்!
பூஜை மலர்களை விற்பனை செய்வதில் இ-காமர்ஸ் சந்தையில் ’ஹூவு ஃப்ரெஷ்’ ஏகபோக உரிமையைப் பெற்றுள்ளது. மேலும் பிக் பாஸ்கெட், பிளிங்க் இட், ஃப்ரெஷ் டு ஹோம், ஜெப்டோ, டன்சோ, மில்க் பேஸ்கட், சுப்பர் டெய்லி, ஜியோ மார்ட், ஜொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் பல சந்தைகள் மூலம் தங்கள் வகை மலர்களை விற்பனை செய்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 2020ல் நாட்டில் முதல் ஊரடங்கு உத்தரவுக்குள் செல்வதற்கு சற்றுமுன்பு இந்த ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டதால், ஊரடங்கின்போது வர்த்தகம் மந்த நிலையை சந்தித்தது. ஆனால், அதுவே ஆன்லைன் வர்த்தகச் சந்தையை பெரிய அளவில் திறக்கும் என்பதால் வணிகம் மேம்படும் என்பதையும் இவர்கள் அறிந்திருந்தனர்.
கொரோனா காலம் என்பதால் பூக்களைச் சுத்திகரித்து பாதுகாப்பாக தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு நிறுவனத்தை மக்கள் நாடினர். ஹூவு நிறுவனம் தங்களின் பூக்கட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தி கைபடாத மலர்களாக விற்பனைக்கு அளித்தது.
இரண்டு ஆண்டுகள் பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், ரியா மற்றும் யசோதா கடந்த ஆண்டில் 10 மடங்கு வளர்ச்சியைக் கண்டதாகவும், தற்போது மாதத்திற்கு 1,50,000+ ஆர்டர்களை ஏற்று வழங்குவதாகவும் கூறுகின்றனர்.
தற்போது பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, மைசூர், புனே, மும்பை, குர்கவான் மற்றும் நொய்டாவில் சேவை செய்கிறார்கள். மேலும், அவர்களின் அகர்பத்திகள் இப்போது நாடு முழுவதும் கிடைக்கின்றன. பண்டிகைக் காலங்களின்போது நாடு முழுவதும் சேவை செய்கின்றனர்.
“எங்கள் கூட்டாளிகளின் தளங்கள் மற்றும் மளிகைக் கடைகள் மூலம் இந்தியா முழுவதும் எங்கள் தினசரி சந்தாக்களை திரட்டத் திட்டமிட்டுள்ளோம்,” என்று சகோதரிகள் கூறுகிறார்கள்.
யசோதாவும் ரியாவும் ரூ.10 லட்சம் ஏஞ்சல் முதலீட்டில் தங்கள் வணிகத்தைத் தொடங்கினர். இது அவர்களின் முதல் 1000 சந்தாக்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டது, டெக்ஸ்டார்ஸ் ஆக்ஸிலரேட்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் 120,000 டாலர் நிதியைத் திரட்டினர்.
கடினமானத் தொற்றுநோய்க் காலங்களில் வணிகத்தை நடத்தி இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கை கொண்ட சகோதரிகள் கடந்த ஆண்டில் பலவிதமான யூனிகார்ன் ஸ்டார்ட்அப்கள் தோன்றியதைக் கண்டு இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு குறித்து நம்பிக்கை கொண்டுள்ளனர்.
தற்போது நடைப்பெற்றுவரும் பிரபல ஸ்டார்ட்-அப் டிவி நிகழ்ச்சி ‘Shark Tanj India- Season2' வில் பங்குபெற்ற ஹூவு சகோதரிகளுக்கு 1 கோடி ரூபாய் நிதி முதலீட்டுடன், மக்கள் மத்தியில் பிரபலமும் கிடைத்துள்ளது.
Edited by Induja Raghunathan