2,000 ரூபாய் நோட்டுகளை எங்கே, எப்படி மாற்றுவது? வரம்பு என்ன? - முழு விவரம்!
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாகவும், அதனை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்து விவரிவாக பார்க்கலாம்...
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாகவும், அதனை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்து விவரிவாக பார்க்கலாம்...
ரூ.2000 நோட்டுகள் செல்லாது:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததோடு, அத்துடன் கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போதில் இருந்து இன்று வரை புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வரும் நிலையில், அதனை புழக்கத்தில் இருந்து நீக்க உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
2019ம் ஆண்டு முதலே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ள ரிசர்வ் பேங்க ஆஃப் இந்தியா, மே 23ம் தேதி முதல் எந்த வங்கியிலும் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை மற்ற வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் எனக்கூறியுள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வரை பொதுமக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக்கொள்ளவோ செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம், அதற்கான வழிமுறைகள் என்ன, ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை வரை மாற்றிக்கொள்ளலாம் போன்ற முக்கியமான தகவல்கள் குறித்து அறிந்துகொள்வோம்...

2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றுவதற்கான வழிமுறைகள்:
- பொதுமக்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம்.
- உங்களிடம் 2000 ரூபாய் நோட்டு இருந்தால், அதை மாற்றுவதற்கு அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுகலாம். அதற்கு முன்னதாக வங்கியின் வேலை நேரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாயை மாற்றும் வசதி வழங்கப்படுகிறதா? என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்.
- வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களுடன் ஆதார் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற சரியான அடையாளச் சான்றையும் எடுத்துச் செல்வது நல்லது.
- எக்ஸ்சேஞ்ச் கவுண்டரை அணுகவும் அல்லது ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதி குறித்து வங்கி ஊழியர்களிடம் 2 ஆயிரம் ரூபாய் மாற்றுவதற்கான காரணம் மற்றும் தொகை குறித்து விவரிக்க வேண்டும்.
- அதன் பின்னர், வங்கி ஊழியர்கள் உங்களுடைய வங்கிக் கணக்கு விவரம் மற்றும் அடையாள ஆவணங்களை கோரக்கூடும்.
- வங்கி பணியாளர்கள் நோட்டுகளை அங்கீகரித்ததும், நீங்கள் வழங்கிய தொகைக்கு ஈடாக ரூ.500, ரூ.200, ரூ.100 போன்ற குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வழங்குவார்கள்.
- மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய விரும்பும் சீனியர் சிட்டிசன்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வங்கிகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
- வங்கி இல்லாத அல்லது தொலைதூரமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பரிமாற்ற வசதிக்காக தேவைப்பட்டால் மொபைல் வேன்களைப் பயன்படுத்துவதை வங்கிகள் பரிசீலிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

2,000 ரூபாய் மாற்ற வரம்பு எவ்வளவு?
பொதுமக்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும், செயல்பாட்டு வசதியை உறுதி செய்வதற்கும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், ரிசர்வ் வங்கி ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்ற அனுமதித்துள்ளது.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் 4000 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம்.
ஜன்தன் யோஜ்னா போன்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பும் அதற்கு சமமான அளவிலேயே வரவு வைக்கப்படும் என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
வங்கிக் கணக்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய எவ்வித வரம்பும் கிடையாது. அதேபோல், தேவைக்கு ஏற்றார் போல் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டை விலக்கிக் கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு; செப்டம்பர் வரை நோட்டை மாற்ற அவகாசம்!