‘அதிகாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்கும், அதற்கேற்றபடி தயாராவேன்’ - உலக சாம்பியனை வென்ற பிரக்ஞானந்தா!
உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனையை நிகழ்த்திய ஆர்.பிரக்ஞானநந்தா போட்டிக்கு தயாரானது எப்படி என்பது பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.
உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனையை நிகழ்த்திய ஆர்.பிரக்ஞானநந்தா போட்டிக்கு தயாரானது எப்படி என்பது பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.
சென்னை பாடியில் வசித்து வரும் பிரக்ஞானந்தாவின் குடும்பம் மிகவும் சாதாரணமான நடுத்தர வர்க்கக் குடும்பம். அவருடைய தந்தை ரமேஷ் பாபு போலியோவால் பாதிக்கப்பட்டவர், இவரது மனைவி நாகலட்சுமி. கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் ரமேஷ்பாபுவின் ஒற்றை வருமானத்தை வைத்தே குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி செஸ் பயிற்சி பெற்று 14 வயதுக்குக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் பெற்றிருக்கிறார்.
அக்காவை பார்த்து 5 வயதில் இருந்தே செஸ் விளையாட கற்றுக்கொண்ட பிரக்ஞானந்தா 7 வயதில் உலக சாமியன்ஷிப் பட்டத்தை வென்றார். 10 வயதில் உலகிலேயே இளம் சர்வதேச செஸ் மாஸ்டர், 12 வயதில் இளைய கிராண்ட்மாஸ்டர், 14 வயதில் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் என பட்டங்களை குவித்து வருகிறார்.
சமீபத்தில் ஆன்லைனில் நடைபெற்ற ’ஏர்திங்ஸ் மாஸ்டர்’ போட்டியில் உலகின் நெம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதிய 16 வயதான பிரக்ஞானந்தா, வெறும் 39 நகர்வுகளில் வெற்றி பெற்றார். தொடக்கம் முதலே கருப்பு காய்களை திறம்பட கையாண்ட பிரக்ஞானந்தா உலக செஸ் சாம்பியனையே தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். செஸ் போட்டியில் உலக சாம்பியனை வெற்றி கண்ட பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அதிகாலை 3 மணிக்கு பயிற்சி:
உலகம் முழுவதும் 16 பேர் ஆன்லைன் மூலமாக பங்கேற்ற ’ஏர்திங்ஸ் மாஸ்டர்’ போட்டியில் உலக சாம்பியனை எதிர்கொண்டு, வெற்றி வாகை சூடியது குறித்து சிறுவன் பிரக்ஞானந்தா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கலந்துரையாடி உள்ளார். அதில் போட்டிக்குத் தயாரானது எப்படி என விரிவாகக் கூறியுள்ளார்.
"அதிகாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்குவதால் மிகவும் கடினமாக இருந்தது. போட்டியின் அட்டவணைக்கு எனது வழக்கத்தை மாற்றிக்கொண்டு ஒவ்வொரு நாளும் அதற்குத் தயாராகிவிட்டேன். அது உண்மையில் பலனளித்தது என்று நினைக்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியனை வெற்றி கொண்டதால் உச்சகட்ட மகிழ்ச்சியை உணர்ந்து வரும் பிரக்ஞானந்தா, செஸ் விளையாட்டிலும் தான் கடுமையாக பயிற்சி பெற வேண்டி இருந்ததாகவும், தற்போது அதற்குக் கிடைத்துள்ள வெற்றி தனக்கு மிகுந்த நம்பிக்கையை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்குக் கிடைத்து வரும் ஆதரவு, பாராட்டுக்கள் இன்னும் கடினமாக உழைக்கவும், விளையாடவும் தன்னை ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு கூறியதாவது:
“எனக்கு இந்த வெற்றி மிக்க மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அப்போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். பிரக்ஞானந்தா என்னிடம் வந்து கார்ல்சனை எதிர்த்து வெற்றி பெற்றுவிட்டேன் என்றார். உலகின் நெம்பர் சாம்பியனை வீழ்த்துவது எளிதானது அல்ல இது ஆரம்பம் மட்டுமே, அவர் இந்தத் துறையில் பல விஷயங்களைச் செய்ய வேண்டும்," எனக்கூறியுள்ளார்.
பிரக்ஞானந்தாவின் அக்கா வைஷாலி கூறியதாவது,
"நாங்கள் அனைவரும் இதனால் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பிரக்ஞானந்தாவிற்கு 16 வயது தான் ஆகிறது. அதற்குள் உலக சாம்பியனான கார்ல்சனை தோற்கடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். ஆன்லைனில் ஏற்கனவே பல கேம்களை விளையாடியுள்ளதால், இந்த வெற்றி எப்போதும் போல சாதாரணமானது அல்ல. இது ஒரு சவால்,” என தம்பியை வெற்றியை தனது வெற்றியாக நினைத்து கொண்டாடுகிறார்.
வயது, அனுபவம் முக்கியமானது என்றாலும், விடாமுயற்சியும், கூடவே தீவிர பயிற்சியும் இருந்தால் விஸ்வரூப வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்துள்ளார் 16 வயதான இளம் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.
தகவல் உதவி: எண்டிடிவி | தமிழில்: கனிமொழி