சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்கள் பிரிக்கப் படுவது எப்படி?
நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் மண்டலங்களின் அடிப்படையில் உள்ளது. இந்த 3 மண்டலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன?
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், பாதிப்பு, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிறம் என, நாடு முழுதும் உள்ள பகுதிகளை மூன்று மண்டலங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது.
பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலத்தில், 130 மாவட்டங்களும், பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலத்தில், 284 மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த, 21 நாட்களில், புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படாத பச்சை நிற மண்டலத்தில், 319 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், நேற்று அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு, மே 4ம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு அதாவது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு ஊரடங்கு காலத்தில் அமையவுள்ள கட்டுப்பாடுகள் மேலே குறிபிட்ட மூன்று மண்டலங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சரி இந்த 3 மண்டலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன?
மாநிலங்கள் கொடுக்கும் தரவுகளின் அடிப்படையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு மாவட்டங்களை ‘ஹாட் ஸ்பாட்’, ‘ஹாட் ஸ்பாட் இல்லாதவை’ எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
சிவப்பு மண்டலம் (ஹாட் ஸ்பாட்) : அதிக கவனம் தேவைப்படும் மாவட்டங்கள்/நகரங்கள். இங்கு அதிக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை/பரவல் விகிதம் உயர்வு என்று அர்த்தம்.
- இந்தியாவின் மொத்த எண்ணிக்கை சதவீதத்தில் 80% பங்கு வகிக்கும் மாவட்டம்
- மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை சதவீதத்தில் 80% பங்கு வகிக்கும் மாவட்டம்
- ஒவ்வொரு 4 நாட்களுக்குள் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை ரெட்டிப்பு ஆகும் மாவட்டம்
ஆரஞ்ச் மண்டலம் : கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து சற்று குறைந்து வரும் மாவட்டங்கள் சிவப்பில் இருந்து ஆரஞ்சுக்கு மாற்றப்படும். அதே போல் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு சதவீதம் 80% குறைவாக இருந்தால் அது ஆரஞ்ச் மண்டலமாகவே தொடரும்.
- கடந்த 14 நாட்களுக்குள் புதிய கொரோனா பாதிப்பு வராத மாவட்டங்கள்
பச்சை மண்டலம் : தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயராமல் புது தொற்று எண்ணிக்கை வராமல் இருந்தால் அது பச்சை மண்டலமாக கணக்கிடப்பட்டது.
- கடந்த 21 நாட்களில் புதிய கொரோனா பாதிப்பு வராத மாவட்டங்கள்
நேற்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் அதிக தளர்வுகளும், சிவப்பு மணடலத்தில் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது மத்திய அரசு.