10வது மட்டுமே படிப்பு; தொடர் தோல்வி; பின் 1,200 கோடி ஸ்டீல் வணிகம் நிறுவிய பிரம்மாண்ட கதை!
ராஜ்குமார் கோயல் மூன்று வணிக முயற்சிகளில் தோல்வியை சந்தித்த பிறகும் நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து செயல்பட்டு 1,214 கோடி ரூபாய் மதிப்புள்ள அலாய் ஸ்டீல் உற்பத்தி வணிகத்தை உருவாக்கியுள்ளார்.
2019-ம் ஆண்டு ஸ்டீல் உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாவது மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக ஆனது. இந்தியாவின் மிகப்பெரிய துறையாக விளங்கும் இந்தப் பிரிவில் 50 மிகப்பெரிய ஸ்டீல் தொழிற்சாலைகளும் 650-க்கும் அதிகமான எம்.எஸ்.எம்.ஈ-க்களும் செயல்படுகின்றனர். இவை நாட்டின் ஸ்டீல் உற்பத்தியில் பாதியளவிற்கு பங்களிக்கின்றன.
நாட்டில் அலாய் ஸ்டீல் சந்தை அளவு ஆண்டிற்கு 5.5 மில்லியன் மெட்ரிக் டன் உள்ளது. SLR Metaliks Pvt Ltd நிறுவப்பட்ட 15 ஆண்டுகளில் ஆண்டிற்கு 0.3 மில்லியன் மெட்ரிக் டன் என்கிற அளவில் பங்களித்துள்ளது. தற்போதைய கோவிட் பெருந்தொற்று சூழலில் ஆண்டு வளர்ச்சியாக 0.4 மில்லியன் மெட்ரிக் டன் என்கிற அளவில் பங்களிக்க திட்டமிட்டுள்ளது.
SLR Metaliks நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜ்குமார் கோயல் தனது தொழில்முனைவு பயணம் குறித்தும் இந்தியாவின் முன்னணி அலாய் ஸ்டீல் உற்பத்தியாளராக உருவெடுத்தது குறித்தும் எஸ்எம்பிஸ்டோரி உடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டார்.
“நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். 1980-களில் சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டு ஹரியானாவில் உள்ள ஜஜ்ஹார் என்கிற சொந்த ஊரில் பிளாஸ்டிக் ரீபிராசஸ் செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கினேன். என் குடும்பத்தினர் எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் தொழில் தொடங்க என் அப்பாவிடம் 4.5 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டேன். அதுவே முதலும் கடைசியுமாக அவரிடம் நான் வாங்கிய தொகை,” என்றார்.
பிளாஸ்டிக் ரீபிராசசிங் வணிகம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ராஜ்குமார் மற்ற வணிக முயற்சிகள் குறித்து ஆராய்ந்தார். பேக்கேஜிங் பிரிவில் செயல்படத் தீர்மானித்தார்.
டெல்லியில் உள்ள பால் பிராண்டுகளுக்கு பவுச் வழங்கத் தொடங்கினார். இந்நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் வீடுகளில் பால் பாக்கெட்டுகளை விநியோகிக்க உதவும் வகையில் பவுச் வழங்கினார். இந்த வணிகமும் அவரது தொழில்முனைவு ஆர்வத்திற்கு ஈடு கொடுப்பதாக அமையவில்லை. 1990-ம் ஆண்டு சிமெண்ட் பைகள் தயாரிப்பில் இறங்கினார்.
“வணிகம் வெற்றிப் பாதையில் பயணித்தது. அந்த காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பிர்லா சிமெண்ட் போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு சேவையளித்தோம். எனினும் எங்கள் வெற்றியை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தோம். அந்தத் துறையை கைவிடத் தீர்மானித்தேன். மற்ற துறைகளை ஆராய்ந்தேன்,” என்று தெரிவித்தார் ராஜ்குமார்.
ராஜ்குமார், அவரது சகோதரர் நரேஷ் கோயல் இருவரும் ஸ்டீல் துறையில் சிறந்த வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தனர். எனவே இருவரும் ஒன்றிணைந்து தங்களது சேமிப்பைக் கொண்டு 2005-ம் ஆண்டு SLR Metaliks Pvt Ltd தொடங்கினார்கள். அப்போதிருந்து சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகின்றனர்.
தோல்வியில் இருந்து வெற்றியை நோக்கி…
ராஜ்குமார், நரேஷ் இருவரும் கர்நாடகாவின் பல்லாரி பகுதியில் ஸ்டீல் தொழிற்சாலை அமைத்தனர். இங்கு அலாய் ஸ்டீல் உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ஆட்டோமோடிவ் துறைக் சார்ந்த பிரிசிஷன் தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் தலைமையகம் குருகிராமில் உள்ளது. சிறப்பு ரக ஸ்டீல் இறக்குமதிக்கான சரியான மாற்று உருவாக்கவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம். இதைக் குறைந்த விலையுடனும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகளுடனும் நிறுவனத்திற்குள் தயாரிக்க விரும்புகிறது.
SLR Metaliks நிறுவனத்தின் ஸ்டீல் தொழிற்சாலை 300 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டிவ் பவர் ஸ்டேஷன் (6MW) (Blast furnace waste gas-based), விருந்தினர் மாளிகை, நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கான தங்கும் இல்லம் ஆகியவை உள்ளன.
இந்த தொழிற்சாலை பல்வேறு ஸ்டீல் கிரேடுகள் கொண்ட 16-க்கும் மேற்பட்ட அலாய் தொகுப்புகளைக் கலக்க, பிரேசிலில் உள்ள Minitech, இத்தாலியில் உள்ள Siemens, ஸ்விட்சர்லாந்தில் உள்ள SMS Concast, இந்தியாவில் உள்ள Mecon, யூகே-வில் உள்ள Edward, அமெரிக்காவில் உள்ள Spectometers போன்ற நிறுவனங்களிடமிருந்து நவீன வசதிகளும் தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளில் SLR Metaliks வருடாந்திர டர்ன்ஓவர் 1,216 கோடி ரூபாயுடன் சந்தையின் முன்னணி ஸ்டீல் உற்பத்தியாளர்களில் ஒன்றாக உருவாகியுள்ளது.
“SLR Metaliks சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகளவில் பயன்படுத்தி கார்பன் சுமையைக் குறைக்கிறது,” என்றார்.
2012-ம் ஆண்டு காற்று சக்தி மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்து பயன்படுத்தி வரும் துறைசார் நிபுணர்களுடன் கூட்டு முயற்சியில் இந்நிறுவனம் இணைந்தது. ஜீரோ லெவல் திரவ வெளியேற்ற (ZLD) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. இதற்காக ஈர ஸ்கிரப்பருக்கு பதிலாக உலர்ந்த முறையில் வாயு சுத்திகரிக்கும் ஆலை பயன்பாடு, தண்ணீர் கொண்டு குளிர்விப்பதற்கு பதிலாக காற்று மூலம் குளிர்விக்கும் வசதி, பாரம்பரியமான எஜெக்டர் அமைப்பிற்கு பதிலாக மெக்கானிக்கல் வாக்யூம் பம்புகள் பயன்பாடு போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
இதுபோன்ற நடவடிக்கைகள் SLR Metaliks நிறுவனம் அதன் தண்ணீர் தேவைகளைக் குறைக்கவும் நீர் மாசுபடுவதைக் குறைக்கவும் உதவியது.
விநியோகச் சங்கிலி மற்றும் போட்டி
இந்நிறுவனம் ஆட்டோமொபைல் பிரிவிற்குத் தேவையான மூலப்பொருட்களை அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியது. இதனால் குறைவான காலகட்டத்திலேயே ஸ்டீல் துறையில் பிரபலமானது. மிகச்சிறந்த, தரமான தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு கடந்த இருபதாண்டுகளாக ஸ்டீல் துறையில் செயல்படும் SLR Metaliks, நாட்டின் மற்ற நிறுவனங்கள் கடும் போட்டியாளராகக் கருதும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் 86-க்கும் மேற்பட்ட கிரேடுகள் மற்றும் அளவுகளில் ஸ்பெஷல் அலாய் ஸ்டீல் தயாரிக்கிறது. டாடா மோட்டர்ஸ், ஹுண்டாய் மோட்டர்ஸ், ஹோண்டா, மஹிந்திரா போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சேவையளித்து வருகிறது. 40 அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கும் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும் இந்திய ரயில்வே, பாதுகாப்புத் துறை போன்றவற்றிற்கும் இந்நிறுவனம் சேவையத்து வருகிறது.
இந்திய ஸ்டீல் துறையின் வளர்ச்சி
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் இந்திய ஸ்டீல் துறை சற்று மந்தமாகவே இருப்பதாக ராஜ்குமார் தெரிவிக்கிறார். எனினும் இந்தத் துறை விரைவில் மீண்டெழுந்தது. ஜூலை மாதத்தில் நாட்டின் ஸ்டீல் உற்பத்தி கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
2015-ம் ஆண்டு பொருள் குவிப்புக்கு எதிரான வரி விதிப்பு அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் இறக்குமதி அளவும் அதிகரித்தது. கடந்த ஆண்டு உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டு சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஒட்டுமொத்தமாக இந்தத் துறை 2021-22 ஆண்டுகளில் ஒன்பது முதல் 10 சதவீதம் வளர்ச்சியடையலாம்.
“ஸ்டீல் துறை வளர்ச்சியடைந்து இந்திய பொருளாதாரத்தில் பங்களிக்க சிமெண்ட், ஆட்டோமொபைல் போன்ற இதர துறைகளும் வளர்ச்சியடையவேண்டும்,” என்று விவரித்தார் ராஜ்குமார்.
சவால்கள் மற்றும் வருங்காலத் திட்டம்
தரம், விலை, செயல்பாட்டுத் திறன் போன்றவற்றில் சமரசம் செய்துகொள்ளாமல் செயல்படும் விதம் மட்டுமே SLR Metaliks நிலையான வளர்ச்சியை எட்டக் காரணமாக அமைந்தது என்கிறார் இதன் நிர்வாக இயக்குநர்.
இந்த வணிகத்தில் விலை நிர்ணயம் மிகப்பெரிய சவால் என்கிறார் ராஜ்குமார். உள்ளூர் நிறுவனங்கள் சூழலை உணரவேண்டும். அப்போதுதான் விலை மென்மேலும் அதிகரிக்காமல் விநியோக சங்கிலியை உள்நாட்டிலேயே ஊக்குவிக்கமுடியும் என்கிறார்.
“மின்சார செலவுகளைக் குறைக்க நாங்கள் சோலார் மேற்கூரை அமைத்துள்ளோம். குறைந்த முதலீட்டில் திறனை மேம்படுத்தி வருகிறோம்,” என்றார்.
உற்பத்தித் திறனை விரிவுப்படுத்துவதற்கு இந்நிறுவனம் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2025-ம் ஆண்டில் ஆசிய பசபிக் பகுதியில் முன்னணி அலாய் ஸ்டீல் உற்பத்தியாளராக உருவாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
SLR Metaliks அதன் பயன்பாட்டிற்காக சோலார் மின்சக்தி உருவாக்க கூட்டு முயற்சி ஒன்றில் இணைய இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாது.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா