‘இடுப்பில் எட்டி உதைத்தனர்; இறுதி சடங்குக்கு கூட அனுமதிக்கவில்லை’ – மீண்டெழுந்த குடும்பத்தின் கதை!
செங்கல் சூளையில் பாதிக்கப்பட்ட ஷிவம்மா கதை!
தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பகிர்ந்துகொள்கிறார் செங்கல் சூளையில் இருந்து பாதிக்கப்பட்ட ஷிவம்மா.
”நான் கர்நாடக மாநிலம் ராமநகர மாவட்டத்தின் கனகபுரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தேன். நாங்கள் மூன்று மாடுகளை வைத்திருந்தோம். அதைக்கொண்டு பால் விற்று அதன்மூலம் வரும் வருவாயைக்கொண்டு என் பெற்றோர் குடும்பம் நடத்தினர். என் இரண்டு சகோதரிகளும் நானும் என் பெற்றோருக்கு பால் விற்க உதவி செய்தோம். எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள கோதுமை வயல்களில் தினசரி கூலிக்காக என் பெற்றோர் வேலை செய்யும் போது, நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். என் பெற்றோருக்கு உதவும் விதமாக நான் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன்.
என் தந்தை கூடுதல் வருமானத்திற்காக எங்கள் வீட்டில் செங்கற்களை தயாரிக்கும் வேலையை செய்தார். எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான பணம் எங்களிடம் இருந்ததில்லை. இருந்தாலும், என் தந்தை எப்போதும் எங்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தார். பெரும்பாலும் திரைப்படங்கள் அல்லது பாரம்பரிய நாடகங்களைப் பார்க்க அழைத்துச் செல்வார். நகர கண்காட்சிகள் மற்றும் சந்தை விழாக்களையும் பார்வையிட நாங்கள் விரும்புவோம்.
காலமும் கடந்தது. எனக்கு திருமணம் முடிவானது. உறவினர் வெங்கடேஷூடன் எனது திருமணத்தை எனது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். எனது திருமணத்திற்கு நடந்து சில வருடங்களுக்குப் பிறகு, எனது தந்தை உள்ளூர் செங்கல் சூளை உரிமையாளரிடமிருந்து ரூ.15,000 கடன் வாங்க வேண்டியிருந்தது. உரிமையாளர் என் சொந்த கிராமத்தில் வளர்ந்திருந்தார், நாங்கள் அவரை நன்கு அறிவோம். கனகபுராவில் செங்கல் சூளை தொடங்குவதற்கு முன்பு அவரது பல தொழில்கள் தோல்வியடைந்தன.
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு என் தந்தை சிரமப்படுவதை அறிந்த அவர், தனது செங்கள் சூளையில் வேலைக்கு வருமாறு கூறினார். மேலும் எனது தாயையும் பணியில் சேர்ந்தால் விரைவாக கடனை அடைக்க முடியும் என்றும் ஆலோசனை சொன்னார். அவரது பேச்சைக்கேட்டு என் தந்தையும் தாயும் உடனடியாக ஒப்புக் கொண்டனர், நானும் எனது கணவரும் எங்கள் சிறிய மகனுடன் சேர முடிவு செய்தோம். காரணம் எங்களுக்கு போதிய வருமானம் எதுவும் இல்லை.
அந்த ஒரு முடிவு எங்கள் வாழ்வை தலைகீழாக புரட்டிப்போட்டது. நாங்கள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டோம். என் பெற்றோருக்கு கொடுப்பட்டதைபோலவே நானும் என் கணவரும் ஒரு நாளைக்கு 1,000 செங்கற்கள் தயாரிக்க வேண்டியிருந்தது. மிகவும் கடின உழைப்பை செலுத்தினோம்.
வாரத்தின் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றாலும், கடுமையான வெப்பம் என்றாலும் வேலை செய்தே ஆக வேண்டும். இவ்வளவு வேலை செய்தும் வாரத்திற்கு 500ரூபாய் மட்டுமே கொடுத்தனர். எனக்கும் என் கணவருக்கும் 500ரூபாய், என் தாய் தந்தைக்கு 500ரூபாய். இது எங்களுக்கு போதுமானதாக இல்லை.
இந்த குறைவான ஊதியத்தை எதிர்த்து ஒருநாள் போராட்டம் நடத்தினேன். அப்போது அந்த உரிமையாளர் என் இடுப்பிலேயே எட்டி உதைத்து கையை முறுக்கினார். அவர் தனது மோட்டார் சைக்களில் செல்லும்போது வேண்டுமென்றே என்னைத் தாக்கினார். அப்போது தான் நாங்கள் ஒன்றை புரிந்துகொண்டோம். நாங்கள் எங்கள் கிராமத்தில் பார்த்த வளர்ந்த நபர் அவர் இல்லை என்பதை தெரிந்துகொண்டோம்.
குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அதுவும் ஒருநபர் மட்டுமே வெளியே செல்ல அனுமதி. தவிர, செங்கல் சூளையை விட்டு வெளியேற எங்களுக்கு அனுமதி இல்லை.
நாங்கள் அச்சுறுத்தப்பட்டோம், துஷ்பிரயோகம் செய்யப்பட்டோம், நாங்கள் வீடு திரும்ப விரும்பினால், ஆரம்பக் கடனுடன் சேர்க்கப்பட்ட வட்டியுடன் ரூ.1,00,000 க்கும் அதிகமான தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டோம். எனது தாத்தா காலமானபோது, உரிமையாளர் எனது தந்தையை கிராமத்திற்குச் சென்று இறுதி சடங்குகளைச் செய்யக்கூட அனுமதிக்கவில்லை.
நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இதே முறையில் செங்கல் சூளையில் வாழ்ந்து வேலை செய்தோம். இறுதியாக, ஆகஸ்ட் 2014ல், செங்கல் சூளையில் இருந்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் எங்களை மீட்டனர்.
2017 ம் ஆண்டு மார்ச் மாதம் செங்கல் சூளை உரிமையாளருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக எங்களை அடிமைத்தனத்தில் ஆழ்த்தியதற்காக, அவர் செய்த தவறுகளுக்கு இப்போது 10 ஆண்டுகள் இரட்டை தண்டனையை எதிர்கொள்கிறார்.
எங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட எவருக்கும், நான் தைரியமாக இருக்கவும் அவர்களின் உரிமைகளுக்காக நிற்கவும் சொல்ல விரும்புகிறேன், என்கிறார் ஷிவாம்மா.
தமிழில்: மலையரசு