Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கொரோனா தொற்றுக் காலத்திலும் குறையாத மனித நேயம்...

சாலையோரங்களில் வசிப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சை எடுப்பவர்கள் என நகரங்களின் தெருக்களில் இரவும் பகலும் சுற்றித்திரிபவர்களை காப்பாற்றும் புதுவை மாவட்ட நிர்வாகம்.

கொரோனா தொற்றுக் காலத்திலும் குறையாத மனித நேயம்...

Thursday April 16, 2020 , 2 min Read

நகரங்களின் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக தெருக்களில் சுற்றித் திரிவோர் இருக்கின்றனர். சாலையோரங்களில் வசிப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,  பிச்சை எடுப்பவர்கள் எனப் பலர் நகரங்களின் தெருக்களில் இரவும் பகலும் சுற்றித் திரிவதை நாம் பார்க்க முடியும்.


இவர்களை நாம் பெரும்பாலும் கவனத்தில் கொள்வதில்லை. இவர்கள் ஒவ்வொருவரின் பின்னணியிலும் சோகமும் வரலாறும் கட்டாயம் இருக்கும். புறக்கணிக்கப்பட்ட இவர்கள் தங்களது அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே தற்போது அல்லாடுகின்றனர்.  

பாண்டி

முடி திருத்தம் மற்றும் மருத்துவ செக் அப் செய்யப்படுகிறது

புதுச்சேரி நகரத் தெருக்களிலும் இவ்வாறான நபர்களைக் காணலாம். அதிகபட்ச மனிதநேயச் செயல் என்பது நம்மிடம் இருக்கின்ற சில்லறைகளைக் கொடுப்பதோடு நின்றுவிடுகிறது. இவர்களின் அழுக்கடைந்த தோற்றம், தூய்மைக் குறைவு ஆகியன நம்மை இவர்களிடம் இருந்து விலகி நிற்கவே செய்கிறது.


கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் முயற்சியாக நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 


பொதுமக்களின் நடமாட்டத்தைப் பெருமளவில் குறைப்பதுவே ஊரடங்கின் நோக்கமாகும். வீட்டிலேயே இருப்போம், பாதுகாப்பாக இருப்போம் என்ற முழக்கத்துடன் அனைவரும் வீட்டில் அடங்கினர். ஆனால் ஒதுங்குவதற்குக் கூரைகூட இல்லாத இந்த சாலையோரவாசிகள் கொரோனாவின் கோரம் தெரியாமல் அப்பாவியாக இருந்தனர்.  


புதுவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தி.அருண் அறிவுறுத்தலின் பேரில் வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா புதுச்சேரி நகரில் இவ்வாறு திரிந்து கொண்டிருந்த 75 நபர்களைக் கண்டறிந்தார். 

இவர்களில் 55 பேர் அரசு வ.உ.சி மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.  20 பேர் அரசு பிரெஞ்ச் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு மூன்று வேளை உணவும், காலையில் தேநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயல்பாடுகள் வழக்கமான மாவட்ட நிர்வாகத்தின் பணிகளாக இருக்கும். ஆனால் ஆட்சியரும் வட்டாட்சியரும் இதனையும் தாண்டி மனிதநேயத்தோடு இவர்களைப் பார்த்தனர். 

உறுத்தலாக இருந்த முதல் விஷயம் இவர்கள் முடி சீவாமல் தாடியுடன் இருந்தது ஆகும். இரண்டாவது விஷயம் அவர்களின் அழுக்கடைந்த ஆடைகள். இதனால் இவர்களை யாரும் நெருங்கி அன்போடு உரையாட முடியாத சூழல் இருந்தது. 


இதனை உணர்ந்த ஆட்சியரும் வட்டாட்சியரும் இவர்களைப் புது மனிதர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக வ.உ.சி பள்ளியில் இருந்த 55 பேருக்கும் முடிவெட்டி, முகச்சவரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. முடிதிருத்தம் செய்யும் கலைஞர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து கொண்டு முடிதிருத்தும் கருவிகளை கிருமிநாசினியால் சுத்தப்படுத்திய பிறகு அவர்களுக்கு முடிவெட்டினர்.

பிறகு அவர்களுக்கு குளியல் சோப் வழங்கப்பட்டு குளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.  எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுக்கு புத்தாடைகள் கொடுக்கப்பட்டன. புதிய மனிதர்களான இவர்கள் முகத்தில் புன்னகை அரும்பியது.  
2

பிறகு அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் உடல்நலப் பரிசோதனை செய்து அவர்களின் அப்போதைய உடல்நிலைப் பிரச்சனைகளுக்குச் சிகிச்சை தரப்பட்டு மருந்துகளும் தரப்பட்டன. மருத்துவர்கள் இவர்களுக்கு கொரோனா தொற்று குறித்தும் கூறினர். 

அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பராமரித்தல் குறித்து அவர்களுக்கு எடுத்துச்சொல்லப்பட்டு அவர்கள் அதனை கடைபிடிக்கவும் தொடங்கி உள்ளனர்.

உணவு வழங்கும் போது ஊழியர்கள் / தன்னார்வலர்கள் இவர்களுடன் இப்போது கலந்துரையாடுகின்றனர். வ.உ.சி பள்ளி தலைமையாசிரியர் சாய் வர்கீஸ் அடிக்கடி இவர்களை சந்தித்து பேசுகிறார். மருத்துவர்கள் தினசரி வந்து பரிசோதிக்கின்றனர். அரசுப் பணி என்ற நிலையைத் தாண்டி பலரும் கனிவுடன் இவர்களைப் பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

 

ஊரடங்கு முடிந்த பிறகு தெருவில் இறங்கப் போகும் இவர்கள் மீண்டும் தெரு நாடோடிகளாக இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.