கொரோனாவை எதிர்த்துப் போராடும் ‘பாண்டவர் அணி’
யாரோடு பேசினாலும் கொரோனா கொடூரனைப் பற்றியே பேச்சு. எங்கும் நகர முடியாதபடி வீட்டில் அடைந்து கிடைக்கும் இந்த நேரத்தில், “தங்கள் உயிரை பணையம் வைத்து,” மற்றவர்களுக்கு உதவி வரும் ஐவர் பற்றிய கதை இது !
எந்த சேனலை பார்த்தாலும் கொரோனா அச்சுறுத்தல், யாரோடு பேசினாலும் கொரோனா கருணை இல்லா கொள்ளை நோயாக மாறி இருப்பதை பற்றியே பேச்சு. எங்கும் நகர முடியாதபடி வீட்டில் அடைந்து கிடைக்கும் இந்த நேரத்தில், “தங்கள் உயிரை பணையம் வைத்து,” மற்றவர்களுக்கு உதவி வரும் ஐவர் பற்றிய கதை இது !
கழிவுகள் மேலாண்மையில் தொழில்முனைந்துள்ள பால் பிரதீப், அவரது பகுதியில் உள்ள சந்தோஷ், போரூர் பாபு, ஆலப்பாக்கம் லக்ஷ்மணன், மதி இவர்கள் ஐவரும் வளசரவாக்கம் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அந்த நட்பு இன்று இவர்களை அணிசேர்த்துள்ளது.
சென்னை வெள்ளத்தில் மிதந்த சமயம் ஐவரும் தனித்தனியாக பல உதவிகள் செய்யத் துவங்க, பின்னர் கஜா புயல் இவர்களை அணியாக மாற்றியுள்ளது. நடுத்தரக் குடும்பங்களில் இருந்து வரும் இவர்கள் ஐவரும், தங்கள் வாழ்க்கையைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் மற்றவர்கள் வாழ்வு மேம்படவும் உழைப்பது நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
சில கேள்விகள் உள்ளது, பேசலாமா என்ற பொழுது கொஞ்சம் தயங்கிய பிரதீப், அட ஜாலிய அரட்டை தான் தலைவா, வாங்க பேசலாம் என்றவுடன் பதில்கள் சொல்லத் தயாரானார்.
கொள்ளை நோய் இருக்கற நேரத்துல ஊர் சுத்தறீங்களே, வீட்டுல திட்டு விழுந்துச்சா?
திட்டா? அடி விழாம தப்பிச்சோம் நாங்க அஞ்சு பேரும். என்று தொடங்கினார் பிரதீப் .
"சமீபத்துல ஒரு செங்கல் சூலைக்கு போயிருந்தோம். அங்க இருக்கற குடும்பங்களுக்கு உணவு வேணும்னு கேட்டுருந்தாங்க. இதுவரைக்கும் செங்கல் சூலைய தூரத்தில் இருந்தே தான் பார்த்திருக்கிறேன். பெரிய சிம்னி இருக்கும், செங்கல் அங்கு அடுக்கபட்டிருக்கும். அவளோதான் தெரியும்.
ஆனால் நாங்க அங்க புதுசா தெரிஞ்சுகிட்டது, அங்கயும் ஒரு கார்ப்பரேட் கட்டமைப்பு இருக்குங்கறது தான். கிட்டத்தட்ட 45 குடும்பங்கள் அந்த செங்கல் சூளைல இருக்காங்க. பல குழுவா பிரிஞ்சு வேலை செய்யறாங்க. நெருங்கி அவுங்களுக்கு உதவப் போனப்போ ரொம்பவும் பிரம்மிப்பாக இருந்துச்சு.
காலைல கெளம்பிப் போனவங்க வீடு திரும்ப சாயிங்காலம் ஆயிருச்சு. போலீஸ் கெடுபிடி வேற அப்போ ஜாஸ்தி. அதனால வீட்டில கொஞ்சம் பயந்துட்டாங்க. அங்கு போயிட்டு வந்த போட்டோவ ஃபேஸ்புக்குல போட்டதுக்கு அப்பறம், எங்கள் 5 குடும்பத்தில இருந்தும் ஏகத்திற்கு வசவு கெடச்சுது. "கொரானா கொல்ற நேரத்துல இதுலாம் தேவையா?" ங்கர பயம் தான் அதற்குக் காரணம்.
வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியக்கூடாது என்பது நாம் பலகாலமாக பின்பற்றிவரும் விஷயம். ஆனால் சமூக வலைத்தளங்கள் அதனை மாற்றியுள்ளதா?
வலது கை கொடுப்பது இடது கைக்கு மட்டுமல்ல உலகிற்கே தெரியவேண்டும், என்பது அவரது கருத்தாக இருந்தது.
"நம்ம அம்மா அப்பா நெறையா உதவிகள் செஞ்சுருப்பாங்க. ஆனா அத பத்தி நமக்கு அவுங்க சொல்லி இருக்க மாட்டாங்க. இப்போ உலகமே பொருள் தேடும் நோக்கத்துல மட்டுமே இயங்கிட்டு இருக்கு. வளரும் குழந்தைகளுக்கு மில்லியனர், பில்லியனர் கனவுகள் இருக்கு ஆனால் பக்கத்தில் இருக்கற மனுஷன நின்னு கவனிக்கற பழக்கம் இல்லை.
நாங்க செய்யற உதவிகள ஃபேஸ்புக்குல ஷேர் பண்ணும் போது பல பேர அது போய் சேருது. அதனால பலர் மனசு மாறவும் செய்யுது. சமீபத்துல நாங்க போய்ட்டு வந்த செங்கல் சூளை சென்னைல இருந்து வெறும் 16 கிலோமீட்டர் தான். ஆனா எந்த ஊர் இதுன்னு பல பேர் கேட்டாங்க.
அதே மாதிரி உங்கப் பகுதி வசதியான பகுதியா இருக்கலாம், ஆனா தெருல இறங்கிப் பாத்தா அங்க கஷ்டப் படும் ஒரு காவலாளி குடும்பமோ இல்ல இஸ்திரி தொழிலாளிக் குடும்பமோ பாக்கலாம். அவுங்களுக்கு நீங்க உதவ ஆரம்பிச்சாலே போதும். இந்த கொள்ளை நோய விட நம்ம உதவற மனசுக்கு சக்தி ஜாஸ்தி," என்கிறார் பிரதீப்.
இந்த சமயத்துலையும் உதவிகள் செய்யறது எப்பிடி?
2015ல் வெள்ளம் வந்தபோது முன்னேற்பாடாக TT ஊசிகள் போட்ட பின்னரே அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர். ஆனால் அதைவிடவும் சிக்கலான தருணம் இது என்பதால் உடலை முழுதாக மறைக்கும் ஆடைகள், கையுறை, எந்த இடத்திற்குச் சென்றாலும் எதையும் தொடாது பொருட்களை மட்டும் கொடுத்துவிட்டு திரும்புதல், சானிடைசர் பயன்படுத்துவது, வீடு திரும்பும் பொழுது வீட்டிற்கு வெளியே இருக்கும் தெருக் குழாயில் கிட்ட தட்ட குளித்து முடித்துவிட்டு பின் தான் வீட்டிற்குள் செல்வது, அனைத்திற்கும் மேலாக இவர்கள் முகமூடி அணிவது மட்டுமன்றி எப்போதும் கூடுதலாக ஒரு செட் முகக்ககவசத்தை, கைவசம் வைத்துள்ளனர் இந்த ஐவர் குழு.
"எப்போமே நாம பயன்படுத்தற வலது கைய நாங்க இப்போ கொஞ்சம் குறைவா பயன்படுத்தறோம். கண்ணு, மூக்கு, முகம் இத நம்ம வலது கையால தான் அதிகமா தொடுவோம். அதனால செய்யற வேலைகள முடிஞ்ச அளவுக்கு இடது கையால செய்யறோம். எல்லாப் பாதுகாப்பையும் மீறி கிருமி வந்தாலும், கை கழுவீட்டா சிக்கல் இருக்காது. இது ரொம்ப சின்ன விஷயம் தான், ஆனாலும் இத ஃபாலோ பண்றோம்."
தற்பொழுது செய்து வரும் உதவிகள் :
கொரோனா ஒரு கொள்ளை நோய், அதனை எதிர்கொள்ள மக்களுக்கு உதவி கண்டிப்பாக தேவை என்ற நிலை வந்த பொழுது இவர்கள் முதலில் அணுகியது, இந்த நோயினை முன்வரிசையில் இருந்து எதிர்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களைத்தான். காரணம் நம் நாட்டில் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் இருந்தது (இப்பொழுது மாறியுள்ளது) என்பது நீங்கள் அறிந்ததே.
எனவே ஐவரும் சேர்ந்து 25000 ரூபாய் செலவில் அவர்களுக்குத் தேவையானவற்றை (கையுறை, முகக்கவசம், சானிடைசர், சோப்பு, ஆயில்) வாங்கி வளசரவாக்கத்தில் உள்ள சென்னை கார்பரேஷேன் அலுவலகத்தில் கொடுத்துள்ளனர்.
பின்னர் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தனியாக ஒரு சமுதாய சமையற்கூடம் அமைக்கவுள்ளதாக கூறியிருந்தார்கள். எனவே அதற்கும் இவர்களால் முடிந்த உதவியினை பணமாகவும் பொருளாகவும் செய்துள்ளனர். இந்த விஷயங்களை முகநூலில் பதிவிட மற்றவர்களும் உதவ முன்வந்துள்ளனர். இப்போது வரையிலும் இவர்களுக்கு பணமாக, உணவுப் பொருட்களாக 2 லட்ச ரூபாய் மதிப்பில் உதவிக்கரங்கள் நீண்டுள்ளன. இந்தக் கதையை நீங்கள் படிக்கும் நேரத்திலும் யாரோ ஒருவருக்கு இவர்கள் ஐவரும் உதவிக்கொண்டு இருப்பார்கள்.
இது மட்டுமின்றி ஊரடங்கு உத்தரவுக் காரணமாக எங்கும் செல்ல முடியாமல், வியாபாரத்தைக் கவனிக்க முடியாமல் தவித்து வரும் பலரைப் பற்றிய செய்திகள் எப்பொழுது கிடைத்தாலும், தங்களால் இயன்றதை இவர்கள் செய்து வருகின்றனர்.
வெளி மாநில திறன்சாரா தொழிலாளிகள் ஊர் திரும்ப முடியாது சிக்கி இருக்க, அவர்களுக்கும் இவர்களின் உதவிக்கரம் தற்பொழுது நீண்டுள்ளது.
அம்மானா சும்மா இல்லடா :
எதனால் இந்த உதவும் எண்ணம் அவருக்குள்ளே விதையாக விழுந்தது என்பதை விவரித்த பிரதீப், "சின்ன வயசுல ஸ்கூலுக்கு பஸ்ல போகும் போது, என் கூட ரெகுலரா 10 ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் வருவாங்க. பாக்க வேற வேற மாதிரி இருந்தாலும், அண்ணன் தம்பி அக்கா தங்கச்சின்னு தா பேசிக்குவாங்க. ஒரு குடும்பத்துல இருந்து வந்தா கொஞ்சம் உருவ ஒற்றுமை இருக்கும். ஆனா இங்க எல்லாரும் வேற வேற மாதிரி இருக்காங்களேன்னு எனக்குக் கொஞ்சம் குழப்பம் இருக்கும்.
ஒரு நாள் அந்த பத்து பேரும் எங்களுக்கு பிறந்தநாள்ன்னு மிட்டாய் குடுத்தாங்க. எப்படி எல்லாருக்கும் ஒரே நாள்ல பிறந்தநாள்ன்னு எங்க அம்மா கிட்ட கேட்டேன்.
“அவுங்க, 10 பென்சில் வாங்கித் தந்து அவுங்களுக்கு குடுக்கச் சொன்னாங்க. அடுத்த நாள் அந்த 10 பேரும் எங்க அம்மா உன்ன வீட்டுக்கு வரச் சொன்னாங்கன்னு சொல்ல, நான் எங்க அம்மாவோட போனேன். அப்போதான் குழந்தைகள் காப்பகம்ன்னு ஒண்ணு இருக்குன்னு எனக்கு தெரிஞ்சுது," என்கிறார் பிரதீப்.
அன்று அவரது அன்னை விதைத்த அந்த உதவும் எண்ணம், இன்று மரமாக வளர்ந்து நிற்கிறது. அவரது அம்மா தைரியமாகக் கூறலாம் "வெத நா போட்டது..." என்று.
இவர்கள் மட்டுமல்ல இவர்கள் போல மற்றவர்கள் நலனில் அக்கறைக் கொண்டு தங்களால் இயன்ற உதவியை, மருந்தாக, பொருளாக பணமாக, உழைப்பாக, வழங்கும், தங்கள் "உயிரை பணையம் வைக்கும்" அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்தக் கதை மூலம் நன்றிகளை யுவர்ஸ்டோரி தெரிவித்துக்கொள்கிறது.
ஃபேஸ்புக் தொடர்பு: https://www.facebook.com/cnpaulpradeep