‘ரூ.10 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் 44 தமிழக நிறுவனங்கள் ஹுருன் இந்தியா 500 பட்டியலில் இடம்!
சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளதாகவும், டிசிஎஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் சந்தை மதிப்புமிக்க தனியார் நிறுவனமாக 'ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்' திகழ்வதாகவும், அதிக ஊழியர்கள் எண்ணிக்கைக் கொண்ட நிறுவனமாக ’டி.சி.எஸ்’ திகழ்வதாகவும், வேகமாக வளரும் நிறுவனமாக ’பைஜூஸ்’ திகழ்வதாகவும், இந்திய தனியார் நிறுவனங்கள் தொடர்பான ஹுருன் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தப் பட்டியலில்,
அதிக நிறுவனங்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்திலும், நகரங்களில் சென்னை மூன்றாவது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் 44 நிறுவனங்கள் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்டதாக உள்ளன.

ஹுருன் 500
வர்த்தக ஆய்வு நிறுவனமான ஹுருன் இந்தியா (Hurun India), பர்கண்டி பிரைவெட், ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவின் முன்னணி 500 வர்த்தக நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பர்கண்டி பிரைவெட் ஹுருன் இந்தியா 500 எனும் (Burgundy Private Hurun India 500) இந்தப் பட்டியல், இந்தியாவில் உள்ள பொதுத்துறை அல்லாத நிறுவனங்களை அவற்றின் சந்தை மதிப்பு அடிப்படையில் தொகுத்தளித்துள்ளது.
இந்தியாவில் தலைமையகம் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பட்டியலிடப்படவில்லை. இந்தப் பட்டியல் இந்திய பொருளாதாரம் தொடர்பாக நம்பிக்கை தரும் தகவல்களை கொண்டுள்ளதோடு, வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாக சுவாரஸ்யமான தகவல்களையும் அளிக்கிறது.
ரிலையன்ஸ் முதலிடம்
இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ரூ.16,65,381 கோடி சந்தை மதிப்புடன் இந்நிறுவனம் மதிப்புமிக்க நிறுவனமாக திகழ்கிறது. தடுப்பூசி தயாரிப்பின் மூலம் பரவலாக அறியப்பட்ட சீரம் இன்ஸ்டிடியூட் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் அதிக மதிப்பு மிக்க நிறுவனமாக திகழ்கிறது. ( மதிப்பு: ரூ. 1,83,400 கோடி).

கல்வி நுட்ப நிறுவனமான பைஜூஸ் வேகமாக வளரும் நிறுவனமாக விளங்குகிறது. யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,35,000 கோடியாகும்.
அதிக நிறுவனங்களை உருவாக்கிய தொழில் குழுமமாக டாடா குழுமம் விளங்குகிறது. இதன் முக்கிய அங்கமான டாடா கன்சல்டன்சிஸ் சர்வீசஸ் நிறுவனம், 5 லட்சம் பணியாளர்களுக்கு மேல் கொண்ட நிறுவனமாக அதிக ஊழியர்களை உள்ளடக்கிய நிறுவனமாக அமைகிறது. வருமான வரி செலுத்தும் பட்டியலிலும் இந்நிறுவனம் முதலில் திகழ்கிறது. ரூ.11.198 கோடி வருமான வரி செலுத்தியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் பெண் ஊழியர்களையும் அதிக அளவில் கொண்டுள்ளது. நிறுவனம் 1,78,357 பெண் ஊழியர்களைக் கொண்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களை கொண்டுள்ளது. விப்ரோ நிறுவனம் 72,000 பெண் ஊழியர்களைக் கொண்டுள்ளது.
வருமான வரி செலுத்துவதில் எச்டிஎப்சி வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளன. டாடா ஸ்டீல் 6வது இடம் பிடித்துள்ளது.
தமிழகம் முன்னிலை
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 500 நிறுவனங்கள் இந்தியாவின் 15 மாநிலங்களில் அமைந்துள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிரா 200 நிறுவனங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. 53 நிறுவனங்களுடன் கர்நாடாகா இரண்டாவது இடத்திலும் 44 நிறுவனங்களுடன் தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஹரியானா 4 வதுஇடத்திலும் குஜராத் 5 வது இடத்திலும் உள்ளது.
நகரங்களில் 167 நிறுவனங்களுடன் மும்பை முதலிடம் வகிக்கிறது. பெங்களூரு 52 நிறுவனங்களுடன் 2வது இடத்திலும், 38 நிறுவனங்களுடன் சென்னை மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பழையமான நிறுவனங்களில் மிகவும் பழையமான நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள ஃபோர்ப்ஸ் & கம்பெனி (Forbes & Company ) 1767 முதல் செயல்பட்டு வருகிறது. சென்னையைச் சேர்ந்த இ.ஐ.டி பார் நிறுவனமும் 1788 முதல் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 44 நிறுவனங்கள் 10 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் டைட்டன் கம்பெனி அதிக மதிப்புள்ள (2,18,404 கோடி) நிறுவனமாக இந்திய பட்டியலில் 17வது இடத்தில் உள்ளது. ராமசந்திரன் & கோ இரண்டாவது இடத்தில் உள்ளது. (67,500 கோடி மதிப்பு) அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. (59,498 கோடி மதிப்பு ).

சோழமண்டலம், அசோக் லேலண்ட், ஜோஹோ கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன.
சென்னை வளர்ச்சி
இந்தியாவில் கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறையில் இரண்டு இலக்க வளர்ச்சி ஏற்பட்டதற்கு சென்னை முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 44 மதிப்பு மிக்க நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் நிதித்துறையிலும் 7 நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையிலும் உள்ளன.
இந்திய அளவிலும் நிதித்துறையிலேயே அதிக அளவிலான நிறுவனங்கள் உள்ளன. 77 நிறுவனங்கள் இத்துறையில் உள்ளன. சுகாதாரத்துறையில் 64 நிறுவனங்கள் உள்ளன. ராசாயனத்துறையில் 42 நிறுவனங்களும் மென்பொருள் துறையில் 37 நிறுவனங்களும், நுகர்வோர் துறையில் 35 நிறுவனங்களும் உள்ளன.
வருவாய் ஈட்டுவதில் நிதித்துறை நிறுவனங்கள் முதலிடத்திலும் தொலைத்தொடர்பு இரண்டாவது இடத்திலும், ஆட்டோமொபைல் துறை மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பெண்களுக்கு இடம்
பெண்கள் இயக்குனர் குழுவில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் கோத்ரெஜ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதன் இயக்குனர் குழுவில் ஐந்து பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்திலும் ஐந்து பெண்கள் உள்ளனர். கோத்ரெஜ் அக்ரோவெட் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுமங்களிலும் 5 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
கோவிட்-19 தாக்கத்தை மீறி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் மொத்த மதிப்பு 68 சதவீதம் அதிகரித்துள்ளது. 461 நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில் 200 நிறுவனங்களின் மதிப்பு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. 20 நிறுவனங்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி அளவில் அதிகரித்துள்ளது.
தகவல் உதவி: ஹுருன் பட்டியல்