அம்பானி, அதானி, ஷிவ் நாடார்: 'ஹுரூன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 யார்?
இரண்டு இடங்கள் முன்னேறிய கவுதம் அதானி!
ஹுரூன் இந்தியா 2021ம் ஆண்டுக்கான ’இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை’ வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து 10வது ஆண்டாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். ரூ.7,18,000 கோடி மதிப்புடன் இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி குடும்பம் முதலிடம் பிடித்துள்ளது.
இதற்கடுத்து இரண்டாம் இடத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இடம்பெற்றுள்ளார். அதானி குடும்பத்தின் சகோதரர்கள் கவுதம் அதானி மற்றும் வினோத் அதானி இருவரும் ’இந்திய பணக்காரர்கள் பட்டியலில்’ டாப் 10ல் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் தடவை.
கவுதம் அதானி, கடந்த ஆண்டு இருந்த ரூ.1,40,200 கோடியில் இருந்து மும்மடங்கு அதிகரித்து இந்தாண்டு ரூ.5,05,900 மதிப்புடன் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் ஒரு நாளைக்கு ரூ.1,002 கோடி சம்பாதித்துள்ளார் கவுதம் அதானி. அவரின் சகோதரர் வினோத் அதானியும் தன்னுடைய சொத்து மதிப்பை மும்மடங்காக்கி ரூ.1,31,600 கோடி என்ற அளவில் கொண்டுளார். இதே பட்டியலில் வினோத் சாந்திலால் அதானி 8ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
பட்டியலின் மூன்றாவது இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த HCL டெக்னாலஜிஸ் தலைவர் ஷிவ் நாடார் இடம்பிடித்துள்ளார். ஹுரூன் இந்தியா அறிக்கையின் படி,
ஷிவ் நாடாரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,36,000 கோடி. 76 வயதான ஷிவ் நாடார் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 67% அதிகரித்துள்ளது இந்த மாற்றத்துக்கான காரணம்.
நான்காவது இடத்தில் லண்டனை தளமாகக் கொண்ட ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ்பி ஹிந்துஜா குழுமம் உள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த ஹிந்துஜா, இந்த ஆண்டு இரண்டு இடங்கள் பட்டியலில் சரிந்துள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு ரூ.2,20,000 கோடி என்று கூறப்பட்டுள்ளது.
ஐந்தாவது இடத்தில் பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டல் குடும்பம் இடம்பிடித்துள்ளது. கடந்த வருடத்தை விட சுமார் 8 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடம்பிடித்துள்ளார். காரணம்,
அவர்களின் சொத்து மதிப்பு கடந்த வருடம் சுமார் 187% அதிகரித்து ரூ.1,74,400 கோடியை தொட்டது. கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனாவல்லா கடந்த வருடத்தில் இருந்த 6வது இடத்தை தக்க வைத்துள்ளார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,63,000 கோடி.
இவர்களை போல, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனர் ராதாகிஷன் தமானி, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் சான் ஜோஸ் சார்ந்த ஜெய் சவுத்ரி ஆகியோர் பணக்கார இந்தியர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளனர்.
ராதாகிஷன் தமானி ரூ.1,54,300 சொத்து மதிப்புடன் 7ம் இடமும், குமார் மங்கலம் பிர்லா ரூ.1,22,200 சொத்து மதிப்புடன் 9ம் இடமும், ஜெய் சவுத்ரி ரூ.1,21,600 சொத்து மதிப்புடன் 10ம் இடமும் பிடித்துள்ளனர்.