மனைவியின் கடைசி ஆசை; 5கோடி ரூபாய் சொத்தை முதியோர் இல்லம் கட்ட கணவர் உயில்!
மருத்துவர் ராஜேந்திரா கன்வர், தனது மனைவி கிருஷ்ணா கன்வரின் கடைசி ஆசையின்படி 5 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு வீடு, நிலம், கார் ஆகிய சொத்துகளை முதியோர் இல்லம் அமைப்பதற்காக அரசாங்கத்திடம் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
சுயநலத்துடன் இருப்போர் மத்தியில் பொதுநலன் கருதி மற்றவர்களுக்காக உதவும் எத்தனையோ நல்லவர்கள் உலகின் அத்தனை இடங்களில் நிறைந்திருக்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ராஜேந்திரா கன்வர்.
மருத்துவரான இவர் 5 கோடி ரூபாய் மதிப்புடைய தனது சொத்தை முதியோர் இல்லம் அமைப்பதற்காக நன்கொடை செய்துள்ளார். ராஜேந்திரா தனது மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் இவ்வாறு நன்கொடை செய்திருக்கிறார்.
ராஜேந்திரா கன்வருக்கு 72 வயதாகிறது. மருத்துவராக பணியாற்றிய இவர், பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவரது மனைவி கிருஷ்ணா கன்வர். கல்வித் துறையில் வேலை பார்த்து வந்தார். இவரும் பணி ஓய்வு பெற்றுள்ளார். ஓராண்டிற்கு முன்பு கிருஷ்ணா உயிரிழந்துவிட்டார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கிருஷ்ணா கன்வர் தங்கள் சொத்து அனைத்தையும் அரசாங்கத்தின் பெயரில் எழுதி வைக்கவேண்டும் என முடிவு செய்துள்ளார்.
மனைவியின் ஆசை நிறைவேற்றம்
இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேந்திர தன்வர், தன் மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சொத்துகள் அனைத்தையும் அரசாங்கத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அசையும் சொத்து, அசையா சொத்து என இவரது மொத்த சொத்தின் மதிப்பு 5 கோடி ரூபாய்.
ராஜேந்திரா தனது உறவினர்களுடன் கலந்து பேசிவிட்டு மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். சொத்து முழுவதும் அரசாங்கத்தின் பெயரில் எழுதி வைத்துள்ள சம்பவம் மக்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆடம்பர வீடு மட்டுமல்லாது தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்திருக்கும் நிலம், கார் போன்றவை இவரது சொத்து பட்டியலில் அடங்கும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி இதற்கான உயில் எழுதப்பட்டுள்ளது.
விரைவில் முதியோர் இல்லம்
வயதான காலத்தில் தங்குவதற்கு இடம் இல்லாமல் பலர் சிரமப்படுகின்றனர். எத்தனையோ முதியவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். இப்படிப் பல காரணங்களால் முதியவர்கள் இருப்பிடம் இன்றித் தவிக்கின்றனர்.
எனவே, அரசாங்கத்திடம் தாங்கள் ஒப்படைத்துள்ள சொகுசு வீட்டை முதியோர் இல்லமாக மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதாக ராஜேந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ராஜேந்திரா தனது உயிலில் சொகுசு வீட்டை முதியோர் இல்லமாக மாற்றவேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாகக் குறிப்பிட்டுள்ளார். முதியோர்களிடம் மக்கள் அன்பு காட்டவேண்டும் என்று ஊடகங்கள் வாயிலாக ராஜேந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.
1974ம் ஆண்டு சிம்லா, ஸ்னோடென் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் முடித்த ராஜேந்திரா, 1977ம் ஆண்டு மருத்துவத் துறையில் சேவையளிக்கத் தொடங்கினார். இன்றும் தனது வீட்டில் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
டாக்டர் ராஜேந்திரா கன்வர், கிருஷ்ணா கன்வர் தம்பதி நன்கொடை வழங்கியுள்ள செய்தி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழில்: ஸ்ரீவித்யா