'வருமானம் இல்லாமல் சம்பளம் கொடுக்க முடியவில்லை' - மூடப்பட்ட பிரபல மும்பை ஸ்டார் ஹோட்டல்!
மறுஅறிவிப்பு வரும்வரை மூடல் என அறிவிப்பு!
மும்பையைச் சேர்ந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் ஹையாத் ரீஜென்சி. சஹார் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல் ஹையாத், ஆசிய ஹோட்டல் (வெஸ்ட்) லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த நிலையில், ஹோட்டல் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. அதில்,
"ஹையாத் ரீஜென்சி மும்பையின் உரிமையாளரான ஆசிய ஹோட்டல் (வெஸ்ட்) லிமிடெட் நிறுவனம் ஹோட்டல் வழக்கமான செயல்பாடுகளுக்கு நிதி ஆதரவு கொடுக்க முடியாததால் ஹோட்டலை மூடுகிறோம். அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை ஹோட்டல் மூடப்படும்," என்று தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஹையாத் ரீஜென்சி இந்திய நிர்வாக தலைவரான சுன்ஜே சர்மா உறுதிப்படுத்தினார்.
அவர் இது தொடர்பாக பேசுகையில்,
“ஹோட்டலின் செயல்பாடுகளைத் தக்கவைக்க ஹையாத் ரீஜென்சி மும்பையின் உரிமையாளரான ஆசிய ஹோட்டல் (வெஸ்ட்) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து எந்த நிதியும் வரவில்லை என்பதால், ஹையாத் ரீஜென்சி மும்பைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக அறிவிப்பு வரும் வரை ஹோட்டல் மூடப்படும்," என்றுள்ளார்.
இந்த திடீர் முடிவால் சஹார் விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல் ஹையாத் வாடிக்கையாளர்கள் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புக்கிங் தொடர்பாக பேசிய சுன்ஜே சர்மா,
“ஹையாதில், எங்கள் விருந்தினர்களும் சகாக்களும் முதன்மையானவர்கள், இந்த சூழ்நிலையை தீர்க்க ஹோட்டலின் உரிமையாளருடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படும்," என்றுள்ளார்.
ஹோட்டல் மூடுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் முன்னர் ஜூன் 7, 2021 அன்று, ஹையாத் ரீஜென்சி மும்பை ஹோட்டலின் அனைத்து வகையான ஊழியர்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், ஹயாத் ரீஜென்சி மும்பையின் உரிமையாளரான ஆசிய ஹோட்டல் (வெஸ்ட்) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து எந்த நிதியும் வரவில்லை என்றும் இதனால் ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்தவும், ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்ந்து நடத்தவும் முடியவில்லை. இதனால், இந்த மூடல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.
தொகுப்பு: மலையரசு