மூடப்படும் நிலையில் இருந்து மீண்டு, 5 நாட்களில் ரூ.2 கோடி வருமானம் ஈட்டிய தொழில் முனைவோர்!
பர்னீச்சர் வர்த்தகம் மூடப்படும் நிலையில் இருந்து பிளிப்கார்ட் விற்பனை மூலம் வளர்ச்சி பாதையை கண்டறிந்த ஐதராபாத் தொழில்முனைவோரின் வெற்றிக்கதை
ஐதராபாத்தைச்சேர்ந்த புஷ்பேந்திர கீர்திவார், தனது வர்த்தகத்தைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக ஃபிளிப்கார்ட்டில் விற்பனை செய்யத் தீர்மானித்தார். இந்த முடிவு திருப்பு முனையாக அமைந்தது. வருவாய் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்ந்ததோடு, ஆண்டு அடிப்படையில் 200 சதவீத வளர்ச்சி உண்டானது.
புஷ்பேந்திரா, ஷாப்பர்ஸ் ஸ்டாப், பிக்பஸார், @ஹோம், ஹவுஸ்புல் உள்ளிட்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். ஹவுஸ்புல் நிறுவனத்தில் பணியாற்றிய போது தான், தொழில்முனைவோராக தீர்மானித்து, தனது சகா நார்சி ரெட்டியிடம், நாம் சொந்தமாக ஃபர்னீச்சர் வர்த்தகத்தைத் துவக்க தடையாக இருப்பது எது எனக் கேட்டார்.
“இந்தக் கேள்வி மனதில் எழுந்த போது, என் பணி வாழ்க்கையின் பெரும் பகுதியை சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்காக பர்னீச்சர் வர்த்தகத்தை கையாண்டதில் செலவிட்டதை உணர்ந்தேன் மற்றும் இந்த வர்த்தகத்தை நடத்த தேவையானவற்றை அறிந்திருந்தேன். எனவே இந்த எண்ணத்தை செயல்படுத்தினேன்,” என்கிறார் புஷ்பேந்திரா.
சிக்கலான துவக்கம்
தனிப்பட்ட சேமிப்பு மற்றும் குடும்பத்திடன் கடன் வாங்கிய ரூ.18 லட்சம் தொகையை வைத்துக்கொண்டு அவரும், நண்பரும் 2017ல் ஐதராபாத்தில் பர்னீச்சர் ஷோரூமை துவக்கினர்.
“துவக்கத்தில் மறுவிற்பனையில் கவனம் செலுத்தினோம். உற்பத்திக்கு முதலீடு அதிகம் தேவை என்பதால் அதை நினைக்கவில்லை. ஆனால் இது தவறு என விரைவில் உணர்ந்தோம். விற்பனைக்கு தருவித்த பொருட்களின் தரம் சிறப்பாக இல்லை. எனவே வாடிக்கையாளர்கள் திருப்தி அடையவில்லை. அப்போது தான், இதற்காகக் கூடுதல் பணத்தை செலவிட வேண்டும் என்றாலும், நாங்களே சொந்தமாக பர்னீச்சர் தயாரிக்கத் தீர்மானித்தோம்.
இந்த முடிவு மேலும் இன்னல்களை உண்டாக்கியது. தரமான மூலப்பொருட்களை தருவிப்பது சிக்கலாக இருந்தது என்றால், பர்னீச்சர் வடிவமைப்பை புரிந்து கொண்டு அவற்றை உருவாக்கி தரக்கூடிய திறமையானவர்களை தேடுவதும் கஷ்டமாக இருந்தது. மூலபொருட்களின் விலை தெரியாமல் நிறைய பணத்தை செலவு செய்து பாடம் கற்றுக்கொண்டோம் என்கிறார் புஷ்பேந்திரா.
எல்லாம் சரியாக அமைந்த போது, வர்த்தகம் பிக்கப் ஆகவில்லை. சப்ளையர்களுடனான கடன் பரிவர்த்தனை மூன்று மாதங்கள் வரை நீண்டது, சந்தையை அணுகுவது மேலும் சிக்கலானது. வர்த்தகம் மோசமாக அமைந்தது. முதலாண்டு வர்த்தகம் மறக்க கூடியதாகவே இருந்தது.
“இந்த கட்டத்தில் வீட்டை அடமானம் வைத்திருந்தேன். வர்த்தகத்தைத் தொடர மனைவியின் நகைகளை அடகு வைத்தேன். நஷ்டம் காரணமாக வர்த்தகத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்”.
திருப்பு முனை தந்த முடிவு
இந்த கட்டத்தில் தான், கடைசி முயற்சியாக இ-காமர்சை முயற்சிக்கத் தீர்மானித்தார்.
“வர்த்தகத்தை தொடர்வதற்கான வழியாக இதைக் கருதினேன். வாடகை போன்ற செலவு இல்லாமல் வர்த்தகத்தை இவ்விதம் தொடர முடியும் என நினைத்தேன்,” என்கிறார்.
புஷ்பேந்திரா 2017ல் ஃபிளிப்கார்ட் விற்பனையில் இணைந்தார். இந்த முடிவு திருப்பு முனையாக அமையக்கூடும் என அவர் நினைக்கவில்லை.
முதல் இரண்டு மாதங்களிலேயே வருவாய் உயர்ந்தது. அவரது ஹோம்புல் நிறுவன வருவாய் 2 லட்சத்தில் இருந்து 9 லட்சமாக உயர்ந்தது.
“வர்த்தகத்தில் இந்த முறைக்கு மாற்றிக்கொள்ளலாம் என முடிவு செய்தாலும், இன்னும் அவநம்பிக்கை இருந்தது. ஆன்லைன் வர்த்தகம் சவாலானது என நினைத்தோம். ஆனால் ஃபிளிப்கார்ட் எங்களின் பயணத்தை எளிதாக்கியது. எங்கள் வேர்ஹவுசுக்கு வருகை தந்து, பொருட்களை புகைப்படம் எடுத்து, கேடலாக தயாரிப்பது, பிளக்சிகடன் அளிப்பது என பிளிப்கார்ட் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் உதவியது” என்கிறார்.
வாடிக்கையாளர் பதில் கருத்துகளும் நிறுவனத்திற்கு மிகவும் உதவியாக அமைந்தது.
“தினசரி பர்னீச்சர்களில் வழக்கத்திற்கு மாறான வடிவமைப்புகளைக் கொண்டுவர இது ஊக்கம் அளித்தது. எங்கள் வடிவமைப்பு மற்றும் தரம் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன,” என்கிறார் அவர்.
இதன் பயனாக ஹோம்புல் நிறுவனம், ஆண்டு அடிப்படையில் 200 சதவீத வளர்ச்சி கண்டது.
“பல வகையான வார்ட்ரோப்கள், ஷூ ரேக், கிச்சன் அலமாரிகள், மாடுலர் கிச்சன் ஆகியவற்றை வழங்கினோம். மேலும், மேஜைகள், புத்தக அலமாரி, டிவி மேஜை என 17 புதிய பொருட்களை அறிமுகம் செய்தோம். டிவி மேஜைகள் தான் அதிகம் விற்றன. மாதம் 600 யூனிட்களி விற்கிறோம்,” என்கிறார் புஷ்பேந்திரா.
நிறுவனம் தற்போது மேலும் விரிவாக்கத்திற்கு திட்டமிட்டுள்ளது. பல வர்த்தகங்கள் போலவே இந்நிறுவனமும் ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை மூலம் அதிக வளர்ச்சி கண்டுள்ளது.
“பிக் பில்லியன் டே விற்பனையின் போது விற்பனை உச்சம் தொடுகிறது. வருவாய் பலடங்கு உயர்கிறது. 2018ல் ரூ.85 லட்சம் வருவாய் கிடைத்தது. 2019ல் ஐந்து நாள் விற்பனையில் மட்டும் ரூ.2 கோடி வருவாய் கிடைத்தது.”
ஆன்லைன் விற்பனைக்காக வர்த்தகத்தில் அவர் பெரிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை. சிறிய மாற்றங்களை தான் செய்ய வேண்டியிருந்தது என்கிறார் புஷ்பேந்திரா.
எதிர்கால இலக்கு
ஆர்டர்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹோம்புல் நிறுவனம் 8000 சதுர அடி ஆலையை அமைத்து, 9,000 சதுர அடி வேர்ஹவுசை அமைத்துள்ளது. அதிகரிக்கும் தேவையை கருத்தில் கொண்டு 20,000 சதுர அடி வேர்ஹவுசை அமைத்து வருகின்றனர்.
அன்மையில், ரூ.13 கோடி மதிப்பிலான கருவிகளையும் அறிமுகம் செய்துள்ளனர். ஏழு ஊழியர்களுடன் துவங்கிய நிறுவனம் தற்போது 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் வளர்ந்து வருகிறது. ஐதராபாத்தில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கிறது.
“கடந்த 2 ஆண்டுகளில் நிறைய சாதனைகளை செய்திருக்கிறோம். ஃபிளிப்கார்ட்டில் விற்கத் தீர்மானித்ததே இதற்குக் காரணம். வர்த்தகத்தில் தாக்குப்பிடிக்க இந்த முடிவு எடுத்தோம். இப்போது மாதம் ரூ.1 கோடி விற்பனையை தொட இருக்கிறொம்,” என்கிறார் புஷ்பேந்திரா.
புஷ்பேந்திரா தனது சொந்த கனவுகளையும் நிறைவேற்றியுள்ளார்.
“என் மனைவி தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறார். சோதனையான காலத்தில் அவரது நகைகளை விற்க வேண்டியிருந்தது. அதை திரும்பி வாங்கித்தர முடியுமா எனத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இன்று அவர் இழந்ததை விட அதிகம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இது என்னை மகிழ்ச்சியாக்குகிறது. பல ஆண்டுகளாக நிறைவேறாத கனவான சொந்த காரும் சாத்தியாகியுள்ளது,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து எம்வி | தமிழில்: சைபர் சிம்மன்