மறைந்த காதல் கணவர் 'கட் அவுட்' உடன் வளைகாப்பு நடத்திய அன்பு மனைவி!
தன் வளைகாப்பில் மறைந்த காதல் கணவர் உடன் இருக்க, ஆள் உயரத்திற்கு தத்ரூபமாக கட் அவுட் வைத்துக் கொண்டு வளைகாப்பை நடத்தி முடித்துள்ளார் மேக்னா.
பிரபல கன்னட நடிகர் சுந்தர் ராஜ், 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் அறிமுகமான நடிகை பிரமிளா ஜோஷி தம்பதியினரின் ஒரே மகள் மேக்னா ராஜ். நடிகையான இவரும் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
அட்டகாரா என்கிற படத்தில் இணைந்து நடித்த போது, அந்த படத்தில் ஹீரோவாக நடித்த, நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவும், மேக்னாவும் காதலிக்கத் தொடங்கினர். சார்ஜா கன்னட திரையுலகில் பிரபல நடிகரும், நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும் ஆவார். தொடர்ந்து அவர்கள் இணைந்து நடித்த படங்கள் வெற்றிப்படங்களானது. இதனால் ரீல் ஜோடி ரியல் ஜோடியாக வேண்டும் என ரசிகர்களும் ஆசைப்பட்டனர்.
அதன்படியே, பத்து ஆண்டுகால காதலுக்குப் பின்னர் கடந்த 2018ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேக்னா ராஜின் குடும்ப வழக்கப்படி கிறிஸ்துவ முறையிலும், சார்ஜாவின் குடும்ப முறைப்படி இந்து முறையிலும் அவர்களது திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தனர். எனவே, திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் மேக்னா கர்ப்பமானார். தங்களது முதல் குழந்தையைக் காண இருவரும் ஆசையாக இருந்த போது, திடீரென அவர்கள் வாழ்வில் விதி விளையாடியது.
கடந்த ஜூன் மாதம் திடீரென மாரடைப்பால் காலமானார் சார்ஜா. 39 வயதில் சார்ஜாவின் மரணம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இறுதி ஊர்வலத்தில் கர்ப்பிணியான மேக்னா கதறி அழுதது, கணவரின் முகத்தில் முத்தமிட்டது கல்லையும் கரைக்கும் வகையில் உருக்கமாக இருந்தது.
ஆனால் சார்ஜா உயிரிழந்த ஒரு சில தினங்களிலேயே தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவும், மறைந்த கணவருக்காகவும் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சித்தார் மேக்னா.
இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
“நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அது நம் குழந்தை. குழந்தையின் வடிவில், உங்களை இந்தப் பூமிக்கு மீண்டும் அழைத்து வரும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்...' என்று உருக்கமாகக் கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக சார்ஜா மறைந்து ஒரு மாதம் ஆனதையொட்டி குடும்பத்தினர் பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் சார்ஜாவின் பெரிய போட்டோவுக்கு கீழே குடும்பத்தினர் சிரித்தபடி அமர்ந்து இருந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
இந்தப் புகைப்படங்களை வெளியிட்டு மேக்னா கூறுகையில்,
“அன்பான சிரு, நீங்கள் இருந்தவரை வாழ்க்கைக் கொண்டாட்டமாக இருந்தது. இனியும் அப்படித்தான் இருக்கும். சோகமாக இருப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். என் சிரிப்புக்கு எப்போதும் நீங்கள்தான் காரணம். நீங்கள் கொடுத்த விலைமதிக்க முடியாத பரிசு, நம் குடும்பம். அது என்றும் நிலைத்திருக்கும். நீங்கள் விரும்பிய படியே, அன்பு, சிரிப்பு, குறும்பு, மிக முக்கியமாகப் பாசப்பிணைப்புடன் நகர்கிறது, ஒவ்வொரு நாளும். வி லவ் யு பேபி மா!” எனக் எழுதி இருந்தார்.
இந்நிலையில், மேக்னாவுக்கு தற்போது வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. ‘கணவர் இல்லாததால் எதற்கு வளைகாப்பு' என மேக்னா முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தன் கணவருக்கும் அந்த விருப்பம் இருந்தது என்பதால், அவரது விருப்பத்தை நிறைவேற்ற வளைகாப்பிற்கு அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் மேக்னா ராஜின் வளைகாப்பு நடந்தது.
தன் வளைகாப்பில் தன் காதல் கணவர் சார்ஜாவும் உடனிருக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் மேக்னா. எனவே, சார்ஜாவின் உயரத்திற்கு கச்சிதமாக, தத்ரூபமாக கட் அவுட் ஒன்றிற்கு ஆர்டர் கொடுத்தார். அந்த கணவரின் கட் அவுட்டை தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு வளைகாப்பை நடத்தி முடித்துள்ளார் மேக்னா.
சிரித்த முகத்துடன் சார்ஜாவின் அந்த கட் அவுட்டை பார்த்து வளைகாப்பு விழாவிற்கு வந்தவர்கள் அசந்து போயினர். மேக்னா மற்றும் சார்ஜா குடும்பத்தினர் அந்தக் கட் அவுட்டையே சார்ஜாவாகக் கருதி, அதன் அருகில் நின்றபடி குடும்பப் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இணையத்தில் வைரலான அந்தப் புகைப்படங்கள் பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருக்கின்றன.
தனது சமூகவலைதளப் பக்கத்தில் வளைகாப்பு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள மேக்னா,
“இதற்குதானே சிரு (சிரஞ்சீவி சர்ஜா) நீ ஆசைப்பட்டாய். அதன்படியே சிரித்துக் கொண்டு இருக்கிறேன். உன் காதலுடன் என்றும் உன்னோடு இருப்பேன்...' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
விரைவில் தன் குழந்தையின் உருவில் கணவர் சார்ஜாவைப் பார்க்க ஆவலாக இருக்கிறார் மேக்னா. சார்ஜாவின் ஆசைப்படியே எப்போதும் மேக்னா சிரித்தபடியே இருக்க வேண்டும் என்பது தான் அவரது ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது. இதனை அவரது சமூகவலைதளப் பக்கங்களிலும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேக்னா தனது வளைகாப்பில் தனது கணவரை எந்தளவுக்கு மிஸ் செய்திருப்பார் என்பதை அவரது இந்த கட் அவுட் யோசனையே காட்டுகிறது. அதனால் தான் மேக்னாவை மேலும் மகிழ்ச்சியாக்கும் வகையில், பிரபல ஓவியரும், கிராபிக் டிசைனருமான கரண் ஆச்சார்யாவிடம் ரசிகர் ஒருவர், மேக்னா ராஜின் வளைகாப்பில் சார்ஜா இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்து தருமாறு கேட்டிருந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று தனது கைவண்ணத்தை காட்டிய கரண் ஆச்சார்யா, கர்ப்பிணி மனைவியை சார்ஜா கைதாங்கலாக கூட்டிச் செல்வது போல் தத்ரூபமாக எடிட் செய்து அசத்தி உள்ளார். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.