உயரத்தை அடைய ‘உயரம்’ ஒரு தடையல்ல - ஐஏஎஸ் ஆர்த்தி டோக்ரா’வின் கதை!
3 அடி 2 இன்ச் உயரம் மட்டுமே இருக்கும் ஆர்த்தி, ஐஏஎஸ் ஆகி பல முக்கியப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
உயர்ந்த இலக்கு நிர்ணயித்து அதை நோக்கி அடியெடுத்து வைக்கும் சிலர் ஒரு கட்டத்தில் முயற்சியைக் கைவிடுவதுண்டு. அதற்கு ஒவ்வொருவரும் ஒரு வகையான காரணங்களை சுட்டிக்காட்டி நொந்துகொள்வார்கள். இது ஒருபுறம் இருக்க வாழ்க்கையில் சாதனை படைக்கவேண்டும் என்ற தீவிர வெறி கொண்ட பலருக்கு எந்த விதமான எதிர்மறையான சூழலும் தடையாக இருப்பதில்லை. இதற்கு பல உதாரணங்கள் உண்டு.
அவ்வாறு அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்பவர் ஐஏஎஸ் அதிகாரி ஆர்த்தி டோக்ரா. இவர் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
உத்தர்காண்ட் மாநிலத்தின் டேராடூனில் பிறந்தவர் ஆர்த்தி. இவரது உயரம் 3 அடி 2 இன்ச் மட்டுமே. இதனால் சிறு வயதில் பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ளார். இவர் பிறந்தபோது மருத்துவர்கள் இவரது குறைபாடு காரணமாக வழக்கமான பள்ளிப்படிப்பை மேற்கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆர்த்தி அதனை முறியடிக்கும் வகையில் டேராடூனில் உள்ள பிரபல வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் படித்தார். டெல்லி லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பொருளாதாரப் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார்.
ஆர்த்தியின் அப்பா ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது அம்மா பள்ளி முதல்வராக இருந்துள்ளார். படிப்பில் கெட்டிக்காரியான ஆர்த்தி, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் அதிகாரி ஆனார். பல முக்கியப் பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியுள்ளார் இவர்.
ஜோத்பூர் மாவட்ட ஆட்சியராக சிறப்பாக செயல்பட்ட ஆர்த்தி, தற்போது அஜ்மீர் மாவட்டத்தின் கலெக்டராக உள்ளார். இவர் பல்வேறு முக்கியப் பதவிகள் வகித்தவர்.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலின்போது அஜ்மீரில் மாவட்ட தேர்தல் ஆணையராக சிறப்பாக பணியாற்றியதற்காக 2019-ம் ஆண்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோரிடம் தேசிய விருது பெற்றார் ஆர்த்தி.
ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி, தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில் வாக்களிக்க ஊக்குவித்தார். மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடிகளுக்கு செல்ல உதவும் வகையில் வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் குறைந்தபட்சமாக இரண்டு சக்கர நாற்காலிகள் என்ற வீதத்தில் 874 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்தார்.
கிட்டத்தட்ட 17,000 மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பதற்கு இவரது ஏற்பாடுகளே முக்கியக் காரணம், என பலரால் பாராட்டப்பட்டார்.
தகவல் உதவி: Newsd