உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி தலித் பெண்!
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட சரண்யா, பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்களை வீழ்த்தி வார்டு உறுப்பினராகி இருக்கிறார்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தலித் பெண்மணியான சரண்யா குமாரி, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். இம்மாத துவக்கத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில், 22 வயதான சரண்யா குமாரி, கோவையின் ஆனமலை ஒன்றியம் கீழ் வரும் ஆத்துப்பொள்ளாச்சி பஞ்சாயத்தின் வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மூன்று வயதாக இருக்கும் போது ஏற்பட்ட காய்ச்சலின் தாக்கம் காரணமாக, சரண்யாவின் கால்களை அசைக்க முடியாமல் போனது. இதன் காரணமாக துணை இல்லாமல் நடக்க முடியாத நிலை இருந்தாலும், தொடர் பயிற்சியால் அவர் தானே தனியே நடக்க பழகியிருக்கிறார்.
தேர்தலின் போது அவர் ஏழு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பல மணி நேரம் நடந்து வாக்கு சேகரித்தார். இந்த கடின உழைப்பின் பயனாக அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினம் தான் அவரது பிறந்த தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது வார்டில் போட்டியிட்ட ஒரே சுயேட்ச்சை வேட்பாளரான சரண்யா, மொத்தம் உள்ள 470 வாக்குகளில் 137 வாக்குகள் பெற்று 37 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
"என் வார்டில் உள்ள ஒரு பகுதியில் 40 வீடுகளில் குடிநீர் வசதி இல்லை. பொது கழிப்பிடங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. பெரும்பாலான தெருவிளக்குகள் எரியவில்லை. என் வீடு எதிரே உள்ள இடத்திலேயே சாக்கடை தேங்கி, கொசு உற்பத்தியாகிறது. இவற்றை ஒவ்வொன்றாக கவனிப்பேன்,” என்று சரண்யா கூறியதாக செய்தி தளம் தெரிவிக்கிறது.
சரண்யா கடந்த 3 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவர் கலெக்டர் குறை தீர்ப்பு கூட்டங்களில் தனது பகுதி சார்பில் பங்கேற்று வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடம் சொல்லித் திருகிறார். ரோட்டரி சங்க உறுப்பினர்களுடன் இணைந்து, குடிகாரர்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ் நிலையத்தை பழுது பார்த்துள்ளார்.
இந்த வெற்றி தன் சமூகத்திற்கானது மட்டும் அல்ல, தனிப்பட்ட வெற்றியும் என்று அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக நான்கு ஆண்டுகளாக பிரிந்திருந்த தனது பெற்றோர் ஒன்றாக சேர்ந்ததாகவும் அவர் கூறுகிறார்.
உடுமலைப்பேட்டை அரசுக் கல்லூரியில் தமிழில் முதுகலை முதலாமாண்டு படித்து வரும் சரண்யா, தமிழ் ஆசிரியையாக பணியாற்ற வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார். அரசியல் போலவே, கல்வியும் முக்கியம் என்கிறார்.