விளையாடும் போது ஏற்படும் காயங்களை உடனே கண்டறியும் கையடக்க ஸ்கேன் மெஷின் - ஐஐடி மெட்ராஸ் கண்டுபிடிப்பு!
ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள், விளையாட்டில் ஏற்படக்கூடிய காயங்களைக் கண்டறிதல் மற்றும் மேலாண்மைக்கான கையடக்க ‘பாயிண்ட் ஆஃப் கேர் அல்ட்ராசவுண்ட்’ (POCUS) ஸ்கேனரை உருவாக்கியுள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள், விளையாட்டில் ஏற்படக்கூடிய காயங்களைக் கண்டறிதல் மற்றும் மேலாண்மைக்கான கையடக்க ‘பாயிண்ட் ஆஃப் கேர் அல்ட்ராசவுண்ட்’ (POCUS) ஸ்கேனரை உருவாக்கியுள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ்-ன் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையத்தின் (Center of Excellence in Sports Science and Analytics - CESSA) இந்த ஆராய்ச்சியின் மூலம் காயங்களை ஆடுகளத்தில் கண்டறியவும், காயமடைந்த விளையாட்டு வீர்ர்களை தொடர்ந்து விளையாட அனுமதிக்கலாமா என்பதை அறிவதற்காக காயத்தின் அளவை உடனடியாக மதிப்பீடு செய்யவும் முடியும்.
செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இந்த ‘POCUS’ ஸ்கேனரில் விளையாட்டு மருத்துவம் தொடர்பாக பரந்த அளவிலான பயன்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மற்ற நடைமுறைகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு நன்மைகளையும் (கதிர்வீச்சு கிடையாது), போதிய தெளிவுத்திறனையும் கொண்டுள்ளது.
‘பயோமெடிக்கல் அல்ட்ராசவுண்ட் இமேஜிங் லேபி’ல் (BUSi) உருவாக்கப்பட்ட தசைக்கூட்டு (MSK) இமேஜிங்கிற்கான ‘POCUS’ முன்மாதிரி தற்போது தயார்நிலையில் உள்ளது. 2024-ம் ஆண்டிற்குள் இந்த தயாரிப்பு முன்மாதிரியை நிறைவுசெய்வது என ஆராய்ச்சியாளர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து ஆடுகளத்தில் இருந்து பரிசோதித்தல் மற்றும் சோதனையின் தரவுகளை சேகரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
“தற்போது தொழில்நுட்ப இடைவெளி இருப்பதை உணர்ந்தோம். அதேபோன்று, முன்னணி விளையாட்டு வீரர்கள் காயத்தின் மேலாண்மைக்கும் மறுவாழ்வுக்கும் வழக்கமான பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் வளாகத்திற்குள் ஒரு சாதனம் அவசியம் என்பதையும் கவனித்தோம். தசைக்கூட்டுக்கான மதிப்பீட்டை ஆடுகளத்திலேயே விரைந்து மேற்கொள்வதன் மூலம், விளையாட்டு வீரர்களை உடனடியாக கவனிக்கவும், காயங்களில் இருந்து மீண்டுவர கவனம் செலுத்தவும் முடியும்,” என்று இந்த சாதனத்தை உருவாக்கி குழுவை வழிநடத்திய ஐஐடி மெட்ராஸ் அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் உயிரிமருத்துவப் பொறியியல் துறை பேராசிரியர் அருண் கே.திட்டாய் கூறினார்.
“அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால வளர்ச்சியை மருத்துவமனை அமைப்புகளைத் தாண்டி விளையாட்டு மருத்துவத்தில் பயன்படுத்துவதை இத்தீர்வு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. போகஸ் (POCUS) மதிப்பீட்டின் உள்ளீடுகள் முழுமையான தடகள மேலாண்மை அமைப்பிற்கான மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவுத் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படும்,” என்று மேலும் கூறினார்.
“உள்நாட்டுத் தயாரிப்பில் கவனம் செலுத்தும் வகையில் முழு முயற்சியோடு இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்,” என்று ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா தலைமைச் செயல் அலுவலர் ரமேஷ்குமார் கூறினார்.
பயன்பாடு
விளையாட்டு மருத்துவம் என்பது, ஆடுகளத்தில் விளையாடும்போது ஏற்படும் காயங்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் நுட்பமாக கவனம் செலுத்தும் நிபுணத்துவம் ஆகும். பொதுவாக விளையாட்டு வீரர் ஒருவர், "நோயாளியாக" வரும்போது பெரும்பாலான இமேஜிங் ஆய்வுகள் மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
நோயாளிகளாக வரக்கூடிய விளையாட்டு வீரர்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அண்மைக்காலத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது, மருத்துவ சாதனங்கள்/ தொழில்நுட்பங்களை அணுகுவதில் மிகப்பெரிய இடைவெளி இருந்து வரும் சூழலில், வழக்கமான பயிற்சிகளின்போது இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.
இதுபோன்ற அணுகுமுறையின் மூலம் விளையாட்டு வீரர்களைப் பராமரிப்பதில் முன்உதாரணமாகத் திகழக்கூடிய வகையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், சான்று அடிப்படையிலான பயிற்சிகளை மேற்கொள்ளவும், காயம் ஏற்படாமல் தடுக்கவும் உதவும்..
ஐஐடி மெட்ராஸில் உள்ள இந்த ஆய்வகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு அரசு அமைப்புகளின் பல்வேறு ஆராய்ச்சி மானியங்கள் மூலம் தொடர்ந்து நிதியுதவியை வழங்கி வருகின்றன. ஐஐடி மெட்ராஸ்-ன் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையத்தின் (CESSA) மூலம் பாயிண்ட் ஆஃப் கேர் அல்ட்ராசவுண்ட் (POCUS) ஸ்கேனருக்காக ஆராய்ச்சிக் குழுவினருக்கு தற்போது நிதியளிக்கப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan